உடன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்
சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை காந்தியாரின் மத்தியஸ்திற்கு அப்போது எடுத்துச் செல்லப்பட்டது. அவர் கூறிய தீர்ப்பு என்ன தெரியுமா? ஒன்றாக உண்ணலாம். ஆனால் "பிராமண சமையல்காரர் - பரிமாறுபவர் தான் இருக்க வேண்டும்" என்று மீண்டும் ஜாதி உயர்வுக்கு ஒரு புது வாய்ப்பைக் கொடுத்தார். இதை டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவோ, தந்தை பெரியாரோ ஏற்க மறுத்துவிட்டனர்.
அப்போது - காங்கிரசில் இருந்தபோதே (1924இல்) சேலத்தில் ஒரு (காங்கிரஸ்) பொதுக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் கூறினார்.
“Speaking at a public meeting at Salem, E.V.Ramasami Naicker said they must settle the Brahmin question even while the British Supremacy lasted. Otherwise they would have to suffer under to tyranny of what he called “Brahminocracy” - A Hundred years of the Hindu, Page 337.
இதன் தமிழாக்கம்:
இந்த விவாதத்திற்குரிய பிரச்சினை - ஜாதி வேறுபாடு - பார்ப்பன ஆதிக்கப் பிரச்சினை - பிரிட்டிசார் (ஆட்சி) அதிகாரம் இருக்கும்போது ஒரு வகையாக தீர்க்கப் பட்டாக வேண்டும்; இல்லையேல் “பார்ப்பன நாயக“த் தின் கீழ் வருங்காலத்தில் தாங்கள் துன்பப்படும் நிலை ஏற்படும். (கவனிக்க: ஒரு புது ஆங்கில வார்த்தையை பெரியார் உருவாக்கித் தந்தார் - பிராமினோகிரசி Brahminocracy)
- ‘இந்து’ இங்கிலீஷ் நாளேட்டின் நூற்றாண்டு மலர், பக்கம் 337
சேரன்மாதேவி தேசிய குருகுலப் போராட்டத்தினால் அக் குருகுலமே நடைபெறவில்லை; சில மாதங்களில் குற்றாலம் அருவியில் குளிக்கையில் வ.வே.சு. அய்யரும் வழுக்கி விழுந்து மரணமுற்றார் என்பது வரலாறு!
அது மட்டுமா? ஒவ்வொரு ஆண்டும் மூன்று, நான்கு நாட்கள் நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு களில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு ஒன்றாக அமர்ந்து உண்ணும் வாய்ப்பே கிடையாது. பார்ப்பனர் களுக்குத் தனிப் பந்தி; பார்ப்பனரல்லாதார்க்குத் தனி இடம் - தனிப் பகுதி என்கிற முறைதான் பல ஆண்டுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கேட்டால் அவரவர்களின் ஆச்சாரம், அனுஷ்டானம், சனாதனம் மதிக்கப்படுவதற் காகவே இந்த ஏற்பாடு என்று கூறின தேசியம் பேசிய அகில இந்திய கட்சிகள்!
அந் நாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்குக் கூட - மகாராட்டிரத்தில் இந்த சமமாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து, ஒரே உணவு உண்ணல் ஏற்பாடு கிடையாது. பார்ப்பனர்களுக் குத் தனியாக ஒரு ஏற்பாடு,
எஸ்.வி.ராஜதுரை - கீதா எழுதிய “பெரியார்-சுயமரி யாதை- சமதர்மம்“ என்ற நூலில் (பக்கம் 162) குடிஅரசின் 6.9.1931 தலையங்கத்திலிருந்து ஒரு பகுதியில் சுட்டிக் காட்டுகிறார்கள்.
“சுயமரியாதை இயக்கம் தேசத் துரோகமானது என்று தேசியவாதிகள் செய்து வந்த பிரச்சாரம், வகுப்புரிமை யைப் பயன்படுத்தி முன்னேற்றமடைந்த பார்ப்பனரல்லா தார் செய்த துரோகம் ஆகியவற்றை முறியடித்து வகுப்பு வாரி உரிமை, உள்ளூராட்சிகளில் தாழ்த்தப்பட்டோ ருக்கும் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை நிலை நிறுத்துவதில் வெற்றி பெற்று விட்டது. ஜாதி ஆணவம், அகம்பாவம் ஆகியவை நாட்டில் குறைந்து வந்துள்ளன. பார்ப்பனர் உட்பட எல்லா ஜாதி மக்களும் இன்று கூச்சமில்லாமல் சேர்ந்துண்ண முடிகிறது. ஈரோடு சுயமரியாதை மகாநாட்டிலும், விருதுநகர் சுயமரியாதை மகாநாட்டிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே பந்தி யில் சமமாக உட்கார்ந்து சாப்பிட்டதை (1930, 1931) இயக்க எதிரிகளும்கூட இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந் தார்கள். எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் - பார்ப்பன ரல்லாத, சைவர்கள் அல்லாத - “நாடார்கள்” சமையல் செய்தார்கள். ஈரோட்டில் “பறையர்கள்” முதல் எல்லா ஜாதியினரும் எல்லா மதக்காரரும் பரிமாறினார்கள்.
(எந்த அரசியல் மாநாட்டிலும் (அன்று அரசியல் மாநாடு என்று சொல்லப்பட்டு வந்தவை காங்கிரஸ் மாநாடுகளாகும் - எஸ்.வி.ஆர். அடிக்குறிப்பு).
எந்த அரசியல் மாநாட்டிலும் “பார்ப்பனரல்லாதார்” சமையல் செய்தோ, “தீண்டாத ஜாதியார்” பரிமாறியதோ, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எல்லோரும் ஒரே பந்தியில் இருந்து சாப்பிட ஏற்பாடு செய்ததோ இதுவரை நாம் அறிந்து நடந்ததேயில்லை.”
- இதன் கீழ் எஸ்.வி.ஆர்-கீதா எழுதியுள்ள ஓர் அடிக்குறிப்பு மிகவும் கவனத்திற்குரிய செய்தியாகும்.
“இந்தியாவின் துவக்க கால கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவரும், பம்பாய் தொழிற்சங்கத் தலைவருமான ஜோக்லேகர் - 1927 டிசம்பர் 30இல் சென்னையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு கண்டனத்திற்குப் பிறகே “பிராமண சபா” உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
1928இல் பம்பாயில் நடந்த தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, கம்யூனிஸ்ட் தொழிற் சங்கத் தலைவர் மிராஜ்கர், பம்பாய் நகராட்சியானது சோறும் குழம்பும் சமைக்க ஒரு பார்ப்பன சமையல் காரரை அமர்த்தப் போகின்றது என்றும், அவர் சமைத்த உணவுதான் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஜோக்லேக்கரோ ஒருபடி மேலே சென்று சமைக்காத உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரினார். ஏனெனில் மற்றவர்கள் சமைத்ததை சாப் பிடாத “பய்யாக்களும்“ அதாவது மேல் ஜாதிக்காரர்களும் இங்கு இருக்கிறார்கள். நாங்களும் கூட மற்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் தயாரிக்கும் உணவைச் சாப்பிடுவதில்லை. எனவே அவர்கள் (நகராட்சி நிர்வாகம்) எங்களுக்கு அரி சியை மட்டும் கொடுக்கட்டும். எங்களுக்கான முறையில் நாங்களே சமைத்துக் கொள்கிறோம். (SJI170) வேலை நிறுத்தப் போராட்டத்தின் போதும் அத்தலைவர்கள் ஜாதீய நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே இருந்தனர். ஜாதி ஒழிப்பு என்பது கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைத் திட்டத்தில் இடம் பெற்றதே இல்லை” (பக்கம் 162).
(இன்று நிலைமை வெகுவாக மாற்றம். அனைத்து அகில இந்திய கட்சிகளிலும் மாறியுள்ளது. முதலில் அதற்கு வழித் திறந்தது சுயமரியாதை இயக்கமும் - தந்தை பெரியாருமே!)
இப்படி உடன் அமர்ந்து உண்ணும் ஜாதி பேதமற்ற நிலையை ஏற்படுத்த தீண்டாமை, பார்க்காமை, நெருங் காமை - உடன் உண்ணாமை என்ற அந்த நோய் எங்கே எந்த ரூபத்திலிருந்தாலும் தந்தை பெரியார் தனது மனித உரிமை, சமத்துவப் போரை அறப்போரைத் தொடங் கவே செய்தார்!
(தொடரும்)
No comments:
Post a Comment