அருமைக் கழகத் தோழர்களே! வரும் 15ஆம் தேதி புதன் காலை 10 மணிக்குத் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சமூக நீதிக்கான அய்ந்து அம்சங்களை முன் வைத்து அறப்போராட்டத்தினை திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார்.
- ‘நீட்' தேர்வை ரத்து செய்க!
- சுகாதார, மருத்துவ உதவி ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு அளிப்பதை அடிப்படை உரிமையாக்குக!
- தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தருக!
- மத்தியத் தொகுப்பில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீட்டைத் தாமதிக்காதே!
- மருத்துவக் கல்லூரி இடங்களை மத்திய அரசின் தொகுப்புக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு - சமூக நீதிக்கு எதிரான அரசே! ஏதோ இது ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகுதான் இப்படி நடந்து கொள்கிறது என்று கருத வேண்டாம்.
தொடக்கம் முதலே சமூகநீதிக்கு, இடஒதுக்கீடுக்கு எதிரான கொள்கை உடைய கட்சியே பிஜேபியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.; எல்லாக் கால கட்டங்களிலும் இடஒதுக்கீடுக்கு எதிராகவே நடந்தும், செயல்பட்டும் வந்துள்ளது.
கடந்த முறை நடந்த பீகார் சட்டப் பேரவைத் தேர்தலின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பச்சையாகவே சொன்னாரே, இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று சொல்ல வில்லையா?
பீகார் மாநிலத் தேர்தல் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அவ் வாறு சொன்னபோது, தேர்தலில் பிஜேபிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், நான் அவ்வாறு கூறவில்லை என்று பல்டி அடித்தார்.
நேரடியாக இடஒதுக்கீட்டை நீக்கிவிட முடியாது என்ற நிலையில், குறுக்கு வழியில் அதன் வேர்களை வெட்டும் வேலையில் நயவஞ்சகமாக ஈடுபட்டு வருகிறது.
பாரதிய ஜனதா என்றாலே அது பார்ப்பன ஜனதாதானே, அதன் மூலகர்த்தாக்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தானே,எனவே, அவர் களுக்கே உரித்தான நயவஞ்சகத் தன்மையோடு இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிரீமிலேயர் என்பதுகூட நேர்முகமாக இடஒதுக்கீட்டை ஒழிக்க முடியாத நிலையில் கொல்லைப்புறம் வழியாக அதனை ஒழிக்கும் வழி என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் விடுதலைச் சிறுத்தை கள் ஏற்பாடு செய்த காணொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டது மிகவும் உண்மையாகும்.
அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் காணப்படாத பொருளாதார அளவுகோல், இடஒதுக்கீடு இத்தனை விழுக்காடுதான் இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் இல்லாத ஒன்று - இவற்றைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?
அதுவும் 'நீட்' என்பது திட்டமிட்டே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவ நுழைவைத் தடுக்கும்- சமூகநீதியின் கழுத்தை அறுக்கும் கொடுவாளாகும்.
பன்னிரெண்டு வருடம் (+2) படித்து, அதில் தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்களைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து இவர்களாக தனியாக ஒரு தனித் தேர்வு நடத்துவது எந்த ஊர் நியாயம்?
+2 கல்வியைக் காயடிக்கும் காரியம்தானே. +2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவோர் 'நீட்'டில் அதிக மதிப்பெண் பெறுவதும், +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோர் 'நீட்' தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுவதும் எதைக் காட்டுகிறது?
+2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டபோது பிற் படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், கிராமப்பகுதிகளைச் சேர்ந்தோர் பெற்ற இடங்கள் எத்தனை? 'நீட்' வந்த பிறகு பெற்ற இடங்கள் எத்தனை? அதிலும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை? என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த 'நீட்' தேர்வின் இரகசியம் என்னவென்று தெரியுமே!
இரண்டாவதாக, அரசுத் துறைகளும், பொதுத்துறைகளும் படுவேகமாகத் தனியார் மயம் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில் இடஒதுக்கீடு என்பது தனியார்த் துறையிலும் அளிக்கப்பட வேண்டும் என்பது சொல்லாமலேயே நடைபெற வேண்டிய ஒன்று.
தனியார்த் துறை என்பது ஆகாயத்தில் இருந்து குதித்த ஒன்றல்ல. அரசின் உதவி பல வகைகளிலும் அதில் உண்டு. நிலம், நீர், மின்சாரம், கடன் உதவி என்று அனைத்தையும் பெற்றுக் கொண்டு, அதே நேரத்தில் அரசின் கொள்கையான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளுவது சட்டப்படியும் தவறு - நியாயப்படியும் தவறே!
இதே முதலாளிகள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் தொடங்கும்போது, அந்த நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் ஒப்புதல் தருகிறார்கள் - ஆனால் இந்தியாவில் மட்டும் அதைப் புறக்கணிக்கிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன? ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்கிறார்களா?
அதேபோல, குடிமக்களின் அனைத்துவகை மருத்துவ உதவியை யும் அளிப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை- பெறுவது குடி மக்களின் உரிமை என்ற முழக்கம் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தின் அடி நாதங்களுள் ஒன்றாகும். உலகில் பல நாடுகளிலும் இது உள்ளது.
மாநிங்களிலிருந்து மத்திய அரசு பெற்றுக் கொள்ளும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாது என்பது எவ்வளவுப் பெரிய மோசடி - தில்லு முல்லுத்தனம்.
மருத்துவக் கல்லூரி இடங்களை மத்திய அரசின் தொகுப்புக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதுதான் சட்டத்தின் நிலையுங்கூட.
இவற்றை எல்லாம் வலியுறுத்திதான் நாளை மறுநாள் (15.7.2020) புதன் காலை 10 மணிக்கு அறப்போராட்டத்தினைக் கழகத் தலைவர் அறிவித்துள்ளார்.
கரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையைப் பயன்படுத்திக் கட்டுப்பாடாக மாணவர்களும், பெற்றோர்களும், சமூகநீதியாளர்களும் இந்த அறப்போராட்டத்தை இந்தக் கால கட்டத் தில் வெற்றிகரமாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இடையில் ஒரே நாள் கழகத் தோழர்களே ஆயத்தமாவீர்! பொறுப்பாளர்களே, தோழர்களைத் தொடர்பு கொண்டு வெற்றியாக்கித் தாரீர்! தாரீர்!!
No comments:
Post a Comment