காணொலியில் கழகத் தலைவர்:  10 விழுக்காடு இடஒதுக்கீடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

காணொலியில் கழகத் தலைவர்:  10 விழுக்காடு இடஒதுக்கீடு!

28.2.2020 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்டக் கல்லூரி மாணவர் மத்தியில் காணொலி மூலம் ஆற்றிய உரையில் சில முக்கியப் பிரச்சினைகள்மீதான கருத்தினைத் தெரிவித்தார்.


(1) குறிப்பாக உயர்ஜாதியில் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பற்றியது.


இடஒதுக்கீட்டின் அளவு மொத்தத்தில் 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது, சொல்லிவிட்டது என்று கிளிப்பிள்ளைபோல ஒப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே இந்த விடயத்தில் அது மீறப்பட வில்லையா? என்ற கேள்வி மிகவும் முக்கியமானது.


பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக் காடு என்ற சட்டம் (103ஆம் திருத்தம்) வேகமாக நிறைவேற்றப் பட்டதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?


ஏற்கெனவே இடஒதுக்கீடு 50 விழுக்காடு அளவுக்கு உள்ளது. இப்பொழுது 10 விழுக்காட்டைச் (EWS) சேர்த்தால் இடஒதுக்கீட்டின் அளவு 60 விழுக்காடாக உயரவில்லையா? என்பதுதான் அந்தக் கேள்வி.


இந்தக் கேள்வியை யாரும் எழுப்பவில்லையே ஏன்? எந்த ஊடகமும், ஏடுகளும் இதுகுறித்து விமர்சனங்களையோ, கருத்துகளையோ பதிவு செய்யாதது ஏன், ஏன்?


இது திறந்த போட்டியிலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டது என்ற சமாதானம் சரியாகுமா? 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சட்டம் செய்த பிறகு, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு விழுக்காட்டோடுதானே இணைத்துப் பார்க்க வேண்டும், கூட்டிப் பார்க்க வேண்டும்.


(2) இரண்டாவதாக இந்த 103ஆம் சட்ட திருத்தம் என்பது சட்டப்படி சரியானதா என்பது முக்கிய கேள்வியாகும்.


நாடாளுமன்றத்தில் போதிய அளவு விவாதம் நடத்தப் பட்டதா? மாநில அரசுகளின் கருத்துக் கேட்கப்பட்டதா?


(3) மூன்றாவதாக சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்ற அளவுகோல்தான் அரசமைப்புச் சட்டம் 15(4), 16(4)இல் இடம்பெற்றிருக்கும்போது இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அதனைப் புறந்தள்ளிவிட்டு பொருளாதார அளவுகோல் வந்து குதித்தது எப்படி?


இடஒதுக்கீட்டுக்காக முதல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொந்தளித்து, திரண் டெழுந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மேற்கொள் ளப்பட்டபோது, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இட ஒதுக்கீடு என்பதில் பொருளாதார ரீதியாகவும் சேர்க்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக வெறும் அய்ந்தே அய்ந்து வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்து, முதல் சட்டத்திருத்தத்திலேயே முற்றிலும் நிராகரிக்கப்பட்ட ஒன்றை 70 ஆண்டுகளுக்குப் பிறகு திணித்ததன் பின்னணி என்ன?


நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1991-இல் பொருளா தார அடிப்படையில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தபோது, உச்சநீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்திடவில்லையா? (1992).


பொருளாதார அளவுகோல் என்பது சட்டப்படி தவறானது என்று தெளிவாகவே தெரிந்தபிறகு இப்படி அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது ஏன்?


2019 ஜனவரி 7 அன்று மத்திய அமைச்சரவையில் முடிவு, எட்டாம் தேதி மக்களவையில் நிறைவேற்றம், 9ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றம், 12ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல், 17ஆம் தேதி மத்திய சமூக நலத்துறை ஆணை, அன்றே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஒப்புதல் ஆணை, 19ஆம் தேதி மத்திய பணியாளர் துறை ஆணை என்று புயல் வேகத்தில் இந்த சட்டம் நிறைவேற் றப்பட்டதே எப்படி?


இதற்குமுன் இதுபோல் ஒரு சட்டம் மின்னல் வேகத்தில் நிறைவேற்றப்பட்டதுண்டா? இதில் அடக்கவே முடியாத பேராதரவு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது ஏன்?


நீண்ட காலமாக பார்ப்பனர்கள் கூறிவந்ததுதான் இந்தப் பொருளாதார அளவுகோல்! பொருளாதார அளவுகோல் என்ற ஒட்டகம் சமூகநீதிக் கூடாரத்துக்குள் புகுந்து விட்டால், அதன் பின் கூடாரமே காலிதான்.


பொருளாதார அளவுகோல் என்று வந்து விட்டால் பார்ப்பனர்கள் எளிதாக உள்ளே புகுந்து விடுவார்கள்; காரணம் எங்கள் தொழில் பிச்சை எடுப்பதுதான் என்று சொல்லி விடுவார்கள் என்று தந்தை பெரியார் சொன்னதுண்டே!


இப்பொழுதுகூட மும்பையில் பொருளாதாரத்தில் நலிவுற் றோருக்கான சான்றிதழ் ரூபாய் 2000 செலவில் எளிதாகப் பெற முடிகிறது என்ற தகவல் வெளிவரவில்லையா!


இதில் இன்னொன்றும் மிக முக்கியமானது. இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் தகுதி, திறமை அடியோடு கெட்டுப்போகும் என்று சொன்னவர்கள் யார்? இந்தப் பார்ப்பனர்கள்தானே!


அப்படி இருக்கும்போது பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால், அப் பொழுது மட்டும் தகுதித் திறமைக்குக் கேடு வராதா என்ற கேள்விக்கு அறிவு நாணயத்துடன் பதில் சொல்லுவார்களா?


பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்களின் மய்யப் புள்ளி என்பது பச்சையான சுயநலமே! கடந்த காணொலிக் காட்சியில் கழகத் தலைவரால் இவை விளக்கப்பட்டன.


No comments:

Post a Comment