'விடுதலை' வீரனே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 1, 2020

'விடுதலை' வீரனே!


'விடுதலை'யே - நீ


வீழா வீரன்!


விடுபடவே முடியாது


வேதிய ச(வ)ழக்கிலிருந்து


என்று


வீராப்பு டமாரம்


அடித்த


வீணர்களின்


வேர்ப்புரம் சென்று


வீழ்த்திக் காட்டிய


வேங்கைப் புலி நீ!


 


மூல பலத்தை


மோதியழித்த


மூளைப்பலம் கொண்ட


முப்படைத்தலைவன் நீ!


 


படைத்தல், காத்தல்,


அழித்தலெனும்


முப்பரிமாணங் கொண்ட


'மும்மூர்த்தியும்'


நீயேதான்!


ஒடுக்கப்பட்டோரின்


உதிரத்தில் - நீ


மூட்டிய தீச்சுடர்


மூடத்தனத்தின்


முகாமை அழித்தது!


 


பகுத்தறிவு வெளிச்சப்


பாதையைத் தந்தது!


பெண்ணடிமை எனும்


பீடத்தின் - பெரும்


பிடரியை நொறுக்கியது!


கல்லாமை எனும் காரிருள்


கரியைத் துடைத்தது


சமூகநீதி யென்னும் - புது


சரித்திர


சமுத்திரத்தை


உருவாக்கி


சரிந்து வீழ்ந்த


எம்மினத்தின்


சமத்துவக் கப்பலை


பயணிக்க வைத்தது!


 


நெருக்கடி


நெருப்பாறுகளை


நெட்டித் தள்ளிய


நீண்ட சரிதம் - உன்


மார்பில் பதிந்த


மாணிக்கப்பரல்கள்!


 


விட்டில் பூச்சிகளாய்


ஒடிந்து கிடந்த


எங்கள் இறக்கைகளுக்கு


விசை விளக்கேற்றி


விண்ணிலே பறக்க


வைத்த


விடிவெள்ளி நீ!


 


தரைதட்டும் அரசியல்


கப்பல்களை


தலையிட்டு


தன்வழி திருப்பிய


மாலுமியும் நீயே!


 


உன் ஆசான் யார்?


உலகப் புரவிக்கு


இலாடம் கட்டி


இலட்சிய புரி நோக்கி


உசுப்பி விட்ட


உலகத் தலைவராம்


தந்தை பெரியாரே!


 


அறிவுசார்


'விடுதலையே!'


ஆண்டு எண்பத்தைந்தை


முடித்தாய்!


அதைத் திருப்பிப்


போட்டால்


'அய்ம்பத்தெட்டு ஆண்டு


ஆசிரியர்'


எங்கள் தலைவர் வீரமணி!


 


விஞ்ஞானத்தையும்


வசப்படுத்தி விட்டாய்!


காலைப் பொழுதில் - நீ


கூவிக் கூவி


கண்மூடிகளை


எழுப்புக!


எழுப்புக! - நீ


காட்டும் வழி தடத்தில்


பயணிக்கும் மனிதம்!


 


உன்னூற்றாண்டு


மேடையில்


உலகம் உனை வாழ்த்தும்!


உம் பணியாம்


விரலைப்பற்றி


உழைப்பதன்றி


எந்நன்றி


செய்வோம் யாமே?


- கவிஞர் கலி. பூங்குன்றன்


No comments:

Post a Comment