காணொலியில் கழகத் தலைவரின் கீதை ஆய்வுச் சொற்பொழிவு - 4 , அழிவற்றதா ஆத்மா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

காணொலியில் கழகத் தலைவரின் கீதை ஆய்வுச் சொற்பொழிவு - 4 , அழிவற்றதா ஆத்மா

காணொலியில் கழகத் தலைவரின் கீதை ஆய்வுச் சொற்பொழிவு - 4 , அழிவற்றதா ஆத்மா?


கலி.பூங்குன்றன்



பகவத் கீதை ஆய்வுச் சொற்பொழிவினை (4) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (9.7.2020) மாலை 6 மணியிலிருந்து 6.45 மணி வரை நிகழ்த்தினார்.


இதில் பெரும்பாலும் கீதாசிரியன் கிருஷ்ணன் வலியுறுத்தும் ‘ஆத்மா’ பற்றிய விளக்கமாகவே அமைந்திருந்தது.


கீதையில் சொல்லப்படுபவை பெரும்பாலும் சொந்த சரக்கல்ல - பிறரிடமிருந்து களவாடப்பட்டவைதான். கபிலர், சார்வாகர் கூறியவற்றிலிருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாகப் பிடித்து சொந்த சரக்கு போலப் பிதற்றுகிறார்கள்.


தந்தை பெரியார்தான் கேட்டார், ‘ஆத்மா, ஆத்மாÕ என் கிறீர்களே - அது மனிதனுக்கு மட்டும்தானா - பிற உயிர்களுக்கு உண்டா என்பதுதான் அந்த அர்த்தமிக்க கேள்வி?


ஆத்மா அழியாதது - கூடு விட்டுக் கூடு பாயக் கூடியது என்பது உண்மையானால், உலகில் மனிதர்களின் மக்கள் தொகையில் மாற்றம் எப்படி வரும்?  ஒரே எண்ணிக்கையில்தானே இருக்க முடியும்? 130 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்களே, இது எப்படி சாத்தியம்? ஆத்மா குட்டி போடுமா?


ஆத்மா அழியாதது என்றால், கூடுவிட்டு கூடு பாயும் என்றால் பிதுர்லோகம் எங்கிருந்து குதித்தது? பிதுர்லோகம் உண்மை என்றால் ஆத்மா என்பது பொய்யென்று ஆகி விடும். இல்லை, ஆத்மாதான் உண்மை என்றால் பிதுர்லோகம் என்பது பொய்யென்று ஆகி விடும். எது உண்மை? எதைக் காப்பாற்றப் போகிறார்கள்?


நரகம் நரகம் என்பார்களே - அது எல்லோருக்குமா? இந்து நரகம், முசுலிம் நரகம், கிறிஸ்துவ நரகம் என்று தனித்தனியாக இருக்கிறதா? வடகலைக்குத் தனி நரகமா? தென் கலைக்கு தனி நரகமா என்று அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்தார் ‘விடுதலை’ ஆசிரியர்.


இதில், வேதம்கூட ஜீவனைக் கூறுகிறதே தவிர ஆத்மா பற்றிப் பேசவில்லை. தமிழ் இலக்கியங்களில் ஆத்மா காணக் கிடைக்கவில்லை.


மனம் - உயிர் - ஆத்மா இவை எல்லாம் ஒன்றா? தனித்தனியா! இதற்கெல்லாம் விளக்கம் சொல்லட்டுமே பார்க்கலாம்.


(கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்ப்புகா


உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா


விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டு போய் மரம்புகா


இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!


(சிவ வாக்கியப் பாடல் - 85)


என்று சித்தர்களுக்குத் தெரிந்ததுகூட பகவான் கிருஷ்ணனுக்குத் தெரியாதாது வெட்கக்கேடே!)


மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்கிறார்களே - அந்தப் புத்தர் ஆத்மாவை ஏற்றதுண்டா? அனாத்மவாதி என்றுதானே புத்தருக்குப் பெயர்.


ஒரு முறை கோசல நாட்டில் பயணித்தார் புத்தர். பார்ப்பனன் ஒருவன் அவரைச் சந்தித்து ஆத்மாவைப்பற்றி வினவினான்.


புத்தர் புகன்றார். ‘ஆத்மா எதையும் அறியக் கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். கண்களைத் தோண்டி விட்டால் அந்த ஆத்மாவால் காண முடியுமா? காதுகளையும் செவிடாக்கி விட்டால், அந்த ஆத்மாவால் கேட்க முடியுமா? மூக்கை அகற்றிவிட்டால் நாற்றத்தினை ஆத்மாவால் உணர முடியுமா? நாக்கை அறுத்து விட்டால் ருசியை உணர்ந்திட, பேசிட, அந்த ஆத்மாவால் முடியுமா?’ என்ற வினாக்களைத் தொடுத்து ஆத்மாவின் பொய்மையைத் தோலுரித்துக் காட்டினார் கவுதம புத்தர்.


புத்தரின் இந்தத் தத்துவங்களை ஒழிக்கவே புத்தத்தில்  ஊடுருவி, மார்க்கத்தை மதமாக்கி - கடைசியில் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று மோசடி செய்தது ஆரியம்.


எந்தளவுக்குச் சென்றனர் என்றால் புத்தரின் பெற்றோர் களுக்குக் குழந்தைப் பேறு இல்லாது கவலை கொண்டதாகவும், ஒரு நாள் இரவு புத்தரின் தாயாராகிய மாயாதேவியின் வயிற்றில் ஆகாயத்தில் இருந்து பேரொளியுள்ள நட்சத்திரம் ஒன்று வெளிப் பட்டு வயிற்றுக்குள் சென்றதாக  மாயாதேவி கனவு கண்டாராம். இதனைத் தன் கணவனான சுத்தோதனரிடம் கூறினாராம்.


உடனே அரசர் நிமித்திகரை அழைத்துத் தன் மனைவி கண்ட கனாவின் நிலையுணர்த்த வேண்டிய போது, அதிக ஞானவானாய் ஒரு புத்திரன் உதிப்பான் என்றானாம் நிமித்திகன்.


புத்தமார்க்கத்தை ஊடுருவி அழித்த ஆரியம் இதுபோல் கட்டிய கதைகள் ஏராளம்!


ஆத்மா என்றால் என்ன? அது அழியாதது - உடல்தான் அழியும். எனவே யுத்தம் செய் என்று அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணன் உபதேசம் செய்கிறான்.


இதோ அந்த உபதேசம்:


“இந்த உடலில் வாலிபப் பருவமும் யவனப்பருவ மும் எவ்வாறு வந்து சேருகின்றனவோ அம்மாதிரியே  ஆத்மாவுக்கு வேறு உடலும் வருகிறது. அறிவாளி இதைப் பார்த்து மயங்க மாட்டான்.’’


(அத் 2 சுலோ. 13)


“இல்லாததற்கு இருப்பு என்பது கிடையாது. இருப்பதற்கு இல்லாமை கிடையாது. இவ்விரண்டின் உண்மை நிலையையும் மெய்ப் பொருளைக் கண்டவர்கள் அறிவார்கள்.”


(அத், 23 சுலோ. 16)


 (இதனை ஆதாரமாகக் கொண்டு ‘கடவுள்’ என்ற கருத்தினை ஆராய்கின்றபோது, கடவுள் எதன்கீழ் வருகிறவர் என்பது நம்பிக்கையாளர்களுக்கூட விளங்காது!)


“எந்த ஆத்மாவானது எங்கும் பரவியுள்ளதோ அது அழிவற் றதென்று அறிவாயாக! இவ்வாறு அழி வற்ற இந்த ஆத்மாவுக்கு எவரும் அழிவை ஏற்படுத்த முடியாது.”


(அத். 2; சுலோ. 17)


மேலும் கிருஷ்ணன் கூறுகிறான்,


ஓ, பரதவம்சத்தவனே! என்றென்றும் இருப்பதும், அழிவற்றதும், அளவிற்கடங்காததுமான ஆத்மாவால் தாங்கப்படுகின்ற இந்த உடல்கள் அழிவுள்ளவை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே (இதை நன்கறிந்து) போர் செய்வாயாக!                                                   (அத். 2; சுலோ. 18)


“எவனொருவன் இந்த ஆத்மாவைக் கொல்ப வனாக நினைக்கிறானோ, எவனொருவன் இந்த ஆத்மா கொல்லப்பட்டதென்று நினைக்கிறானோ அவ்விருவரும் அறியாதவர்கள். இந்த ஆத்மா ஒரு வரைக் கொல்லுவதுமில்லை; ஒருவரால் கொல்லப் படுவதுமில்லை.                         (அத். 2; சுலோ . 19)


“இந்த ஆத்மா எப்பொழுதும் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை. ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லையென்பதுமில்லை. இது பிறப்பற்றது; என்று முள்ளது; நிலையானது; பழமையானது. சரீரம் கொல் லப்படும் பொழுதும், இது கொல்லப்படுவதில்லை.


(அத். 2; சுலோ . 20)


 “எவனொருவன், இந்த ஆத்மாவை அழிவற்றது, நிலையானது, பிறப்பற்றது, தேயாதது என்று அறி கிறானோ அவன் யாரைக் கொலை செய்விக்க முடியும்? யாரைத்தான் கொல்ல முடியும்?


(அத். 2; சுலோ. 21)


எப்படி ஒருவன் நைந்துபோன துணிகளைத் தள்ளி விட்டு, புதுத்துணிகளை எடுத்துக் கொள்வானோ அப்படியே சிதைந்து போன உடல்களை நீக்கிவிட்டுப் புதிய உடல்களை அடைகின்றது ஆத்மா.


(அத். 2; சுலோ . 22)


இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை; நெருப்பு எரிப்பதில்லை; தண்ணீர் நனைப்பதில்லை; காற்று உலர்த்துவதும் இல்லை.


(அத். 2; சுலோ . 23)


இது வெட்ட முடியாதது; எரிக்க முடியாதது. நனைக்க முடியாதது; உலர்த்த முடியாதது; நிலையாக உள்ளது. எங்கும் பரவியது; அசைவற்றது; இன்றும் என்றும் புதியது.


(அத். 2: சுலோ.24)


இதுபற்றி கழகத்தலைவர் எழுப்பிய வினாக்கள்:


அசைவற்றது என்றால் எப்படி புதிய உடல்களை எடுக்க முடியும்? உடல்கள் அழியும்போதும் ஆத்மா அசைவற்றதாக இருப்பின், அதனுடன் சேர்ந்து எரிக்கப்படவோ புதைக்கப்படவோ தானே முடியும்?


பின் எப்படி அது எரிக்க முடியாதது. நனைக்க முடியாதது என்று கூற முடியும்? அதன் நிலை அசைவற்று அப்படியே இருந்தால், அழிவு உடலுக்கே வரக் கூடாது; வர முடியாதே!


இதற்குப் பிறகு ஆத்மாவைப்பற்றி இப்படி வியாக் யானம் செய்துவிட்டு, அடுத்து தனது வாதத்தின் மற்றொரு பகுதியாக, கண்ணன் என்ன சொல்கிறான்? பாருங்கள் என்று கழகத்தலைவர் கேட்கிறார்.


எப்பொழுதும் பிறந்து எப்பொழுதும் இறக்கும் சரீரத்தையே ஆத்மா என்று நீ நினைப்பாயாகில், அந்த நிலையிலும் நீ வருந்த வேண்டியதில்லை.                                  (அத்.2: சுலோ.26)


இப்போது மரணத்தைப்பற்றி கிருஷ்ணன் உபதேசித்துள்ளதாவது,


‘’பிறந்தவனுக்கு மரணம் என்பது நிச்சயமாக உண்டு. மரணமடைந்தவன் பிறப்பதும் நிச்சயம். ஆகவே தவிர்க்க முடியாத ஒரு விஷயத்தைக் குறித்து நீ கவலைப்படாதே”


(அத். 2 - சுலோகம் 27)


என்கிறான் கிருஷ்ணன்.


“உடல் அழிவே - மரணம். உடல் வருதலே பிறப்பு அப்படியானால் ‘ஆத்மா’வின் பங்கு பணிதான் என்ன?


இதற்கெல்லாம் பதில் கிடைக்காது.


உடல்தான் அழியும் - ஆத்மா அழியாதது என் கிறார்களே - அவர்களுக்கு ஒரு கேள்வி.


ஒருவன் கொலை செய்கிறான்  அவன்மீது கொலைக் குற்ற வழக்கு - நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்படுகிறான். கீதையின்மீது சத்தியம் செய்து விட்டு அவன் நீதிபதியைப் பார்த்துச் சொல்லுகிறான்.


‘கனம் நீதிபதி அவர்களே! நான் எதிரியைக் கொன் றது உண்மையே! ஆனாலும் அவன் உடல்தான் அழிந் ததே தவிர அவன் ஆத்மா அழியவே அழியாது.


இதை நான் சொல்லவில்லை. இந்த நீதிமன்றத்தில் நான் கீதையின்மீது வைத்து சத்தியம் சொன்னேன் அல்லவா - அந்தக் கீதைதான் அவ்வாறு சொல்லுகிறது - உடல்தான் அழியும். ஆத்மாவை யாரும் அழிக்க முடியாது என்று நான் சத்தியம் செய்த கீதை சொல் லுகிறது. எனவே நான் கொலையாளியல்ல - குற்ற வாளியல்ல - என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் நிலைமை என்ன?


நீதிபதி பகுத்தறிவுவாதியாக இருந்தால், சுதாரித்துக் கொண்டு - ‘நீ சொல்லுவது சரிதான். நானும் அந்தக் கீதையில் கிருஷ்ணன் கூறியபடியே கூறுகிறேன். உனக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கிறேன். உன் உடல்தான் சாகும் - அழியும். உன் ஆத்மா அழியாது என்று சொன்னால், அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


ஆத்மா என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம், அதனால்தான் தந்தை பெரியார் அழகாகச் சொன் னார்; கடவுளைக் கற்பித்தவனைக் கூட மன்னித்து விடலாம் - காரணம் அவன் முட்டாள். ஆனால் ஆத்மாவைக் கற்பித்தவனை மன்னிக்கவே முடியாது - காரணம் அவன் தெரிந்து செய்பவன்- அயோக்கியன் என்பதை தந்தை பெரியார் கூற்றை எடுத்துக் காட்டினார் கழகத் தலைவர்.


கிருஷ்ணன் கடவுள் அல்ல


கேள்வி: மகாபாரதத்தில் கிருஷ்ணர் நினைத் திருந்தால், சில நிமிடங்களில் துரியோதனன் உட்பட கவுரவர்கள் அத்தனைப் பேரையும் அழித்திருக்கலாம், ஏன் குருச்சேத்திரப் போர் வரை செல்லவிட்டார்?


பதில்: முதன் முதலில் எழுதப்பட்ட மகாபாரதத் தின்படி கிருஷ்ணன் யாதவர்களின் அரசர்தானே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்ட வர்களின் பிரதிநிதியாகச் சென்று "போர் வேண்டாம்" என்று எடுத்துரைக்க மட்டுமே கிருஷ்ணனால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது. மிகப் பிற்பட்ட காலத்தில்தான். பிறகு கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் கிருஷ்ணர் வழிபாட்டை முதலில் தொடங்கி வைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்."


('ஆனந்தவிகடன்' 3.11.2007


No comments:

Post a Comment