அந்தோ, உசிலைப் பகுதி கொள்கை மாவீரன் பவுன்ராசா மறைந்தாரே!  அவருக்கு நமது வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 5, 2020

அந்தோ, உசிலைப் பகுதி கொள்கை மாவீரன் பவுன்ராசா மறைந்தாரே!  அவருக்கு நமது வீரவணக்கம்!


மதுரை மண்டலத் தலைவரும், கழகத்தின் ஒப்பற்ற செயல் வீரரும், கட்டுப்பாடு காத்து உசிலம்பட்டி பகுதியில் ஓர் இராணுவத் தளபதிபோல் நமது இயக்கத்திற்குக் கிடைத்த அரிய கொள்கை வீரரான மானமிகு தோழர் மா.பவுன்ராசா (வயது 58) அவர்கள் நேற்றிரவு தூக்கத்திலே மரணமடைந்தார் என்ற பேரிடி போன்ற செய்தி கேட்டு, இன்று காலை மிகுந்த அதிர்ச்சிக்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளானோம்!


நேற்று (4.7.2020) மாலை நடைபெற்ற காணொலியிலும், முன்னர் நடைபெற்ற ஒவ்வொரு காணொலியிலும் கலந்து கொண்டு வணக்கம் தெரிவித்த லட்சிய வீரர்; அவர் எழுதிய கடிதம் நேற்று முன்தினம்கூட ‘விடுதலை'யில் வந்தது!


எப்போது நம்மைப் பார்த்தாலும் ‘வணக்கம்' என்று சொல்வதற்கு முன்பே, ‘விடுதலை' சந்தாக்கள் தராமல் இருந்ததே இல்லை.


‘விடுதலை' செய்தியாளராகவும், உசிலைப் பகுதியில் கழகத்தைத் தொடங்க, ஆழமாக வேரூன்றச் செய்ய அரும்பாடுபட்ட அஞ்சாநெஞ்சம் கொண்டவர். பயம் அறியாப் பண்பாளர். எந்த அதிகாரியிடமும் துணிந்து சென்று இயக்க உரிமைக்காக வாதாடு வதில் வல்லவர். அவர் நேற்றிரவு உறங்கும்போது உயிர் துறந்துள்ளார் என்பது எளிதில் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதது.


அவ் வட்டாரத்தில் அனைத்துக் கட்சியின ராலும், பொதுமக்கள் அனைவராலும் மதிக்கப் பட்டு, அனைவரையும் உறவாகக் கருதி இயக்கச் செயற்பாடுகளை செவ்வனே நடத்தியவர்.


போர்க் களத்தில் ஒரு தளபதியை நாம் இழந்துள்ளோம் - அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, கழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.


அவருக்கு நமது வீர வணக்கம்!


அவரை இழந்துவாடும் அவரது துணைவியார், குடும் பத்தினருக்கும் அவ்வட்டாரக் கழகக் குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்களுக்கும், அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


 


 


சென்னை      தலைவர்


5.7.2020               திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment