சமீப காலத்தில் கட்டமைக்கப்பட்ட மிகப் பெரிய பிம்பம், 'குஜராத் மாடல்'.
குஜராத் மாநிலத்தில் தேனாறும், பாலாறும் ஓடுகிறது என்றும், குஜராத் மாநிலத்தைப் போல இந்தியா ஆக வேண்டும் என்றும். போலியாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே நரேந்திர மோடி நாட்டை ஆளும் பிரதமர் ஆனார்.
அந்த குஜராத் மாடலின் உண்மை நிலை என்ன என்பதை கரோனா கிழித்தெறிந்து விட்டது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6ஆவது இடத்துக்கு வந்துவிட்டது இந்தியா.
இந்தியாவில் முதலிடத்தில் மகாராட்டிரா, இரண்டாவது இடத்தில் தமிழகம், மூன்றாவது இடத்தில் டில்லி, நான்காவது இடத்தில் குஜராத் இருக்கிறது. இறந்தோர் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மகாராட்டிராவில் 2,849 பேர் இறந்துள்ளார்கள். குஜராத்தில் 1,190 பேர் இறந்துள்ளார்கள். குஜராத் என்ன மாதிரியான உள்கட்டமைப்பில் இருந்துள்ளது என்பதை வடஇந்திய ஊடகங்களே அம்பலப்படுத்தி வருகின்றன.
'குஜராத் சுகாதார மாடலின் பயங்கரமான நிலை - அதிகரிக்கும் மரணங்கள்' என்ற தலைப்பில். பி.பி.சி.யின் இந்தி சேவையில் எழு தப்பட்டுள்ள கட்டுரையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
அகமதாபாத் சிவில் மருத்துவ மனையில் இருந்து கணபதி மக்வானி என்பவரை குணப்படுத்தி விட்டதாக மருத்துவமனையில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், அவரது உடல் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் கிடந்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமையே குஜராத்தில் கவலைக்கிடமாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிகமிகக் குறைவு என்றும், அப்படி இருக்கும் சுகாதார நிலையங்களில் பணியாளர்கள் இல்லை என்றும், அக்கட்டுரை கூறுகிறது. 29 சதவிகித ஆரம்ப சுகாதார நிலைய பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கான பணியிடங்கள் 90 சதவிகிதம் காலியாக இருப்பதாகவும் அக்கட்டுரை சொல்கிறது.
பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவு என்றும், அக்கட்டுரையாளர் புள்ளி விவரம் தந்துள்ளார். அகமதாபாத் நகரே மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. அம்தாவாத் நிபாட் என்ற பகுதி மிகமிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மிக நெரிசலான பகுதி. மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வர்கள் அகமதாபாத்தில்தான் இருக்கிறார்கள்.
இன்னொரு கொடூரமான சம்பவத்தை பத்திரிகையாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் எழுதி உள்ளார். 71 வயதான தேவ்ராம் என்பவர் மூச்சுத் திணறலால் மே 28ஆம் தேதி சேர்க்கப்படுகிறார். மே 29ஆம் தேதி இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் போகிறது. உடல் அவர்களுக்கு மூடிய நிலையில் தரப்படுகிறது. எரித்து விடுகிறார்கள். மே 30ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து போன் வருகிறது. 'தேவ்ராமை சாதாரண வார்டுக்கு மாற்றி விட்டோம்' என்று தகவல் சொல்கிறார்கள்.
பதறிப் போய் உறவினர்கள் மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். அங்கு போனதும், தேவராம் இறந்தது உறுதிப்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு திரும்புகிறார்கள். மருத்துவமனையில் இருந்து மறுநாள் தேவ்ராம் வீட்டுக்கு போன் வருகிறது. 'தேவராம் தேறி வருகிறார்' என்று மருத்துவமனையில் இருந்து சொல்கிறார்கள்.
அதாவது. இறந்தவர் யார். உயிரோடு இருப்பவர் யார் என்பதே மருத்துவமனையின் ஆவணங்களில் முறையாக பராமரிக்கப்பட வில்லை . இதுதான் குஜராத்.
'குஜராத் மாடல்' என்றால் என்ன?' என்பதை வெளிச்சம் போட்டு விட்டது கரோனா.
உலகத்திலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டி, அதைத் திறக்க அமெரிக்க ட்ரம்பை பிப்ரவரி 25ஆம் தேதி அழைத்து வந்தார் மோடி. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கூடினார்கள். “இந்த நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சிதான் கரோனா பரவலுக்குக் காரணம் என்று சிவசேனா இன்று குற்றச் சாட்டு வைத்துள்ளது.
ஆனால், அதைப் பற்றி எல்லாம் பா.ஜ.க.வுக்கு கவலை இல்லை. குஜராத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை எம்.பி. பதவிகளைக் கைப்பற்றுவதற்கான முஸ்தீபுகளில் மூழ்கி விட்டார்கள். 2 எம்.பி.க்கள் வெற்றி பெறும் நிலையில் காங்கிரஸ் இருப்பதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒரு சிலரை பதவி விலக வைத்துக் கொண்டிருக் கிறது பா.ஜ.க.
சாலையில் செத்துக் கிடந்த கணபதி மக்வானி பற்றியோ, செத்தாரா இல்லையா எனத் தெரியாத தேவராம் பற்றியோ அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அப்பாவி மக்களைப் பற்றி கவலைப்படாதது தான் குஜராத் மாடல்!
நன்றி: 'முரசொலி' (தலையங்கம்), 9.6.2020
No comments:
Post a Comment