கேள்வி 1: கொரோனா வந்தால் அர்ச்சகரேநாடிச்செல்வது மருத்துவரைத்தான்! பிறகு எதற்குத் தேவையில்லாமல் கோயிலில் அர்ச்சனை, ஆராதனை, சிறப்பு யாகங்கள் போன்றவையெல்லாம்?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.
பதில்: ‘ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுகிறவர்களும் இருக்கவே செய்வார்கள்’ என்பார் தந்தை பெரியார். “கடவுள்களே’ கரோனாவைக் கண்டு கதவைச் சாத்தி, திருவிழா கொண்டாமல், அப்படியே கொண்டாடினாலும் பக்தர்களை அழைக்காமலே நடத்தப்பட்டாலும், பார்ப்பனர்களின் பக்தி வியாபாரம் பரவசத்துடன் நடப்பது, பாமரத் தனத்தைப் பணமாக்கத்தான்!
கேள்வி 2: உடுமலை சங்கர் ஆணவப் படுகொலையில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது! பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையையும் பார்த்து நீதி வழங்கிய நீதிமன்றம், இவ்வழக்கில் வெட்டுப்பட்ட கவுசல்யாவின் வாக்கு மூலத்தையும், இதர சாட்சிகளையும் ஏற்க மறுத்துள்ளதா?
- சோ.சு.செல்வன், மதுரை
பதில்: சிக்கலான கேள்வி - நீதிமன்றங்களுக்கு! சிறப்பாக பதில் அளிக்க முடியாத அளவுக்கு சிந்தனைக்கு வாய்ப்பூட்டு போடும் நிலையே இப்போது!
கேள்வி 3: பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் பார்ப்பனியம், பெரியார் காலத்தில் இருந்ததை விட மிகுந்த வீரியத்துடன் வலிமை பெற்றதாகவும், காட்சியளிக்கிறதே? அய்யா பெரியார் இப்போது உள்ளதை விட அதிக சவாலை எதிர்கொண்டாரா?
- ச.செல்வம், பஹ்ரைன்
பதில்: அப்போது பாதையே இல்லை! “ஈரோட்டுப் பாதை” அமைத்து, எதிர்கொண்ட ஏளனங்கள், எதிர்ப்புகள் ஏராளம். அய்யா போட்ட எதிர்நீச்சல், இன்று நமக்கு பாடமாக, வழித்துணைவனாகப் பயன்படுகிறதே! அன்று அய்யா பெரியார் ஒற்றைத் தனிமனித இராணுவமாகவே, “எல்லாமும் அவரே” என்றுதானே துணிவுடன் எதிர் கொண்டார்? இன்று அப்படி அல்ல நமக்கு - எதிர்ப்புகள் ஏராளம் என்றாலும்கூட!
கேள்வி 4: நாடு, மொழி, இனத்திற்காக ஏதும் செய்யாத சிலரின் பிறந்தநாளை, வாக்கு வங்கி அரசியலுக்காக, அரசு விழாவாகக் கொண்டாடுவோம் என அறிவிப்பதும், அவர்களுக்கு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கும் போக்கும் மத்திய, மாநில அரசுகளிடையே அதிகரித்து வருகிறதே? ஒரு காலத்தில் உண்மை வெளிப்படும் போது, ஒட்டு மொத்த வரலாற்றையும் அடுத்த தலைமுறையினர் பிழையாகத்தானே காண்பார்கள்? - மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில்: ‘வரலாற்றின் இதுபோன்ற தவறுகளுக்கு, வருங்காலம் பரிகாரம் தேடும்’ என்ற கருத்து ஏற்கக்கூடியதே! இன்றுகூட பல தலைகீழாகி வருகிறதே!
கேள்வி 5: சீனப் பொருள்களை உடைத்தெறியச் சொல்லும் பா.ஜ.க.வினர், தங்கள் மத்திய ஆட்சியின் மூலம் சீனப் பொருள்களின் மீது தடை விதித்துவிடலாமே!
- தென்றல், பெரம்பூர்
பதில்: அரசு அந்த எல்லைக்குச் சென்றால், அதன் பாரதூர பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க வேண்டுமே என்ற சிந்தனை ஆள்வோருக்கு வந்ததால்தான், கட்சி அளவில் மட்டும் அதைச் செய்கிறார்கள். எனவே, தங்களின் யோசனை எளிதில் அமலுக்கு வராது!
கேள்வி 6: கொரோனா காலத்தில் காவல்துறை மீதிருந்த நல்ல எண்ணம், சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணத்தினால் மாறியிருக்கிறதே!
- இளையராஜா, பிலாக்குறிச்சி
பதில்: என்ன செய்வது? காவல்துறையில் சிலர் தங்களை ஹிட்லர்களாகவும், ஓநாய்களின் ஓங்காரங்களாகவும் நினைத்து ஒழுகி, ஒட்டுமொத்த துறைக்கே இழுக்குத் தேடி அவர்களுக்கு தேவையற்ற கெட்ட பெயரை வாங்கித் தருகிறா£கள்!
கேள்வி 7: கொரோனா குறித்த அச்சம் வயதானவர்களைக் கூட குற்ற உணர்ச்சியில் தற்கொலை வரைக்கும் தள்ளுகிறதே? - வி.காசிலிங்கம், நெல்லை
பதில்: தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது! அவர்களது மன இறுக்கத்தை மாற்றிட, உடன் இருப்பவர்களும் நண்பர்களும் உணர்ந்து, ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்!
நோய் வருவதும் தீருவதும் வாழ்க்கையில் சிற்சில நேரங்களில் தவிர்க்க முடியாதவை. அதிலும் தொற்று - எதிர்பாராதது; போராடி வெற்றி பெற்றே தீருவோம் என்ற தன்னம்பிக்கை, நன்னம்பிக்கையை உருவாக்கிக் கொண்டு துணிவுடன் வாழுவோமாக!
கேள்வி 8: கொரோனாவை வைத்து வியாபாரம் செய்யத் துணிந்த பதஞ்சலி பாபா ராம்தேவை மயிலிறகால் வருடிக் கண்டிக்கிறதே மத்திய அரசு?
- ஆர்.ஜெயராஜ், அயப்பாக்கம்
பதில்: ஆம். திருத்தணிகாசலம் போன்ற சித்த வைத்தியருக்குக் குண்டர் சட்டம்; பதஞ்சாலி பாபாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு என இரட்டை வேஷம்! இது கொரோனாவை விடக் கொடுமை!
No comments:
Post a Comment