* நமது சிறப்புச் செய்தியாளர்
சமூகநீதிக் கோட்பாட்டிற்கு விரோதமான கிரிமி லேயர் முறையைக் கைவிடவேண்டும் எனவும், மோடி அரசின் சமூகநீதி விரோத போக்கிற்கு எதிராகவும் இணைய வழி கண்டனக் கூட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 10.7.2020 மாலை 7 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல் வன் வரவேற்புரை வழங்கிட, பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தொடக்கவுரை நிகழ்த்தினார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் சொன்னதுபோல, இக்கால கட்டத்திற்குத் தேவையான அவசியமான நிகழ்ச்சி இது என்பதில் அய்யமில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மிகச் சரி யாகவே சொன்னார். மத்திய அரசு கிரிமிலேயருக்குள் கொண்டுவரும் மாத வருமானம், விவசாய வரு மானம் என்ற முடிவு நேரடியாக தாழ்த்தப்பட்டவர் களையும், பழங்குடி மக்களையும் தாக்கவில்லை. நேரிடையாகத் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவோர் யார்? இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்தானே. 1257 ஜாதியினர் நேரடியாகப் பாதிக்கப்பட போகிறார்கள்.
பி.ஜே.பி.யிலும், ஆர்.எஸ்.எஸிலும் இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களே, நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
உங்களை நேரிடையாகவே பாதிக்கக் கூடிய ஒன்றை மத்திய பிஜேபி ஆட்சி கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறதே- அந்தக் கட்சியில் நீங்கள் தொடர்வது சரியாக இருக்க முடியுமா?
பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டுக் காகப் பாடுபடும் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பா.ம.க.வால் பிற்படுத்தப்பட்டவர்களை கிரிமிலேயர் என்ற பேராலே நேரிடையாகப் பாதிப்புக்கு உட் படுத்தும் பா.ஜ.க.வோடு கூட்டுசேர்ந்து எப்படி அரசியல் நடத்த முடிகிறது?
மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்திய தற்காக சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க.வுடன் பா.ம.க.வால் எப்படி கைகோர்க்க முடிகிறது!
பி.ஜே.பி. கட்சியைப் பின்புலத்திலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற உயர்ஜாதி ஆளுமை, பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும், பிற் படுத்தப்பட்டவர்களைக் கொண்டே பிற்படுத்தப் பட்ட வர்களுக்கான சமூகநீதியில் கைவைக்கிறதே - நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் பார்ப்பனீய வேலையைச் செய்யவில்லையா?
தொடக்கம் முதலே இந்தக் கிரிமிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் குறிப்பிட்ட எழுச்சித் தமிழர், தேர்தல் அரசியலில் கட்சி ஈடுபடுவதற்கு முன்பே அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கையின் அடிப்படையில் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்து வருகிறோம் என்றும் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.
எழுச்சித் தமிழர் தன் உரையைத் தொடங்கும் போதே - தந்தை பெரியாரின் கொள்கை வாரிசாக நின்று சமூகநீதிக்காக நீண்ட காலம் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இறுதியாக நிறைவுரை ஆற்ற இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் உரை
எழுச்சித் தமிழர் உரைக்குப்பின் நிறைவுரை ஆற்றிய திராவிடர் கழகத் தலைவர் தனது உரையில் முத்தாய்ப்பாக எடுத்துக் கூறியவை:
தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்ட வர்களையும் மோதவிட்டுப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நாங்கள் இரையாக மாட்டோம் என்ற முறையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், அதன் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும் முதற்கட்டமாக திராவிடர் கழகத் தலைவர் தன் பாராட்டினைத் தெரிவித்தார்.
பொருளாதார அளவுகோலை ஏன் பார்ப்பனர் கள் திணிக்கிறார்கள் என்பதற்குத் தந்தை பெரியார் சொன்ன காரணத்தை திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.
பிச்சை - தானம் வாங்கிப் பிழைப்பதுதானே பார்ப்பனர்களுக்கானது - எனவே பொருளாதார அளவுகோல் அவர்களுக்கு வசதியானது என்றார்.
மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்தி விடக் கூடாது என்று திட்டமிட்டவர்கள் அதில் தோல்வி கண்ட நிலையில், சமூகநீதியின் நோக் கத்தை முடியடிக்கும் வகையில் திணிக்கப்பட்டது தான் இந்தக் கிரிமிலேயர் என்று சொன்ன தமிழர் தலைவர் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் பொருளாதார அளவுகோலோ, இடஒதுக்கீடு இத்தனை சதவீதம்தான் அளிக்கப்பட வேண்டும் என்று வரையறையையோ செய்திருக் கிறதா என்ற வினாவை எழுப்பினார்.
முதல் சட்டத் திருத்தத்தின்போதே பொருளாதார அளவுகோல் நிராகரிக்கப்பட்டதையும், பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை - பொருளாதாரம் என்ற அளவுகோல் நிரந்தரமானதல்ல - அது எலாஸ்டிக் தன்மை கொண்டது என்பது மட்டுமல்ல. இட ஒதுக்கீடு என்பது கல்வியிலும், சமூக ரீதியிலும் உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கானது என்பதிலே உறுதியாக இருந்ததையும் திராவிடர் கழகத் தலைவர் நினைவூட்டினார்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிர்ண யிக்கப்பட்ட ஆண்டு வருவாய் 9000 ரூபாய் என்ற ஆணை தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராக ரிக்கப்பட்டதையும் கழகத் தலைவர் குறிப்பிட்டார். (தேர்தலில் தோற்று அறியாத எம்.ஜி.ஆர். இட ஒதுக் கீட்டில் திணித்த பொருளாதார அளவுகோல் ஆணையின் காரணமாக 1980 ஜனவரியில் நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியுற்றார் என்பது இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கதாகும்)
பி.வி. நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்த போது - உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக் கும் ஆணை நிறைவேற்றப்பட்டதை உச்ச நீதிமன்றம் சட்டப்படி தவறானது என்று தள்ளுபடி செய்ததையும் திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 15(4),16(4), 340 பிரிவு களில் இடம் பெற்றிருப்பது-சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்பதே என்ற சட்ட நிலை யையும் எடுத்துக் கூறினார்.
கரோனா சமூகத் தொற்று என்றால் கிரிமிலேயர் என்பது சமூக நீதியைத் தொற்றி அழிக்கும் கிருமி என்றும் கூறினார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரிமிலேயர் தேவை என்பது உயர்ஜாதியினரின் நோக்கமாக இருந்திருப்பதையும் நினைவூட்டத் தவறவில்லை.
ஒருவீதியில் முதல் வீட்டில் தீப்பற்றிக் கொண் டால் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவ எவ்வளவு நேரம் பிடிக்கும்? இதில் நாம் ஒன்றுபட்டு நிற்பது அவசியம் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள்,
மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங் களையும் தொடர்ந்து நடத்தியதோடு, ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள் அவற்றில் ஆர்வமுடன் பங்கு கொண்டதையும், நாடாளுமன்றத்தில் மண்டல் குழு தொடர்பான சட்ட முன்வரைவு விவாதத்தைத் துவக்கி வைத்து சிறப்பாக உரையாற்றியவரும் அவரே; அதேபோல நமது எழுச்சித் தமிழர் அவர்கள் இந்த சமூகநீதியில் ஒன்றிணைந்து போராட முன் வந்திருப்பது பாராட்டத்தக்கது என்றார்.
தோழர் இரா. முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
இந்தியாவிலேயே சமூகநீதி என்று வரும்போது தமிழ் நாடுதான் முதல் குரல் கொடுக்கிறது -முன் வரிசையில் நிற்கிறது காரணம். தந்தை பெரியார் அவர்கள் இதற்காகத் தொடர்ந்து போராடியவர் மக்களைப் பக்குவப்படுத்தியவர்.
இடஒதுக்கீட்டை நாம் கோருவது சலுகையல்ல- உரிமை என்று கூறிய தோழர் முத்தரசன் - இட ஒதுக் கீட்டில் பொருளாதார அளவுகோலைப் புகுத்துவது பொருத்தமற்றது. மேலும் விவசாய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வது சரியானதல்ல, விவசாயத்தில் நிரந்தர வருமானம் கிடையாது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும் என்றார்.
இன்றைக்கு மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி - ஆட்சி என்பது உயர்ஜாதியினரின் நலனில் அக்கறை கொண்டது. இடஒதுக்கீட்டுக்கு எதிரானது. மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தியதற்காக வி.பி.சிங்கின் நல்லாட்சியைக் கவிழ்த்தது இந்தப் பாரதிய ஜனதாதான் என்றும் கூறினார்.
தொடக்கவுரையாற்றிய இரவிக்குமார் எம்.பி. கிரிமிலேயர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இப்பொழுது இல்லை என்றாலும் உச்சநீதிமன்றத்தில் இதற்குமுன் இரண்டு முறை தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிரிமி லேயர் கொண்டு வர வேண்டும் என்று சொன்னதை நினைவுபடுத்தினார்.
No comments:
Post a Comment