நெய்வேலி விபத்து : உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 2, 2020

நெய்வேலி விபத்து : உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குக!

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்


சென்னை, ஜூலை2, அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் பணியாளர் கூட்டமைப்பின் சார்பில் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 5-ஆவது யூனிட்டில் இருக்கும் பாய்லர் நேற்று 1.7.2020 வெடித்ததில், ஆறு ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்திருக்கின்ற னர். 17 தொழிலாளர்களுக்கு மேல் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் அனைவரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. உயிரிழந்த ஒப்பந்தத் தொழி லாளர்களின் குடும்பங்களுக்கு, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்களின் கூட்டமைப் பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அடுத்தடுத்து,  நெய்வேலி நிலக்கரி நிறுவன அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து, தொழிலாளர்கள் இறப்பது தொடர்கதையாக ஆகிவருகிறது. இரு மாதங்களுக்கு முன்னர் பாய்லர் வெடித்துச் சிதறி ஏழு தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அந்த  விபத்துக்கான காரணம் குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டு, ஆறு தொழிலாளர்கள் இறந்துள்ளனர். சென்ற ஆண்டும் இதே போன்று விபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்துள்ளார்.


விபத்துக்குள்ளான அனல்மின் நிலையம் 30 ஆண்டுகள் பழமையானது என்பது முக்கியமான காரணங்களில் ஒன்று; வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படும் பழுது பார்க்கும் பணியை முறையாகச் செய்யாமல், உற்பத்தியை மட்டும் கருத்தில் கொண்டு நிர்வாகம் செய்கிறது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்காதது தொடர் விபத்துகளுக்குக் காரணம் என தொழிற் சங்கங்கள் மற்றும் என்.எல்.சி. பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் தொடர்ந்து குற்றச்சாட்டைக் கூறி வருகின்றது.


இதுவரை நடைபெற்றுள்ள இந்த விபத்து களுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிர்வாகம் முழுப் பொறுப்பேற்க வேண்டும். விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதுடன், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிறுவனத்தில் பணி வழங்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மருத்துவச் செலவு முழுவதையும் நிறுவனம் ஏற்று, சிறந்த சிகிச்சை அளித்திட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவில் சிறப்பு மிக்க பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தில் இது போன்று விபத்துகள் மேற்கொண்டு நடைபெறா வண்ணம், பழைய அனல்மின் நிலை யங்களை நிறுத்தி, பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இயக்க வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் என்.எல்.சி. நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment