வாழ்த்துகிறார் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 3, 2020

வாழ்த்துகிறார் பெரியார்!


மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.


டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரி யங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார்.


இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப் பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம், டாக்டர் அவர் களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும் வேதனையும்தான் என்றாலும், டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல் எப்படிப் பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத்துறையில் சீர்திருத்த தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுய நலக்காரருடையவும், பழைமை விரும்பிகளினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத் தான் தீரும். கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.


- ஈ.வெ.ராமசாமி, 3.6.1972


கணிக்கிறார் பெரியார்!


அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் தலைமையில் உள்ள அமைச்சரவை தமிழகப் பெருமக்கள் அனைவரது நம்பிக்கைக்குப் பாத்திர மாகும் அளவுக்குக் காரியங்களைச் சிறப்பாகச் செய்து வருவதுடன், இப்படிப்பட்ட ஒரு ஆட்சி மாறினால், இனி நம் தமிழர் சமுதாயத்தின் கதி அதோ கதி ஆகிவிடுமென்று துணிந்து சொல்லும் அளவுக்கு மக்கள் நல ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதுடன் மிகவும் பாராட்டத்தக்க வகையிலும் பணியாற்றி வருகிறது.


No comments:

Post a Comment