சென்னை, ஜூலை 7 "மாமலை போன்ற எதிர்ப்புகளை யெல்லாம் தாண்டி, ஒரு பக்கம் தூற்றுகிறவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், தான் கொண்ட அந்தக் கொள்கையை நெஞ்சுரத்தோடு, துணிவாக எடுத்துரைத்த பெருமையும் உறுதியும் படைத்தவர் தந்தை பெரியார்" என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘ஒப்பற்றத் தலைமை'
கடந்த 28.6.2020 மாலை 5.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் இரண் டாம் பொழிவினை காணொலிமூலம் கழகத் தோழர்களி டையே ஆற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:
அனைவருக்கும் வணக்கம்!
கழக செயலவைத் தலைவரின்
அரிய செய்திகள்!
இந்த இரண்டாவது பொழிவுக்கு தொடக்கவுரை நிகழ்த்திய கழக செயலவைத் தலைவர் அருமைச் சகோதரர் மானமிகு அறிவுக்கரசு அவர்கள் பல்வேறு அரிய செய்திகளையெல்லாம் நமக்கு நினைவூட்டினார்.
பிறவியிலேயே தந்தை பெரியார் ஒரு தலைவர். தலைமைப் பண்புகள் இருக்கக்கூடிய வாய்ப்புப் பெற்றவர். அறிவார்ந்த ஒரு சூழலில், அப்படிப்பட்டவராக தன்னை ஆக்கிக் கொண்ட ஒரு தலைவர். சிறப்பாக உயர்ந்தவர். இன்றைக்குப் பல நேரங்களிலே, அதை எப்படியாவது குறைத்துவிடவேண்டும் என்று இன எதிரிகள் நினைத்துக் கொண்டு இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், அவருடைய எதிர்நீச்சல் என்பதுதான் சிறப்பானது. அது சாதாரணமான தல்ல.
எல்லா துறைகளிலும் பார்த்தீர்களேயானால், மற்றவர் கள் சொல்ல அஞ்சுகின்றவற்றை, தந்தை பெரியார் அவர் கள் சொல்லி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட பகுதியை இப்பொழுது நான் விளக்க இருக்கிறேன்.
வந்திருக்கின்ற அனைவருக்கும் அன்பான வணக்கத் தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி பெரிதும் அறிந்த வர்கள் இங்கே குழுமியிருக்கிறீர்கள். அறியாத சில செய்திகளை உங்களிடையே பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
சாத்தான்குளம் இரட்டை உயிர்ப் பலி!
அதற்குமுன்பாக, அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரு வணிகப் பெருமக்களை விசார ணைக்கு என்று அழைத்துச் சென்றனர் காவல்துறையினர். அவர்கள் ஒன்றும் பெரிய குற்றம் செய்யவில்லை. ஊரடங் கின்போது கடையைத் திறந்து வைத்திருந்தபோது, ஏற் பட்ட விவாதம் தான். அதிலே தன்முனைப்புக் காரணமாக, சில காவல்துறை அதிகாரிகள் அதீதமாக நடந்துகொண்டு, மிருகத்தனமாகத் தாக்கி, நடுத்தர வயதுக்காரரையும், ஓர் இளைஞரையும் (தந்தை, மகன்) உயிர்ப் பலி வாங்கி விட்டனர்.
சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பருக்கு ஏற்பட்ட ஒரு கொடுமை போல, தமிழ்நாட்டிலும் மனித உரிமையை மதிக்காத கொடுமை நடைபெற்று இருக்கிறது. நல்ல வாய்ப்பாக நீதிமன்றமே முன்வந்து அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
அவர்களுடைய மறைவிற்கு நாம், நம்முடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அந்தக் குடும்பத்திற்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர்களுக்குரிய நீதி முறையாக வழங்கப்படவேண்டும்.
மக்கள் காவல்துறையினரை மதிக்கவேண்டும்; மதிக்கும்படி அவர்கள் நடந்துகொள்ளவேண்டும்
காவல்துறையினருடைய பணிகள், கரோனா காலகட் டத்தில் சிறப்பாக இருக்கின்றது என்று பாராட்டுகின்ற அதேநேரத்தில், இப்படிப்பட்ட கருப்பு ஆடுகள், ஆங்காங்கே அதீதமாக நடந்துகொள்ளுகின்ற முறையின் காரணமாக, நான் நேற்றுகூட சுட்டிக்காட்டி இருந்ததைப் போல,ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷமா? அல்லது ஒரு துளி விஷம் இருக்கின்ற இடத்தில் பாலைத் தேடிக் கொண்டிருக்கிறோமா? என்று கருதக்கூடிய அளவிற்கு, அதீதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் ‘‘உங்கள் நண்பன்'' என்று மக்கள் மத்தியில் அறிமுகமான வர்கள் காவல்துறையினர். நாளைக்கும் காவல்துறையினரை நாம் நம்பாமல் இருக்க முடியாது. ஏனென்றால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்குக் காவல்துறையினருக்கு அதிகாரம் இருக்கவேண்டும். மக்கள் அவர்களை மதிக்கவேண்டும். ஆனால், மதிக்கும்படி அவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
சில மணித்துளிகள் அமைதி காப்போம்!
அந்த வகையில், இருவரைப் பறிகொடுத்த அந்தக் குடும்பத்திற்குரிய நீதியை வழங்கவேண்டும். மீண்டும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடைபெறக்கூடாது. இதுவே ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கவேண்டும். இரண்டு உயிர் களுடைய பலி என்று இருக்கிறதே, அது ஒரு திருப்பமாக அமையவேண்டும் என்ற கோரிக்கையையும் தெளிவாக வைத்து, தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அது மிதிக்கப்படக் கூடாது என்று நேற்று சொன்ன கருத்தையே இன்றைக்கும் வலியுறுத்தி, அந்தக் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்து, நாம் ஒரு சில மணித்துளிகள் அமைதி காப்போம்!
(இரண்டு நிமிடம் அனைவரும் அமைதி காத்தனர்).
சென்ற பொழிவிலே, தந்தை பெரியார் அவர்களுடைய தலைமைத்துவப் பண்புகளைப்பற்றி எடுத்துச் சொன் னோம். அதன் தொடர்ச்சியாக வருகிறபொழுது, எப்படி எதிர்நீச்சல் என்பதில் அவர்கள் தனித்தன்மையாக விளங் கினார்கள்; ஒரு மாமலை போன்ற எதிர்ப்புகளையெல்லாம் துச்சமெனக் கருதி, அதனைச் சந்தித்து, அதில் வெற்றி பெற்ற தலைவராக வேறு எவரும் இருக்க முடியாது.
வரலாற்றில்,
எவருமே மறைத்துவிட முடியாது
அந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி, ஒரு பக்கம் தூற்றுகிறவர்களைப்பற்றிக் கவலைப்படாமல், தான் கொண்ட அந்தக் கொள்கையை நெஞ்சுரத்தோடு, துணி வாக எடுத்துரைத்த பெருமையும், உறுதியும் தந்தை பெரியாருக்கு என்றைக்குமே உண்டு. வரலாற்றில், அதனை எவருமே மறைத்துவிட முடியாது.
அந்த வகையில் நண்பர்களே, உங்களுக்கு நினை வூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய உரையை மேற்கோள்காட்டி, நம்முடைய சகோதரர் செய லவைத் தலைவர் அறிவுக்கரசு அவர்கள் சுட்டிக்காட் டினார்கள்.
டாக்டர் வா.செ.குழந்தைசாமி
உலக அளவிலே, 20, 21ஆம் நூற்றாண்டு காலத்தில் நம்மோடு வாழ்ந்தவரும், தலைசிறந்த கல்வி அறிஞரும், நீர்வளத் துறையில் மிகப்பெரிய ஆய்வாளர் என்று உலகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டவருமான பொறியாளர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள், தன்னுடைய சிந்தனையை, திராவிட மாணவர் கழகத்திலிருந்து, இளமைக் காலத்திலே சேலம் நகராட்சிக் கல்லூரியில் உருவாக்கிக் கொண்டவர்.
கரூருக்குப் பக்கத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற ஒரு சிறிய கிராமத்திலிருந்து, விவசாயக் குடும்பத்தி லிருந்து வந்தவர். அவரை அந்தக் காலத்தில் ஒழுங்குபடுத் தியது திராவிட மாணவர் கழகம் - ஈர்த்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
அவர் ஆங்கிலப் புலமையாளர், சிறந்த பொறியாளர், பல்கலைக் கொள்கலன், ஆய்வாளர், அவர் சிறந்த தமிழறிஞரும்கூட!
தந்தை பெரியாரைப்பற்றி அவர் எழுதிய ஒரு கவிதை, மிக அற்புதமான கவிதையாகும்.
"தன்னலமற்ற தொண்டு - இதுதான் துறவு
ஓயாத உழைப்பு - இதுதான் தவம்
நீரெல்லாம் அவன் வியர்வை; தமிழகத்தின்
நிலமெல்லாம் அவன் நடந்த தாரை; வாழும்
ஊரெல்லாம் அவன் மூச்சுக்காற்று; நம்மோர்
உயர்வெல்லாம் அவன் தந்த பிச்சையன்றோ!
தடம் சொன்னான்; தமிழருக்குக் கண்ணும், காதும்,
தன்னறிவும், மன வலிவும் தந்தான்; என்றும்
கடன்பட்ட தமிழுலகம் நன்றி சொல்லும்!
காவியங்கள், கலைகள் அவன் பெருமை பேசும்!"
என்று எழுதினார் வா.செ.குழந்தைசாமி அவர்கள்.
காவியங்கள், கலை உலகம் இன்றைக்கு அவருடைய பெருமையைப் பேசுகிறது என்பது ஒருபக்கத்தில் இருந் தாலும், அதைப்பற்றி அவர் கவலைப்படாதவர்.
அவர் துணிந்து தன்னுடைய வாழ்வை நடத்திக் கொண்டு வந்தவர். எதிர்ப்பிலே வளர்ந்தவர் அவர்.
சாமி.சிதம்பரனார்
தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை - ‘‘தமிழர் தலைவர்'' என்ற தலைப்பிலே முதல் பகுதியை எழுதியவர் அறிஞர் சாமி.சிதம்பரனார் அவர்களாவார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை - 1938 - இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரையில் எழுதிய நூல் அந்த நூல்.
சாமி.சிதம்பரனார் அவர்கள் ஒரு சிறந்த தமிழறிஞர் மட்டுமல்ல, அனுபவம் உள்ளவர். அவருடைய திரு மணமேகூட மறுமணமாக ஏற்பாடு செய்தது தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கமும்தான். அவருடைய வாழ்விணையர் அவர்கள், கடைசிவரையில் நம்முடைய இயக்கத்தில் மிகத் தீவிரமான, ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார், சிவகாமி சிதம்பரனார் அவர்கள்.
சாமி.சிதம்பரனார் அவர்களை உங்களில் பல பேர் அறிவீர்கள். ‘‘தமிழர் தலைவர்'' என்ற தலைப்பில் அவர் எழுதிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். அந்த நூலில், தந்தை பெரியார் அவர்களின் சிறப்புகளைப்பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லியிருப்பார்.
ஆனால், பல பேர் அறியாமல் இருக்கக்கூடிய ஒரு நூல் உண்டு. அந்நூல் விரைவில், நம்முடைய பெரியார் ஆவணக் காப்பகத்தின் மறுபதிப்பாக வெளிவரும்.
அய்யா அவர்களுடைய திருமண ஏற்பாடு வந்த நேரத்தில், ஒரு பெரிய புயல் வந்ததுபோன்று சித்தரிக் கப்பட்டது. எதிர்ப்பே புயலாக, சுனாமியாக வந்து, இனிமேல் பெரியாருக்குப் பொதுவாழ்க்கையில் இடமே இல்லை என்றெல்லாம் அற்பர்கள் சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் எல்லாம் வந்தன.
ஒதுங்கியிருந்த சாமி.சிதம்பரனார் போன்றவர்கள் களத்திற்கு வந்தார்கள்
அந்தக் காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர்களைப் பற்றி, அவருக்கு இருந்த எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் அறிந்து அதற்குமுன்பு சற்று ஒதுங்கியிருந்த சாமி.சிதம்பரனார் போன்றவர்கள் களத்திற்கு வந்தார்கள்.
தந்தை பெரியார் அவர்களால் பயன் பெற்றவர்கள், அந்த நேரத்தில், அய்யா அவர்களிடமிருந்து நகர்ந்தார்கள். ஆனால், அவருடன் இருந்து பணியாற்றி, நூல்களை எழுதி, பின்பு ஒதுங்கியிருந்த சாமி.சிதம்பரனார், தோழர் எம்.கே.டி. சுப்பரமணியம் போன்றோர் தந்தை பெரியாருக் குத் துணையாக நின்றார்கள்.
சாமி.சிதம்பரனார் அவர்களின் மாணவர் பேராசிரியர் இலக்குவனார்
சாமி.சிதம்பரனார் அவர்களின் சிறப்பைப்பற்றி சொல்லவேண்டுமானால், அவர் பல பேருக்குத் தமிழாசிரி யராக இருந்தவர் தஞ்சை மாவட்டத்தில்! அவருடைய மாணவர்களில் சிறந்த மாணவர்களில் ஒருவரின் பெயரை சொல்லவேண்டுமானால், பேராசிரியர் இலக்குவனார்.
பேராசிரியர் இலக்குவனாரின் திருமணம், சாமி.சிதம் பரனார் அவர்களின் தலைமையில் நடைபெற்று, அந்த செய்தி, ‘விடுதலை'யில் வெளிவந்தது என்பதைப்பற்றி, அவருடைய செல்வங்களுக்கு எடுத்துச் சொன்னபொழுது, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.
எனவே, பேராசிரியர் இலக்குவனார் அவர்களுக்கே, சாமி.சிதம்பரனார் அவர்கள் ஆசிரியர். சிறந்த சிந்தனை யாளர், பல நூல்களை எழுதியவர், சுயமரியாதை வீரர்.
அப்படிப்பட்ட சாமி.சிதம்பரனார் அவர்கள், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி ஒதுங்கியிருந்த வர்! தந்தை பெரியாருடைய திருமண ஏற்பாடு என்று சொன்னபொழுது, அவர் மீண்டும் வந்தார்.
மறைந்த சென்னை தோழர் எம்.கே.டி.சுப்பிரமணியம் அவர்கள், கடைசியாக பல்வேறு அரசியல் நிலைப்பாடு களில் இருந்தாலும், மறைகின்ற நேரத்தில், திராவிடர் கழகத்தில் வந்து இணைந்து, நம்மோடுதான் இருந்தார்.
எம்.கே.டி.சுப்பிரமணியத்தின்
‘தீப்பொறி' பத்திரிகை!
அப்பேர்ப்பட்ட எம்.கே.டி.சுப்பிரமணியம் அவர்கள், ‘தீப்பொறி' என்ற ஒரு பத்திரிகையை நடத்தினார். அந்தக் காலகட்டம் ஒரே நேரத்தில் திராவிட இயக்கத்திற்கு 200 பத்திரிகைகள் நடந்த காலகட்டம் 1946 ஆம் ஆண்டிற்குப் பின்னால், என்பது உங்களுக்குத் தெரியும்.
சி.பி.சிற்றரசு அவர்கள், ஆசிரியராக இருந்து ‘தீப்பொறி' என்ற தலைப்பில் ஒரு பத்திரிகை வெளிவந்தது.
ஆனால், எம்.கே.டி.சுப்பிரமணியம் அவர்கள், சென் னையில், ‘தீப்பொறி' என்ற தலைப்பில் கொஞ்ச நாள்கள் நடத்தினார். பிறகு அது நின்று போனது.
‘தீப்பொறி' பதிப்பகம் அவருடைய வீட்டின் முகவரி 352, திருவொற்றியூர் நெடுஞ்சாலை என்ற முகவரியில் நடைபெற்றது. அவர்கள் வெளியிட்ட நூல் இது.
‘‘எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா.''
தந்தை பெரியார் அவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பைப் பற்றி சொல்லுகின்ற நேரத்தில், ‘‘எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா.' என்ற தலைப்பில் ஒரு சிறிய நூலை எழுதினார் சாமி.சிதம்பரனார் அவர்கள்.
இந்தத் தகவல் பல பேருக்குத் தெரியாது. நான் அந்த நூலை வாங்கிப் பாதுகாத்து வைத்திருந்தேன். அய்யா அவர்கள் 1957 ஆம் ஆண்டு எங்களுடைய இல்லத்தில் தங்கியிருந்தபொழுது, அந்தப் புத்தகத்தைப் பார்த்து ‘‘ஓகோ, இப்படி ஒரு புத்தகத்தை எழுதினாரா சாமி.சிதம் பரனார்?'' என்று வியப்படைந்தார். அந்த நூலில், அய்யா வின் கையெழுத்தைக்கூட நான் வாங்கி வைத்திருக்கிறேன்.
அந்த புத்தகத்தின் தலைப்பு ‘‘எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா.'' அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் 40-தான்.
தந்தை பெரியாரின் திருமணம் என்ற ஏற்பாட்டை ஆதரித்து, அதில் என்ன தவறு? என்று எழுதினார்.
அன்றைய காலகட்டத்தில், தந்தை பெரியாரின் திருமணத்தை ஆதரித்து பல பேர் ஆதரவு, அறிக்கைகள் கொடுத்தார்கள் என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், புத்தகமாக விளக்கம் எழுதியவர் சாமி.சிதம்பரனார்.
அண்ணா அவர்கள் எழுதியதற்கு, வரிக்கு வரி பதில் எழுதிய பெருமை, நம்முடைய நகரதூதன் மணவை திருமலைசாமி அவர்களையே சாரும்.
‘‘பெரியார்மீது துவேஷப் புயல்'' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார்.
இங்கே ‘‘எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா.'' என்ற புத்தகத்தில், அய்யாவைப்பற்றி பல்வேறு தகவல்களை அழகாகக் கொடுத்துள்ளார் சாமி.சிதம்பரனார் அவர்கள்.
40 பக்கத்தில், ஒரு கேப்சூல் என்று சொல்லக்கூடிய, அந்தக் குளிகையில் அடைப்பதைப்போல,
* எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா.
* எதிர்ப்பிலே எதிர்நீச்சல்
* சுயமரியாதை இயக்கம்
* திராவிடர் கழகம்
* சோதனைக் கட்டம்
* பெரியார் குற்றவாளியா?
* புரட்சிப் பெரியார்
* விட்டுக் கொடுக்காத வீரர்
என்ற தலைப்புகளில், தந்தை பெரியாரைப்பற்றி பல்வேறு செய்திகளை மிக அழகாக எழுதி, என்னென்ன வாதங்கள் செய்தார்களோ, அதற்கு அருமையான பதிலை அந்த நாற்பது பக்கங்களில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
அப்படி சொல்லுகின்ற நேரத்தில், எதிர்ப்பில் எதிர் நீச்சல் அடித்ததில், எப்படி தந்தை பெரியார் அவர்கள் துணிந்தவர் என்பதை மிக அழகாக, வேறு எவரும் எளிதில் சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு, அழகாக எடுத்து விளக்குகிறார் நம்முடைய சாமி.சிதம்பரனார் அவர்கள்.
- தொடரும்
No comments:
Post a Comment