இத்தாலியில் அக்டோபர் 15ஆம் தேதி வரை அவசரநிலை நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 30, 2020

இத்தாலியில் அக்டோபர் 15ஆம் தேதி வரை அவசரநிலை நீட்டிப்பு


ரோம், ஜூலை 30- அய்ரோப்பாவில் கரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் இருந்தது.


கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை முதன் முதலில் இத்தாலிதான் அமல்படுத்தியது. அத்துடன் அந்த நாட்டில் தேசிய அவசர நிலையும் பிரகடனப்படுத் தப்பட்டது. இந்த கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் இத்தாலி கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு 2 மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கு கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. எனினும் தேசிய அவசர நிலை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இத்தாலியில் நாளை (ஜூலை 31) அவசரநிலை முடிவுக்கு வர இருந்த நிலையில், அதை அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் கியூசெப் கோண்டே உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் “தொற்று நோயின் வீரியம் மற்றும் தேசிய சுகாதார சேவையில் அதன் தாக்கம் கணிசமாக குறைந்து விட்டாலும், வைரஸ் நம் நாட்டில் தொடர்ந்து பரவுகிறது என்று தரவுகள் கூறுகின்றன. எனவே தேசிய அவசர நிலையை நீட்டிப்பது அவசியமாகிறது. இது குறிப்பிட்ட பயணக் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதற் கான தேவைகளையும் உள்ளடக்கியதாகும்” என அவர் கூறினார்.


மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்திய பிறகே கைது நடவடிக்கையைத் தொடர வேண்டும் - டிஜிபி உத்தரவு


சென்னை, ஜூலை 30- தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், காவல்துறை ஆணையர்களுக்கும் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,


“ஒருவர் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைவான ஆண்டு சிறைத் தண்டனைப் பெறும் குற்றத்தைச் செய்திருந்தால்கூட, அவரை உடனே கைது செய்யக்கூடாது. விசாரணை அதிகாரி குற்றத் தன்மையை ஆராய்ந்து, கைது செய்ய வேண்டிய அவசியத்தை முதலில் எழுத்து மூலம் பதிவு செய்ய வேண்டும். மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்திய பிறகே கைது நடவடிக்கையைத் தொடர வேண்டும். அவ்வாறு செய்யாத அதிகாரிமீது துறை ரீதியான நட வடிக்கை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். ஏன் சிறையில் அடைக்கப்படுகிறார் என்பதற்கு உரிய விளக்கத்தை குற்றவியல் நீதித் துறை நடுவரிடம் தரவேண்டும். உச்சநீதிமன்றம் தந்த அறிவுரைகளை முறையாக பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


பழனி, ராஜபாளையம், திருச்செந்தூர் ரயில்வே முன்பதிவு மய்யங்கள் செயல்படத் தொடங்கின


மதுரை, ஜூலை 30- கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பழனி, ராஜபாளையம் மற்றும் திருச்செந்தூர் ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு மய்யங்கள் இன்று (30.7.2020) முதல் செயல்படத் தொடங்கின. இந்த முன்பதிவு மய்யங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளை ரத்து செய்து முழு தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த மய்யங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதியம் 2 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அரைமணி நேர உணவு இடைவேளை யோடு செயல்படும் என்றும் ரயில்வேத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


நியாயவிலைக் கடைகளில் இலவசப் பொருட்கள் நிறுத்தம் - தமிழக அரசு அறிவிப்பு



சென்னை, ஜூலை 30- கரோனா பேரிடர் ஊரடங்கு கால அரசு உதவியாக தமிழகத்தில் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.  நியாயவிலைக் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத்தான் பெற வேண்டும். ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது.


நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு



சென்னை, ஜூலை 30- தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1,3,4ஆம் தேதி வீடுதேடி சென்று ஊழியர்கள் டோக்கன் தரவேண்டும் நாள்தோ றும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவு,


டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர் சார்பாக ஒருவர் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு, வரும் 7 ஆம் தேதி விடு முறை அல்ல.7ஆம் தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைத் தொகுப் பாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment