சமூகநீதிக்கு எதிரானது 'நீட்' தேர்வு!
சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகக் காணொலிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சூளுரை!
* வீ. குமரேசன்
சமூகநீதி முழுமைக்கும் எதிரான மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நடத்தப்படும் 'நீட்' தேர்வு. தகுதி, திறமையை தெரிவு செய்திடும் என அறிவிக்கப்பட்ட 'நீட்' தேர்வு ஊழலையும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை யையும்தான் ஊக்குவித்தது. கரோனா பொது முடக்க விதிகளுக்கு உட்பட்டு திராவிடர் கழகம் மாநிலம் தழுவிய 'நீட்' ரத்து போராட்டத்தை விரைவில் நடத்திடும் என சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகக் காணொலிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவித்தார்.
சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் 28.6.2020 அன்று முற்பகல் நடத்திய காணொலி சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று 'சமூகநீதி' எனும் தலைப்பில் ஒரு வரலாறு சார்ந்த கருத்துச் செறிவு மிக்க உரையினை ஆற்றினார்.
காணொலிக் கூட்டத்திற்கு சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவி சே.மெ. மதிவதனி தலைமை ஏற்றார். சேலம் மத்திய சட்டக் கல்லூரி மாணவி கவிஞர் பா. திவ்வியபாரதி வரவேற்புரை ஆற்றிட திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர்பாண்டியன், திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், மாநிலச் செயலாளர் மு. சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து, தொடக்கவுரையினையும் ஆற்றினார். தமிழர் தலைவரின் சிறப்புரைக்குப் பின்னர் சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். தமிழர் தலைவரின் உரையினை அடுத்து பல்வேறு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், விளக்க வேண்டுதலுக்கும் தமிழர் தலைவர் விரிவாக பதிலளித்தார். காணொலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு, பிற மாநிலங்கள், வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள், வழக்குரைஞர்கள், பல்வேறு கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
'சமூகநீதி' எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:
1950களில் என்னைப் போன்றவர்கள் சட்டக் கல்லூரிகளில் படித்த காலத்தில் திராவிட மாணவர் கழகத்தில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே ஒரு சட்டக் கல்லூரி சென்னையில் மட்டும்தான் இருந்தது. அந்த நிலையிலிருந்து இன்றைக்கு சட்டக் கல்லூரிகள் பல்கிப் பெருகி, சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகத்தில் உள்ள தோழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பலரும் சட்டக் கல்லூரிகளில் பயின்று வழக்கறிஞர்களாக, மேலும் சட்டம் சார்ந்த பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது; மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சமூகநீதிக் கொள்கையினால்தான். தந்தை பெரியார் தொடங்கிய சமூகநீதிக்கான போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு நீண்ட காலம் சமூகநீதிக் காலப் பயணம் தொடர்வதற்கான காரணம் இந்த மண்ணில் 'சமூக அநீதி' பன்னெடுங்காலமாக நீடித்து வந்ததுதான். அந்த சமூக அநீதியானது இன்னும் முற்றிலும் களையப்படவில்லை. சமூகநீதி 'அனைவருக் கும் அனைத்தும்' என்பதில் அடங்கி விடும். சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் தாம் தொடங்கிய 'குடிஅரசு' ஏட்டின் முதல் இதழிலேயே (2.5.1925) அனைத்து உயிர்களும் ஒன்று என எண்ணம் கொண்டு ஏட்டின் தலையங்க முகப்பிலே கவிதை ஒன்றைப் பிரசுரித்தார்.
"அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி யெவற்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சம், பொய், களவு, சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன்றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும்தானே!"
'அனைவருக்கும் அனைத்தும்'
'சமூக நீதியின்' அடிப்படைக் கருத்து என்பது அனைத்து மனித உயிர்களும் ஒன்றென்று கருதி, பாகுபாடு காட்டாமல், ஒன்றிணைந்து வாழும் போக்குதான். சிறுவயதில் தொடங்கி இளமைக் காலம் முழுவதும் 'அனைவரும் சமம்' என்ற சிந்தனையில் வாழ்ந்த பெரியார், பொது வாழ்க்கைக்கு வந்த நிலையிலும் அந்த சிந்தனைப்படி நடந்து கொண்டார். தனது சமுதாயப் பணி பரந்துபட்டு இருக்க வேண்டும் என்று கருதிய நிலையில் அன்றைய சென்னை ராஜதானி (1918) காங்கிரசு கட்சியின் 'சென்னை மாகாண சங்கம்' அமைப்பு தந்தை பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டது. பார்ப்பனர் அல்லாதார் நலன், மேம்பாட்டிற்காக பாடுபட்டு வந்த நீதிக்கட்சிக்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் சென்னை மாகாண சங்கம். காங்கிரசில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே பார்ப்பனர் அல்லாதார் நலத்திற்கு புறம்பாக காங்கிரஸ் (அன்றைய காங்கிரசு) செயல் படுகிறது என்பதைத் தெரிந்து ஆளும் நீதிக்கட்சியின் சமூகநீதிக்கான நடவடிக்கைகளை காங்கிரசில் தான் இருக்கும் பொழுதே ஆதரித்து வந்தார். காங்கிரசு முறையாக ஆதரித்துத் தீர்மானம் போடாத நிலையிலும், தான் கடைப்பிடித்த சமத்துவ, சமூகநீதிக் கொள்கை களின்படி கேரளத்தில் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு, போராட்ட வெற்றிக்குப் பாடுபடுகிறார். காங்கிரசிலிருந்து விலகிய நிலையிலும், நீதிக்கட்சியில் சேராமல், அதற்கு ஆதரவு நிலைப்பாட்டை மட்டுமே தந்தை பெரியார் தொடருகிறார். காரணம் அரசயல் அமைப்பில் அங்கம் வகித்தால் தனது சமூக நீதிக் கொள்கையை முழுமையாகப் பிரச்சாரம் செய்ய முடியாது எனக் கருதி சுயமரியாதை இயக்கமாகத் தனது சமுதாயப் பணியினைத் தொடர்கிறார் பெரியார்.
சமூகத்தில் பிறப்பில் பாகுபாடு அதன் காரணமாக ஏற்றத் தாழ்வுகள், தலைமுறைகளைக் கடந்தும் தொடரும் சமூக இழிவு என்பது இந்த மண்ணில் சாஸ்திர, சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது; இன்றும் தொடருகிறது மனு (அ) தர்மம் வலியுறுத்தும் ஏற்றத் தாழ்வு, பாகுபாடு சட்ட திட்டங்களாக இருந்த நிலையில் அதன் கூறுகள் இன்றைய சட்டத்திலும் தொடரும் நிலை உள்ளது. அனைவரும் சமம்; அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதை மறுப்பதுதான் மனு (அ)தர்மம். அதற்கு எதிரான நேர்மறைத் தத்துவம்தான் சமூகநீதி.
வகுப்புரிமை ஆணை
நீதிக்கட்சிக் காலத்தில் 1928இல் ஒடுக்கப்பட் டோருக்கும் உரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் எனக் கருதி வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது. விடுதலைக்கு முன்பான காலத்தில் வகுப்புரிமை ஆணையின் நடைமுறையானது பரந்துபட்டு வந்த நிலையில், விடுதலை பெற்ற நாட்டில் உருவான அரசமைப்புச் சட்டத்தால் அந்த வகுப்புரிமை ஆணை செல்லாது என தீர்ப்பளிக்கப்படும் நிலையில் மக்கள் போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கு கிறார்.
அதுவரை சமூகநீதிக்கு ஆக்கம் கூட்டி வந்த வகுப் புரிமை ஆணையின் தாக்கத்தை நீட்டித்து நிலைத்திட, அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்தின் மூலம் விதி 15(4) சேர்க்கப்பட தந்தை பெரியார் காரணமாகிறார். இதனால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சென்னை மாகாணத்தில் கிடைத்து வந்த சமூகநீதி பரந்துபட்டு இந்தியா முழுவதும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உருவானது. அந்த வகையில் தந்தை பெரியாரும், அன்றைய சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கரும், நாடு முழுவதுமான சமூகநீதிக்கு சட்ட ரீதியாக அடித்தளம் அமைத்தார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக அநீதியை வலியுறுத்தும் - பாகுபாட்டை, ஏற்றத் தாழ்வை நியாயப்படுத்தும் மத உரிமைகளுக்கு இடமளிக்கும் நிலையும் உள்ளது. சமூக நீதியை வலியுறுத்தும் விதிகளும் உள்ளது ஒரு வித்தியாசமான நிலையே!
'இடஒதுக்கீட்டிற்கு
உச்சவரம்பு என ஏதும் இல்லை!'
ஒடுக்கப்பட்ட மக்களின் விகிதம் மொத்த மக்கள் தொகையில் ஆகப் பெரும் பங்கு உள்ள நிலையில் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிக்கக் கூடிய இடஒதுக்கீடு வழிமுறைக்கு உச்ச வரம்பு என எதுவும் விதிக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லாத நிலையில் நாட்டின் உயர்மட்ட நீதி வழங்கும் அமைப்பான உச்சநீதி மன்றம் இடஒதுக்கீடு வரம்பினை 50 விழுக்காடு என நிர்ணயித்து இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம் பானது. இந்திய அரசமைப்புச் சட்டம் அரசின் அங் கங்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றிற்கு தனித் தனியே அதிகாரங்கள், அந்த அதிகா ரங்களுக்கு வரம்பு, ஓர் அங்கத்தின் செயல்பாடு பிற அங்கங்களின் செயல் பாட்டில் குறுக்கீடு, ஆதிக்கம் செலுத் துவதாக இருக்கக் கூடாது (Separation of Powers) என்பதைத் திருத்த முடியாத அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டமைப் பாகக் கூறுகிறது. இந்த நிலையில் சமூகநீதிக்குப் புறம்பாக சட்டமன்றங்கள் முடிவு செய்ய வேண்டியதை 'இடஒதுக் கீட்டிற்கு வரம்பு 50 விழுக்காடு' என நீதித் துறை நிர்ணயிப்பது அரசமைப்பு சட்ட அடிப்படைக் கட்டமைப்புக்கு புறம்பானதே. இத்தகைய நிலைமைகள் இன்றும் தொடர்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில், சமூகநீதி மண்ணாகத் திகழும் மாநிலத்தில் திராவிடர் கழகம் பாடுபட்டதால், அக்கறை எடுத்துக் கொண்டு போராடியதன் காரணமாக இடஒதுக்கீடு 69 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது. இந்த சமூகநீதி நாடு முழுவதும் பரவிட வேண்டும். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமூகநீதி காப்பாற்றப் பட வேண்டும்.
இடஒதுக்கீட்டிற்கு பொருந்தாத
பொருளாதார அளவுகோல்
அரசமைப்புச் சட்டப்படி இடஒதுக்கீடு என்பது சமூகநீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படை, பின்தங்கிய நிலை இடஒதுக்கீட்டிற்கு பொருந்தாது என்பது நீண்ட விவாதத்திற்குப் பின் முடிவாக்கப்ட்டது. இதுதான் சமூகநீதி வழங்கலுக்கான இடஒதுக்கீட்டிற்கு அடிப்படை. சமூகநீதி என்பது அரசமைப்பு சட்ட அடிப்படைக் கட்டமைப்பாகும். இதனை மாற்ற அரசின் எந்த அங்கத்திற்கும் அதிகாரம் கிடையாது. சமூகநீதித் தத்துவத்தை கேலியாக்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டை மத்தியில் ஆளும் இந்துத்துவா கருத்தியல் கொண்ட பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்து நடைமுறைப்படுத்த முனைகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்த 'ரிட்' மனுவிற்கு, அரசமைப்பு சட்ட அடிப் படைக் கட்டுமானத்திற்கு புறம்பான மத்திய அரசின் பொரு ளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு இதுநாள் வரை இடைக் காலத் தடையினை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசின் அங்கங்கள், சட்ட விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கையில் இறங்கலாமா? 2006ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டம் 93ஆம் முறையாகத் திருத்தப் பட்டு மத்திய கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடும் வழிமுறையை ஏற்படுத்தியது. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறும் அனைத்திய மருத்துவக் கல்வித் தொகுப் பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப் பட்டு வருகிறது. மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் மருத்துவப் படிப்புக்கான இடங்களிலும் அந்தந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக் கீட்டை நடை முறைப்படுத்தாத அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதிக்கே ஒரு சவாலாக இருக்கிறது.
சமூகநீதிக்கு எதிரான 'நீட்'
மருத்துவக் கல்வியில், ஒடுக்கப்பட்ட, கிராமப்புற ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த படித்திட முடியாத அளவில் தகுதி, திறமை பெயரால் 'நீட்' நுழைவுத் தேர்வு கடந்த பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமூகநீதிக்கு எதிரானது 'நீட்' தேர்வு. சமூக நீதியின் பலன், முழுமையாக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைவதற்கு முன்பே அதனை மறுக்கின்ற வழி முறைகள் 'சட்டம்' என்பதன் பெயரால் நடைமுறைப் படுத்தப்பட் டுள்ளன. இதுபற்றிய சட்ட நுணுக்கங்களை, சமூகநீதி பற்றிய புத்தகங்களை மாணவர்கள், குறிப்பாக சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் படித்து, அறிந்து விளக்கம் பெற வேண்டும். அப்பொழுது தான் சமூகநீதிக்கு எதிரான அறைகூவல்களை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராட முடியும். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவ னத்தின் சார்பாக, பல புத்தகங்கள் சமூகநீதிபற்றி வெளியிடப்பட் டுள்ளன. அவற்றை வாங்கி மாணவர்கள் படித்து தங்களை சமூகநீதிக் கருத்தியலில் வலிமையுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
'நீட்' தேர்வை ரத்து செய்திட போராட்டம்
சமூக நீதிக்குப் புறம்பான நீட்' தேர்வினை எதிர்த்து அரசியல் கட்சிகளையும், சமூகநீதி அமைப்புகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. மத்தியத் தொகுப்பு மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அறவே மறுக்கப்படும் நிலையில் மீண்டும் 'நீட்' தேர்வுகளை நிரந்தரமாக ரத்து செய்திடும் போராட்டத்தை விரைவில் திராவிடர் கழகம் நடத்தும். இந்தக் கல்வி ஆண்டிலிருந்து மருத்துவக் கல்வியில் சமூகநீதி மறுக்கப்படுவது களையப்பட வேண்டும். கரோனா பொது முடக்கம் நடைமுறையில் உள்ள சூழலில் முடக்க விதிகளுக்கு உட்பட்டு மாநிலம் முழுவதும் 'நீட்' தேர்வினை ரத்து செய்யக்கோரி அறவழிப் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்திடும் போராட்ட நாள் விரைவில் அறிவிக்கப்படும். சட்டம் தெரிந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் இயக்க அறவழிப் போராட்டத்தைத் தங்களுக்கு வசதியாக உள்ள பகுதிகளிலேயே நடத்திடலாம். இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
சமூகநீதிக்கு ஆக்கம் கூட்டுவோம். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான வழிமுறைகளை வென்றெடுப்போம்.
வாழ்க பெரியார், வளர்க சமூகநீதித் தத்துவம்!
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
தமிழர் தலைவரிடம் சே.மெ. மதிவதனி, மருத்துவர் மானவீரன், கண்ணன், கதிரவன் பாண்டியராஜன், ரேணுஅரண், சார்ஜா கேள்வி கேட்டு விளக்கம் பெற்றனர்.
புத்தங்களை வாங்கிப் பயன் பெறுங்கள்
கல்லூரி மாணவர்கள் படிக்க வேண்டிய சமூகநீதி, இடஒதுக்கீடு தொடர்பான வெளியீடுகள்:
- வகுப்புரிமை வரலாறு
- தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு ஓர் பார்வை
- வகுப்புவாரி உரிமை ஏன்? (கம்யூனல் ஜீ.ஓ.)
- வகுப்புவாரி உரிமையின் வரலாறும் பின்னணியும்
- பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு & கிரீமிலேயர் கூடாது ஏன்?
- இந்திய அரசியல் சட்டம் & முதல் திருத்தம் - ஏன்? எதற்காக?
- சமூகநீதி
மேற்குறிப்பிட்ட புத்தகங்களை மாணவர்கள்
50 விழுக்காடு விலையில் வாங்கிப் பயன் பெறலாம் என்றும் தமிழர் தலைவர் அறிவித்தார்.(விவரங்கள் விரைவில்)
No comments:
Post a Comment