ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் :
உ டன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்
நீடாமங்கலம் - சமபந்தி போஜனத்தில் சாப்பிட்டதற்குத் தண்டனை தந்த கொடுமை
காங்கிரஸ் மாநாடுகளில் அந்நாளில் எல்லா ஜாதி யினரும் சமபந்தி போஜனம் செய்ய அனுமதிப்பதில்லை என்பதைவிட, தப்பித்தவறி யாராவது தெரிந்தோ தெரியாமலோ அந்த மநாட்டு பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் என்ன கொடுமை நடக்கும் - நடந்தது என்றதற்கு 1937இல் தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தில் காங்கிரஸ் மாநாட்டில் நடைபெற்ற ஒரு கொடுமை ரத்தக்களரி வரவழைக்கும் கொடுமையாகும்!
(இதுபற்றி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் நீலகண் டன் அவர்கள் ஒரு ஆராய்ச்சி - தரவுகளைத் தேடிப் பிடித்து அருமையான நூல் ஒன்றையே எழுதியுள்ளார்!
23.12.1937 நீடாமங்கலத்தில் (இன்றைக்குத் திருவாரூர் மாவட்டம்) தென்தஞ்சை மாவட்ட மூன்றாவது அரசியல் சட்ட மாநாட்டின் முற்பகல் நடவடிக்கைக்குப் பின் “சம பந்தி போஜனம்“ நடைபெற்றது. அதில் ஆதிதிராவிடர் கள் போஜனம் அருந்தினார்கள். ஆதிதிராவிடர்கள் மூவர் அந்தப் பகுதியில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள் என்ற செய்தி தெரிந்த உடனே காங்கிரஸ் பிராமணர் களின் பக்தரான - டி.கே.பி.சந்தான இராமசாமி உடையார் என்ற காங்கிரஸ் பெரிய மிராசுதார், தனது ஏஜெண்ட் சபாபதி உடையாரை ஏவி, சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதிதிராவிடர்களை வெளியேற்றி விசாரிக்க உத்தர விட்டார். அந்த இடத்திலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதிதிராவிடத் தோழர்கள் செம்மையாக அடித்து வெளியேற்றப்பட்டார்கள்.
அவ்விடம் வந்திருந்த போலீஸ் தலைமை அதிகாரி சமாதானம் செய்து வெளியேற்றி விட்டார்.
அதில் ஒரு ஆதிதிராவிடத் தோழர் அடி தாங்க முடியாமல் பக்கத்திலிருந்த வெண்ணாற்றில் விழுந்து அக்கரை ஏறி ஓடினார்!
அதோடு விவகாரம் முடிந்துவிடவில்லை. வர வேற்புக் கமிட்டித் தலைவர் புது தேசபக்தர் சந்தான இராமசாமி உடையார் சமபந்தி விருந்தில் கலந்து போஜனம் அருந்திய ஆதிதிராவிடர்கள், அனுமந்தபுரம் அய்யர் பங்களா ஆட்கள் என்று விசாரித்துத் தெரிந்ததும் அய்யர் அவர்களுக்கு இந்த செய்தியைத் தெரிவித்தார். அனுமந்தபுரம் பண்ணை ஏஜெண்ட் கிருஷ்ணமூர்த்தி அய்யர். மறுநாள் காலையில் - மாநாட்டில் சாப்பிட்ட அந்த "ஆதிதிராவிடத் தோழர்களை கொண்டு வந்து கட்டிப்போட்டு தலையை மொட்டை அடித்து, சாணிப் பால் போட்டு செமையாக அடித்துக் கரும்புள்ளி செம் புள்ளி குத்தி சில கொடுமைகளைச் செய்தனர்.
அவர்களது தேசபக்தி இது! இதனை அன்று நமது இயக்கத்தவரான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் அவர்கள் ‘குடிஅரசு’ ஏட்டுக்கு எழுதி - படம் பிடித்தனுப்பி பெரிய அளவில் கண்டனம் தெரிவித்தார், அவர்கள் இவர்கள் மீதும், இயக்கத்தின் மீதும் வழக்குப் போட்டு தஞ்சையில் நடந்த இவ்வழக்கில் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் வாதாடி வெற்றி யைப் பெற்றுத் தந்தார்.
மொட்டை அடிக்கப்பட்ட ஆதி திராவிட தோழர்கள்
- “பள்ளப்பரியாரி” கதிர்வேல் மகன் ஆறுமுகம்
- முக்கட்டை வேளாங்கண்ணி மகன் த.பளிரவாயன்
- தட்டி அருளானந்தம் மகன் தபஸ் மாணிக்கம்
- தகவல் விடுதலை, 3.1.1938
எவ்வளவு ஈவிரக்கமற்ற கொடூரம். சமபந்தியா அது? சுயமரியாதை இயக்கப் போராட்டம் நடந்த பிறகே விடியல்!
(தொடரும்)
No comments:
Post a Comment