மின்சாரம்
விகாஸ் துபே என்ற இந்துத்துவ ஆதரவாளர் போர்வையில் இயங்கும் சமூக விரோதி, காவல்துறையினரைத் தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்து, 13 காவலர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டுள்ளான். திரைப்படப்படங்களில் வருவதுபோன்ற இந்தக் கொடூர நிகழ்வில், 8 காவல்துறையினர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தனர், அய்வர், மருத்துவமனையில் மரணித்தார்கள். கொலை செய்தவர் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர் மற்றும் பார்ப்பனர் ஆகையால், உத்திரப் பிரதேச இந்துத்துவ அமைப்புகள் அவருக்குச் சமூகவலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்து சுரக்ஷாவாகினி என்ற அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், சமூகவலைத்தளத்தில் எழுதியுள்ளதாவது, “காவல்துறையினர், விகாஸ் துபே சுட்டதில் இறந்து போனார்கள். இதில் அதிர்ச்சி அடைய ஒன்றுமே இல்லை, காவல்துறையினர் எதற்காகச் சம்பளம் வாங்குகிறார்கள்? அவர்களுக்கான பணியில், மோதலின் போது மரணமும் ஏற்படும் என்று தெரியும்! அவர்கள் அரசின் அடிமைப்பணியாளர்கள்! அப்படி இருக்க, காவல்துறையினர் செத்துப்போனார்கள் என்று ஊடகத்தினர் தொடர்ந்து செய்திகளை`ச் சொல்லிகொண்டு வருகின்றனர். விகாஸ்துபே ஒன்றும் அனாதை அல்ல! அவர், பிராமணன்... பரசுராமனின் வம்சம்” என்று எழுதியுள்ளார். இது போன்று பல இந்து அமைப்புகள், தொடர்ந்து விகாஸ் துபேவிற்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
இந்த வழக்கை விசாரணைசெய்யும் அதிகாரிகளிடமும் ஓர் ஒற்றுமையைக் கவனிக்க வேண்டும். கொலை செய்தவர் விகாஸ் துபே, கொலை வழக்கை நிகழ்விடத்தில் பதிவு செய்தவர் ஜி.என்.திரிவேதி(பார்ப்பனர்), செய்தி சேகரித்தவரும் பார்ப்பனர், சுக்லா அந்த வழக்கின் விசாரணை அதிகாரி, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறீமதி பிரதிபா சுக்லா, வழக்கு விசாரணையை மேற்பார்வை செய்பவர் துணை முதல்வர் தினேஷ் சர்மா. அதாவது, கொலை செய்தவரும் பார்ப்பனர், விசாரணை செய்தவரும் பார்ப்பனர், விசாரணையை மேற்பார்வை செய்தவரும் பார்ப்பனர், கொலை நடந்த பகுதி சட்டமன்ற உறுப்பினரும் பார்ப்பனர்!
(நேற்று முன்தினம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் நகர காலபைரவர் கோவிலில் பதுங்கியிருந்த விகாஸ் துபே கைது செய்யப்பட்டு உ.பி. கொண்டு வரப்பட்டார். வழியில் காவல்துறையிடமிருந்து தப்ப முயன்றார் என்று சொல்லி, அவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர் காவல்துறையினர். விகாஸ் துபே-வைப் பேச விடக் கூடாது; அவரது பின்புலம் வெளியாகிவிடக் கூடாது என்பதால் நிகழ்த்தப்பட்ட என்கவுன்ட்டர் என்றே கருதப்படுவதாக இப்போது செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.)
இஸ்லாமிய நாடோடி இன சிறுமி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி, கதுவா மாவட்டத்தில் கடத்தப் பட்டு, கோயிலுக்குள் 8 நாட்கள் வைத்து வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். சிறுமியின் தலை, பாறையின் மீது கிடந்தது எனச் செய்தி வந்தது.
காட்டிற்குள் கிடந்த உடல், ஜூன் 17 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று நாள்கள் கழித்து, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று பெருமையுடன் கூறிய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அதன் பிறகு, கத்துவாவில் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கோவில் பூசாரி, அவரது மகன், உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர், இரண்டு காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று தெரியவந்தது. இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக் கியது. இதனால் இந்த வழக்கு குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டது. துணை ஆய்வாளர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் இருவரும் ஆதாரங்களை அழிக்க முற்பட்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரியும், கோவில் அர்ச்சகருமான சஞ்சி ராம் 20.3.2018 அன்று சரணடைந்தார்.
சஞ்சி ராம், அவரது மகன் விஷால் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் தத்தா, சிறப்புக் காவல்துறை அதிகாரிகளான தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா ஆகியோர் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியைக் கொலை செய்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சான்றுகளை அழிக்க முற்பட்ட துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா மற்றும் தலைமைக் கான்ஸ்டபிள் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
போலீஸ் அதிகாரியின் பேட்டி என்ன கூறுகிறது? “குற்றவாளிகளில் பெரும்பாலோர் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்கள், ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள்... ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வுக் கொலையில், நமது பார்ப்பனர்களைக் குற்றவாளிகளாகக் காட்டக் கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில், நான் அவர்களிடம் சொன்னேன்," எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்" என்று. அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாததால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதர வாளர்களும் மிரட்டவும், அச்சுறுத்தவும் செய்தார்கள்.
கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங்கரமாக முழக்கமிட்டார்கள். மூவர்ணக் கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத்தார்கள். கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். பிணை மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம், வழக்குரைஞர்கள் கும்பலாக முழக்கமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள். நீதிமன்றத்திற்கு வெளியேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந்திருக்கும். சில காவல்துறையினரும் குற்றவாளிகளுக்காகவே இருந்தார்கள். ஒரு விதமான சட்டமற்ற தன்மையையும் பீதியையும் நிறைத்து வைத்திருந்தார்கள். ஆனால், அமைதியாகவும், உறுதியாகவும், அர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளைத் தொடர்ந்தோம். நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்துவிதமான ஆதாரங்களோடும், சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்... “
- ஆசிஃபா வன்புணர்வு கொலைவழக்கு, சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஒரே பெண் அதிகாரியான திருமதி. சுவேதாம்பரி சர்மா அவர்களின் பேட்டிதான் இது.
மைசூர் சமஸ்தானத்தின் தலைமை நீதிபதியாக பெங்களூர் நீதிமன்றத்தில் இருந்தவர், குடகு நாட்டைச் சேர்ந்த நீதியரசர் பி.மேடப்பா. நேர்மையும், நாணயமும் மிகுந்த அவரைக் கொலை செய்ய, 29-1-1951 அன்று ஒரு முயற்சி நடந்தது. அவர் அருந்த இருந்த தேநீரில், நஞ்சு கலக்கப்பட்டது; ஆனால் நல்வாய்ப்பாக அவரது பணியாளர்கள் தேநீரின் நிறம் மாறியிருப்பதைக் கண்டு, அதை அவருக்குக் கொடுக்காமல் கீழே ஊற்றிவிட்டார்கள். அது பற்றி அவரிடம் தகவலும் கூறினார்கள். தேநீர் கொண்டுவரப்பட்ட பாத்திரத்தில் இருந்த சிறிதளவு தேநீர், சோதனைச் சாலைக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போதுதான், அதில் மெர்குரி ஆக்சைட் என்னும் நஞ்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில், நீதியரசர் மேடப்பா, காவல்துறையில் புகார் அளித்து, அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒரு வேலைக்காரப் பெண், அந்த நஞ்சை தேநீரில் கலந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில், எல்.எஸ்.ராஜூ என்ற மைசூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த ராஜூவின் பின்னணியைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். 1949-50களில் மைசூர் சமஸ்தானத்தில், கோபால் ராவ் என்ற ஒருவர், தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறியதையடுத்து, பேராசை கொண்ட மக்கள் அந்த நிறுவனத்தில் பணம் போடத் தொடங்கினார்கள். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், இரண்டு லட்ச ரூபாய் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். மேலும், மைசூர் மகாராஜாவின் நெருங்கிய உறவினர்கள், முந்தைய மகாராஜாவின் செயலாளர் தம்பு செட்டியார் போன்ற பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் இந்த கோபால் ராவிடம் பணம் முதலீடு செய்து ஏமாந்தார்கள்.
எட்டு கோடி ரூபாய் வரை வசூல் செய்த பிறகு, கோபால் ராவ், மஞ்சள் நோட்டிஸ் கொடுத்து, தான் திவால் ஆகிவிட்டதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரிடம் உள்ள சொத்துகளை மதிப்பிட்டு, அதன்படி பணம் கட்டியவர்களுக்கு ரூபாய்க்கு 3 காசு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், மைசூர் அரசாங்கம் ஒரு நியாயமான இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்பியதால், சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி, தனி நீதிமன்றம் ஒன்றை நிறுவியது. நீதியரசர் மேடப்பாதான் இந்த தனிநீதிமன்ற நீதிபதியாக இருந்தார். மைசூர் அரசாங்கமும், நீதிமன்றமும் மேற்கொண்ட முயற்சிகளினால் கோபால் ராவிடம் பணம் கட்டியவர்களுக்கு ரூபாய்க்கு 6 அணா திரும்பக் கிடைத்தது.
இந்த வழக்கில் கோபால் ராவுக்காக ஆஜரான வழக்கறிஞர் இந்த ராஜூதான். கோபால் ராவின் மீதான வழக்கு அவருக்கு எதிராகப் போவதைக் கண்ட ராஜூ ஓடிச்சென்று பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வெளியிட்டார். இக்கட்டுரைகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் முறையில் இருந்தன என்பதால், அவர் மீது வழக்கு தொடர்ந்து அவருக்கும், பத்திரிகையாளருக்கும் சிறைதண்டனை வழங்கப்பட்டது.
இதில் வியப்பான செய்தி என்னவென்றால், ராஜூவின் சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் என்று கைது செய்யப்பட்டாரோ அன்று இரவு 10 மணிக்கு விடுவிக்கப்பட்டார் என்பதுதான். இதற்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த செல்வாக்கு மிகுந்தவர்களின் உதவிதான் காரணம் என்று தெரிய வந்தது. அவர் வேறு யாருமல்லர். இந்திய அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சாட்சாத் ராஜகோபாலாச்சாரியார்தான். ராஜூவும், ராஜாஜியும் நாமம் போட்டுக் கொள்ளும் அய்யங்கார்கள் என்பதும், ராஜூ, ராஜாஜியின் நெருங்கிய உறவினர் என்பதும்தான் இந்த தலையீட்டுக்கான காரணம்.
இது பற்றி டி.எஃப்.காரக்கா, Dangers of CasteMark என்ற நூலில் எழுதியுள்ளார்.
மூன்று செய்திகள்! மூன்றிலும் நடுப்புள்ளி பார்ப்பனர்கள்தான்.
பார்ப்பனர்கள் எந்தச் சட்டமீறலுக்கும் தயாராகி, தங்கள் இனத்தைக் காப்பாற்றிட எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் என்பதற்கு இன்னும் என்ன ஆதாரம் தேவை?
No comments:
Post a Comment