நேர்த்திக்கடன் என்ற பெயரால் தலையில் தேங்காய் உடைப்பதை ஆதரிப்பதா?
மத வழக்கப்படி நேர்த்திக் கடன் என்ற பெயரால் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பதைத் தடை செய்ய முடியாது என்றும், அது மத வழக்கம் - நேர்த்திக் கடன் என்றும், அதில் நீதி மன்றம் தலையிட முடியாது என்றும் மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அதிர்ச்சிக்குரிய தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டு மகாதானபுரத்தில், மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆடி18 மற்றும் 19ஆவது நாட்களில் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
இந்தக் கோவிலில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பது என்கிற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மூடத்தனம் நடந்து கொண்டுள்ளது. இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்கூட நடத்தியதுண்டு.
ஆபத்தான செயலுக்குத்
தடை விதிக்கக் கோரி வழக்கு
இந்த ஆபத்தை விளைவிக்கும் நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் நியாயமான வழக்கொன் றினை மகாலட்சுமி மும்முடியார் குல நல சங்கம் சார்பில் தொடுக்கப்பட்டது.
தலையில் தேங்காய் உடைப்பதால் பல ருக்கும் காயங்கள் ஏற்படுகின்றன, உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நீதிபதியின் தீர்ப்பு
இது குறித்து மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஆர். சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பு வருமாறு:
“பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வழக்கம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் மட்டுமல்ல; தமிழகத்தில் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது.
தலையில் தேங்காய் உடைப்பதுபோல பக்தர்கள் தங்களை வருத்திக் கொள்ளும் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன.
குறிப்பாக தீ மிதித்தல் எனும் வழிபாடு தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளது. இதுபோல் “அலகு குத்துதல்” வழிபாடும் உள்ளது.
எங்கெல்லாம் தமிழ்க் கடவுள் முருகனுக்குக் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் அலகு குத்தும் வழிபாடு நடக்கிறது.
நல்லது நடக்க வேண்டும் என்பதற்கான
நேர்த்திக் கடனாம்!
தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டி அது நிறைவேறியபின் நேர்த் திக் கடனாக உடலை வருத்திக் கொள்ளும் இத்தகைய வழிபாடுகளை பக்தர்கள் மேற் கொள்ளுகின்றனர்.
மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையால் வெவ்வேறு முறைகளில் வழிபாடுகளை மேற் கொள்ளுவது பழங்காலத்திலே இருந்துள்ளது.
‘கலிங்கத்துப் பரணி’ நூலில் போரில் வென்றபின் காளி தெய்வத்துக்குப் போர் வீரன் தலையை வெட்டி காணிக்கையாக அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி பக்தர்களின் விருப்பப்படி நிறைவேற்றிக் கொள்ளும் வழிபாடு, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நடத்தி வருகின்றனர். ஒரு சிலருக்குக் காயங்கள் ஏற்படலாம். கடவுள் வழிபாட்டில், பூஜைக் காரியங்களில் இந்த நீதிமன்றம் எந்தக் கொள்கையையும் பரப்பவில்லை. தலையில் தேங்காய் உடைக்க வேண்டும் என்று நிர்ப் பந்திப்பதாக பக்தர்கள் தரப்பில் எந்த புகாரும் வரவில்லை.
எது பாரம்பரியம்?
எனவே பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் வழிபாட்டு முறையை நிறுத்தும்படி உத்தர விடுவது தேவையற்றது; நியாயமற்றது; மதசுதந்திரத்தில் தேவையின்றி குறுக்கிடுவது போலாகி விடும். மனு தள்ளுபடி செய்யப் படுகிறது” என்று நீதிபதியால் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதியின் இத்தீர்ப்பு அதிர்ச்சிக்குரியது. மனித உயிருக்கு ஆபத்து களை விளைவிக்கக் கூடிய ஒரு செயலுக்கு அரண் அமைப்பதாக உள்ளது.
கலிங்கத்துப் பரணியில் கூறப்பட்டுள்ளதை
இன்று செய்யலாமா? நீதிமன்றம் அனுமதிக்கிறதா?
நீண்ட காலமாக ஒன்று நடைபெற்று வருவது என்பதாலேயே அது ஏற்றுக் கொள் ளப்பட முடியுமா? மாண்புமிகு நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி கலிங்கத்துப் பரணியில் போரில் வென்ற போர் வீரன் தலையை வெட்டி காணிக்கை அளித் திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாரே அந்த வழக்கத்தை இன்றைக்கு மேற் கொள்ள சட்டம் அனுமதிக்கிறதா?
மெத்த படித்த நீதிபதிகள் அமர்ந்துள்ள உயர்நீதிமன்றம் அனுமதிக்குமா என்ற கேள்வி எழுமே!
குழிமாற்று விழா தடை செய்யப்படவில்லையா?
இதே மதுரைக்கு அருகில் (பேரையூரில்) குழிமாற்றுத் திருவிழா என்ற கோவில் திருவிழா நடைபெறவில்லையா? குழந்தை யைக் குழிக்குள் போட்டு மூடி, கொஞ்ச நேரம் கழித்து, வெளியே எடுப்பது என்ற கொடூர நேர்த்திக் கடன் வழக்கில் இருந்ததுதான். அதற்காக அதனை தடை செய்யவில்லையா?
புதுச்சேரி மாநிலம் அம்பகரத்தூரில் காலங் காலமாக நடந்து வந்த எருமைக்கிடா வெட்டு நிகழ்ச்சியை அரசு சட்டம் போட்டுத் தடுக்கவில்லையா?
நரம்பியல் டாக்டர்
கூறுவது என்ன?
இதில் மிகவும் முக்கியமான கருத்து - நரம்பியல் டாக்டர்கள் தலையில் தேங்காய் உடைப்பது குறித்து என்ன கூறுகிறார்கள்?
சென்னை - பிரபல நரம்பியல் டாக்டர் என் திலோத்தமை கூறுகிறார்:
“தேங்காயைக் கையில் உடைக்கும்போது எலும்பு, சதை மட்டும்தான் உடைந்து பாதிப்பு ஏற்படும். ஆனால் தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும்... தலையில் உள்ள எலும் புடன் மட்டும் சிக்கல் நிற்காது. உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லி மாதிரி இருப்பதுதான்; ஒரு குழந்தையைக் குலுக்கினாலேகூட மூளை ஆடலாம்.
மூன்று வகையான
பாதிப்புகள்!
மூன்று வகையான பாதிப்புகள் ஏற்படலாம். அதிர்ச்சி (Concussion), கன்னிப் போதல் (Contusion), மூன்றாவது Neuronal Damage, Axonal Damage, Axonal என்பதுதான் அடிப் படை செல். அதாவது நரம்புகள் சிதறிப் போவது - பிய்ந்து போகும்.
உள்ளே இருக்கும் இரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம், இது உடனேயும் ஏற்படலாம். தாமதமாகவும் ஏற்படலாம் (ஹெமட்டோமா). மூளையின் உள்ளேயும் ஏற்படலாம், வெளியேயும் ஏற்படலாம்.
காலந்தாழ்ந்த நிலையில் கை, கால் செயல் படாமல் போகலாம். இதற்கு SDH (சப்டியூரல் ஹெமட்டோமா), EDH (Extradural Hema toma) என்று பெயர்.” இவ்வளவையும் கூறுவது ஒரு நரம்பியல் மருத்துவர் என்பது கவனமிருக்கட்டும். இவ்வளவுப் பெரிய ஆபத்துகளுக்கு இடமளிக்கக்கூடிய ஒன்றை, உயிருடன் விபரீத விளையாட்டு நடத்தப்படும் ஒன்றை - பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், பழக்க வழக்கங்கள் என்ற பெயரால், நீண்ட காலமாக நடந்து வருகிறது என்ற பெயரால், நேர்த்திக் கடன் என்ற பெயரால் அறிவியல் வளர்ந்த இந்தக் கால கட்டத்திலும் ஒரு உயர்நீதிமன்றம் அனுமதிப்பது - அங்கீகரிப்பது எவ்வளவுப் பெரிய விபரீதம்!
பிரபல நரம்பியல் டாக்டர் சொல்லும் விஞ்ஞான ரீதியான உண்மைகள் கற்றறிந்த நீதிபதி அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!
இவ்வளவு இருந்தும் மத நம்பிக்கையில், வழக்கத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறுவது சரியானதாகுமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்துக்கு விரோதம்
இந்திய அரசமைப்புச் சட்டம் 51A - h என்ன கூறுகிறது? மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்படவில்லையா?
தேவை மறுபரிசீலனை!
மாண்புமிகு நீதிபதி அவர்கள் அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டை உதறித் தள்ளி நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது என் பதற்காக மூடநம்பிக்கைகளுக்கு -அதுவும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு செயலுக்கு ஆக்கமும், ஆர்வமும், ஊக்கமும் அளிக்கும் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது ஆபத்தானது. நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
கி. வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
5.6.2020
மதுரைப் பேரையூரில் நடந்தது என்ன?
மதுரையையடுத்தபேரையூரில் ஆடி 18 விழா என்ற பெயரில் குழிமாற்றுத் திருவிழா என்ற ஒன்று நடைபெறுவது வழக்கம்.
வயதுக்கு வராத சிறுமிகளை கோவில் பூசாரி முன்னிலையில் சில சடங்குகளைச் செய்து குழி தோண்டிப் புதைப்பார்கள். சிறிது நேரம் கழித்து சிறுமியை வெளியில் எடுப் பார்கள். இவ்வாறு செய்தால் அந்தச் சிறுமி சீக்கிரம் பருவம் அடைந்து விடுவாள் என்ற நம்பிக்கையாம். 2002 ஆம் ஆண்டில் பேரை யூரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது - பெரும் சர்ச்சை கிளம்பியது. தமிழக அமைச்சர் துரைராஜ் என்பவரும் அந்தக் கோவில் திருவிழாவில் பங்கேற்றார்.
தமிழக அரசு தலையிட்டு அந்தத் திரு விழாவைத் தடை செய்தது - அமைச்சரின் பதவியும் பறிக்கப்பட்டது என்ற தகவலை கனம் நீதிபதி அவர்கள் அறிவார்களா? 400 ஆண்டு காலமாக நடைபெற்ற மக்களின் நம்பிக்கை சார்ந்த ஒன்று தடை செய்யப்பட்டது என்பதை உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களின் கவனத் துக்குக் கொண்டு வருகிறோம்.
பார்ப்பனர் எச்சில் இலைமீது உருளும் கொடுமையை
உச்சநீதிமன்றம் தடை செய்யவில்லையா?
கடந்த 500 ஆண்டுகளாக உருளுசேவா என்ற பெயரில், தட்சண கருநாடகா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் உள்ள குக்கு சுப்ரமணியசுவாமி கோயிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகள்மீது பக்தர்கள் உருண்டு புரண்டு வரும் நிகழ்ச்சி என்பது பொது ஒழுக்கம், அமைதி, சுகாதாரம் இவற்றிற்கு எதிரானது - அருவருப்பானது என்பதால் இதனை கருநாடக அரசு தடை செய்தது. (திரு.சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு)
தங்களுக்குள்ள வியாதிகள் எல்லாம் இந்த எச்சில் இலைகள்மீது புரண்டால் தானே குணமாகி விடும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக இப்படிச் செய்து வரும் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜாத்ரா (விழா)வாக அக்கோயில் கொண்டாடும் வழக்கம்.
இதனை கருநாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால், நெடுங்காலமாக நீடித்து வந்தது என்று காரணம் கூறி, அரசின் தடையை ரத்து செய்தது.
அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கருநாடக அரசு மேல்முறையீடு - செய்தது. அதன்மீது தான் உச்சநீதிமன்றம், கருநாடக நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தடை வழங்கியது. இது மாதிரி கருநாடகத்தில் மூன்று கோயில்களில் எச்சில் இலைமீது உருளும் காட்டுமிராண்டித்தனமான திருவிழா நடைபெறுகிறது; இது 500ஆண்டு கால பழைய பழக்க வழக்கம். எனவே, இதனை நிறுத்தக் கூடாது என்று இக் கோயில்கள் சார்பாக வழக்குரைஞர்கள் வாதித்தனர்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நறுக்கென்று நன்றாக ஒரு கேள்வியை எழுப்பினர். ‘‘தீண்டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று தெளிவாக மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டீஸ் திரு. மதன்லோக்கூர், ஜஸ்டீஸ் பானுமதி ஆகியோர் தீர்ப்பளித்தனர். (14.12.2014)
No comments:
Post a Comment