தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொள்ளாத போராட்டம் உண்டா?
‘‘ஒப்பற்ற தலைமை'': காணொலி நிகழ்வில் தமிழர் தலைவர் உரை
சென்னை, ஜூன் 27 நம்முடைய இன நலம், நம்முடைய மான வாழ்வு, நம்முடைய உரிமை வாழ்வு அத்தனையும் காப்பாற்றப்பட வேண்டும். எதிரிகளின் இனத்தில் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாரே தவிர, தன்னு டைய தலைமையைப் பொறுத்தவரையில், தான் ஒரு தொண்டனாக, முழு தொண்டனாக களத்தில் நின்றார். எந்தப் போராட்டத்திலாவது தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொள்ளாத போராட்டம் உண்டா? தண்டிக்கப்படாத போராட்டம் உண்டா? என்று நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
கடந்த 20.6.2020 அன்று மாலை 5.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே ஆற்றிய சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
வெற்றியா? தோல்வியா? என்பது பிறகுதான்; நம்முடைய கடமையைச் செய்யவேண்டும்
அய்யா ஒன்றைச் சொல்வார், களத்தில் இறங்கும்போது வெற்றி அடைவோமா? தோல்வி அடைவோமா? என்று நினைக்கக் கூடாது. வெற்றியா - தோல்வியா என்று நினைத்தால், போராட்டக் களத்தில் தெளிவான முடிவு எடுக்க முடியாது என்று சொன்னார். ஒரு நல்ல தலைமைக்கு இதுதான் அடையாளம்.
போராட்டம் நடத்தவேண்டுமா? வேண்டாமா? இந்தப் பிரச்சினைக்குப் போராட்டம் தேவையா? இல்லையா? என்பதுதான் முக்கியம். வெற்றியா? தோல்வியா? என்பது பிறகுதான். நம்முடைய கடமையைச் செய்யவேண்டும் அவ்வளவுதான்.
இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? ஒப்பற்ற தலைமை - தெளிவு, முடிவு, தன்னல மறுப்பு, விருப்பு வெறுப்பற்ற பார்வை, சுய சிந்தனை, யாரையும் அரவணைத்துச் செல்லுதல், எளிமையாக மற்றவர்களை சந்திப்பது, போர்த் தலைவர் எப்படி வெற்றி - தோல்வி என்பதைப்பற்றி கவலைப்படாமல் பணியாற்றவேண்டும் என்பனவற்றை!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இயல்பாக ஒப்பற்ற தலைவராகத் தந்தை பெரியார் ஆனார்.
இயற்கையான ஒரு தலைவராக தன்னை ஆக்கிக் கொண்டவர். அவருக்கு இருந்த வசதி என்ன? ஆனால், தன்னுடைய வாழ்க்கையை எளிமையான வாழ்க்கையாக மாற்றிக் கொண்டார்.
தனிப்பட்ட முறையில் அவருடைய மைனர் வாழ்க்கை - அவருடைய செல்வ வாழ்க்கை - அவருடைய செல்வாக் குள்ள வாழ்க்கை இவை அத்தனையையும் ஒரு பக்கத்தில் வையுங்கள்!
இன்னொரு பக்கத்தில், அவர் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு, ஒரு குன்றி மணி அளவிற்குக்கூட நேர்மை தவறியதில்லை. பொய் பேசியதில்லை. அந்த ஒப்பற்ற தலைமைத்துவம்!
பார்ப்பனரல்லாத தலைவர்கள்
தேவைப்பட்டார்கள்
இன்னொன்றும் இங்கே சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒரு செய்தி.
காங்கிரசில் அவர் சேர்ந்து, அவருடைய உழைப்பு மிக சீக்கிரத்தில் அவரைத் தலைவராக அடையாளம் காண வைத்தது. அப்பொழுதுதான், அந்த இயக்கம் பலப்பட்டது. 1919- 1920 ஆம் ஆண்டு காலகட்டத்தில்!
பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று சொல்லக்கூடிய சர்.பிட்டி.தியாகராயர், நாயர், பனகால் அரசர், நடேசனார் போன்ற தலைவர்கள் பார்ப்பனரல்லாதார் மத்தியில், மிகப்பெரிய செல்வாக்கோடு இருந்த காலகட்டத்தில், பார்ப் பனருடைய அமைப்பான காங்கிரஸ், மற்ற அமைப்புகள். வெளியே நடமாட முடியாத அளவிற்கு இருந்தபொழுது, ஏனென்றால், காங்கிரஸ் பார்ப்பனர் அமைப்பு என்று மக்கள் மத்தியில் கோடு போட்டு விட்டார்கள். பார்ப்பன ரல்லாத தலைவர்கள் தேவைப்பட்டார்கள்.
அப்போதுதான் காங்கிரசுக்குக் கிடைத்தவர்கள் தந்தை பெரியார், திரு.வி.க., வரதராஜூலு நாயுடு. நாயக்கர் - முதலியார் - நாயுடு என்று அவர்கள் சொன்னதுபோல!
இவர்கள் எல்லோருடனும், இராஜகோபாலாச்சாரியார் மேடையில் பேசக்கூடிய காலகட்டம். எனவே, இந்தத் தலைவர்களை முன்னால் விட்டு, அவர்கள் பின்னால் வரக்கூடிய அளவிற்கு, மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர் களாக இம் மூவரும் இருந்தார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருந்தார் அன்னை நாகம்மையார்
1920-இல் காங்கிரசில் சேருகிறார்கள் - 1922, 1923 கால கட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப் பினராக இருந்தார் அன்னை நாகம்மையார் அவர்கள்.
அகில இந்திய மாநாட்டிற்குத் தந்தை பெரியாரும், அன்னை நாகம்மையார் அவர்களும் சென்றார்கள்.
மிகப்பெரிய கிளர்ச்சி நடைபெற்றபொழுது, இங்கே அருள்மொழி அவர்கள் சுட்டிக்காட்டியபடி, காந்தியாரிடம் கிளரச்சியைப் பற்றி கேட்டபொழுது, அந்தக் கிளர்ச்சியை நிறுத்தக் கூடிய வாய்ப்பு என்னுடைய கைகளில் இல்லை; ஈரோட்டில் இருக்கக்கூடிய இரண்டு பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறப்பு.
இவை அத்தனையும் அமைந்த காலகட்டத்தில், தலைமைப் பதவியை தந்தை பெரியார் தேடவில்லை. அவரை நோக்கித்தான் தலைமைப் பதவி சென்றது.
அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தன்னை ஒரு தொண்டனாகத்தான் கருதிக் கொண்டிருந்தார். அன்றைக்கும் - இன்றைக்கும் சரி - நாம் ஒப்பற்ற தலைவ ராக தந்தை பெரியார் அவர்களை வரித்துக் கொண்டிருக் கின்ற நேரத்தில்கூட, அவர் என்றைக்கும் மற்றவர்களுக்கு உத்தரவுப் போட்டுவிட்டு, உள்ளே போகக்கூடிய தலைவர் அல்ல. இதுதான் ஒப்பற்ற தலைமைக்கு அடையாளம்.
மூன்று பிரிவாக சொல்லவேண்டும்!
களத்தில் முதல் ஆளாக நிற்பார். ஒப்பற்ற தலைமை என்பதைப்பற்றி மூன்று பிரிவாக சொல்லவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
முதலில் இதுதான் அஸ்திவாரம்; அடித்தளமான செய்தி. இந்த நிகழ்வில், இன்னொரு செய்தியை சுட்டிக் காட்டி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.
அடுத்து, தந்தை பெரியார் அவர்கள் சந்தித்த எதிர்ப்புக் களங்கள் - எதிர்நீச்சல் என்பவை இரண்டாவது கட்டம்.
மூன்றாவது கட்டம், தந்தை பெரியார் அவர்கள் சந்தித்த துரோகங்கள்; ஏனென்றால், ஒரு மனிதன் எதிரியைக்கூட சந்தித்துவிடலாம்; ஆனால், துரோகம் ஏற்பட்டால், சலிப்படைந்து, ஒதுங்கிப் போய்விடுவார்கள் அல்லது தோற்றுப் போய்விடுவார்கள். அதனால் துரோகி கள் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள், எந்தத் தோல்வி ஏற்பட்டாலும், அதனை வெற்றியாக ஆக்கிக் கொள்ளுகின்ற ரகசியம் எனக்குத் தெரியும் என்று சொன்ன தலைவர்.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு!
1967 இல் தி.மு.க.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறார் பெரியார். இராஜகோபாலாச்சாரியார் சொல்படி ஆள் வோம் என்று அவர்கள் சொன்னார்கள். ஆகவே, தனிப் பட்ட முறையில், குரோதங்கள், விரோதங்கள் கிடையாது.
அந்தக் காலகட்டத்திலே அய்யா அவர்கள் சொல் கிறார், ‘‘தி.மு.க.வினர்கூட ஒரு காலத்தில், தாங்கள் நிலைக்க வேண்டுமானால், பார்ப்பனர் எதிர்ப்புக் கொள்கையை அவர்கள் பேசித்தான் தீரவேண்டிய கட்டம் வரும். ஏன்? என்னுடைய ஆதரவைக்கூட அவர்கள் அந்தக் காலத்தில் பெற்றுக் கொள்ளலாம்; நானும் அவர்களை ஆதரிக்கக் கூடிய கட்டம் வரும்'' என்றார்.
இது எப்பொழுது என்றால், எதிராகப் பிரச்சாரம் செய் யக்கூடிய காலகட்டத்தில்கூட, தன்னுடைய தொலை நோக்கு உணர்வோடு இப்படி சொல்கிறார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொள்ளாத போராட்டம் உண்டா?
நம்முடைய இன நலம், நம்முடைய மான வாழ்வு, நம்முடைய உரிமை வாழ்வு அத்தனையும் காப்பாற்றப்பட வேண்டும். எதிரிகளின் இனத்தில் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாரே தவிர, தன்னுடைய தலைமையைப் பொறுத்தவரையில், தான் ஒரு தொண்டனாக, முழு தொண்டனாக களத்தில் நின்றார். எந்தப் போராட்டத் திலாவது தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொள்ளாத போராட்டம் உண்டா? தண்டிக்கப்படாத போராட்டம் உண்டா? என்று நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கடுமையான அவதிகள் தந்தை பெரியாருக்கு! அடுத்த கட்டமாக எதிர்நீச்சல் என்று சொல்லுகின்ற கட்டத்தில், இன்னொரு பகுதியை இரண்டாவது நிகழ்வில், நான் சொல்லவிருக்கிறேன்.
அது என்னவென்றால், ஒப்பற்ற தலைமையில், உடல்நலக் குறைவு என்பது இருக்கிறதே, அவருக்கு இயல்பாக ஏற்பட்ட குடலிறக்கம் - அதனால் அவர் பட்ட அவதி - பெல்லாரி சிறையில் தந்தை பெரியார் அவர்கள் பட்ட அவதிகளும், அவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய விதமும் அவருடைய டைரியில் குறிப்பாக எழுதி வைத்திருக்கிறார்.
என்னை அறியாமல் கண்கள் நீர்த் துளிகளை வரவழைத்தன!
அதனைப் படிக்கையில், என்னை அறியாமல் கண்கள் நீர்த் துளிகளை வரவழைத்தன. அந்தப் பகுதியை, அடுத்த உரையில் சுட்டிக்காட்ட இருக்கிறேன்.
உள்ளம் வளமாக இருக்கிறது; உள்ளம் பலமாக இருக்கிறது. ஆனால், உடல்நலம் நலிவுற்ற பொழுதிலும், முதுமை வாட்டியபொழுதும், எதிரியோடு போராடியதோடு மட்டுமல்ல, தன்னுடைய முதுமையோடு, நோயோடு போராடிய நேரத்திலும், களத்தில் இருந்து தந்தை பெரியார் அவர்கள் பின்வாங்கவில்லை.
களத்தில் முதல் ஆளாக இருப்பேன் என்றார். அந்த உணர்வு இயல்பாக ஏற்பட்ட ஒன்று. அது ஏதோ மக்களுக் காக, தோழர்களுக்காக, தொண்டர்களுக்காக பேசியது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அய்யா அவர்கள் சிறைச் சாலையில் இருந்த நேரத்தில், நீதிக்கட்சிக்குத் தோல்வி ஏற்பட்டது. அப்படி தோல்வி ஏற்பட்டவுடன், பணக்காரர் கள் எல்லாம் அந்தக் கட்சியை விட்டு ஓடிப் போய் விட்டார்கள்.
அதற்கு முன்பு நீதிக்கட்சியின் காப்பாளராக இருக்க வேண்டும் என்று பனகால் அரசர் கேட்ட நேரத்தில், அதனை ஏற்காதவர், பிறகு இனத்தை மீட்கவேண்டும் என்பதற்காக, இதுதான் சரியான வாய்ப்பு என்பதால், நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், தயக்கத்தோடு ஒப்புக்கொள்கிறார்.
1938 இல் தந்தை பெரியார் அவர்களை நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வரலாறு உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால், தெரிந்தது அந்த வரலாறு மட்டும்தான். அய்யா அவர்கள், சிறைச்சாலையில் இருந்து, தன்னுடைய டைரிக் குறிப்பில், தலைமை உரை யைத் தயாரித்துக் கொடுக்கிறார். அந்த உரையைத்தான் பன்னீர்செல்வம் அவர்கள் படிக்கிறார்.
பெரியாருடைய உருவப் படத்திற்கு மாலையை அணிவித்து, இராஜா சர் முத்தையா போன்றவர்கள், ஊர்வலத்தில் வந்து, சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகிறார்கள்.
இதில், தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியார் அவர்கள், அவர் பொது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்திருக்கிறார்; நீதிக்கட்சியைக் காப்பாற்றி இருக்கிறார்; காங்கிரசைப் பரப்பியிருக்கிறார்; இன்னொரு மாநிலத்திற்குச் சென்று போராடி, மிகப்பெரிய அளவிற்கு எல்லா மக்களுடைய ஈர்ப்பையும் பெற்றிருக்கிறார். இவ் வளவிற்குப் பிறகு, பார்ப்பனர்களை ஒரு கை பார்க்கிறேன் என்று சொல்கிறார்.
இராஜகோபாலாச்சாரியாரைப் பற்றிச் சொல்லுகின்ற நேரத்தில், அய்யா அவர்கள் சொன்ன ஒன்றை, அந்தத் தலைமையிடம் இருந்த துணிச்சலை எப்படிச் சொல்வது என்பதற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால்,
இராஜகோபாலாச்சாரியாருக்கு
தந்தை பெரியார் சொன்ன பதில்!
1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலிருந்து தந்தை பெரியார் அவர்கள் வெளியேறியபொழுது,
இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், ‘‘நாயக்கர்வாள் யோசிங்க, அவசரப்படாதீங்க; யோசிங்க!'' என்கிறார்.
அதற்கு முன்புவரை இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படுகின்ற நண்பர் - தந்தை பெரியார் அவர்கள்.
‘‘நான் முடிவு செய்துவிட்டேன்'' என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் குயுக்தி உள்ளவர் என்பதால், இன்னொரு அஸ்திரத்தை விடுகிறார். முதலில் வேண்டுகோள் விடுக்கிறார்; “தேசிய இயக்கத்தைவிட்டு வெளியே போகாதீர்கள். நீங்கள் கதர் அணிய வேண்டாம்; நீங்கள் காங்கிரசில் உறுப்பினராக இருக்கவேண்டாம்; நான் உங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கிறேன்” என் றெல்லாம் சொல்கிறார்.
‘‘நாயக்கரே, நான் இவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருக்கிறீர்களே, காங்கிரஸ் என்பது சாதாரணமா? அதோடு முட்டலாம் என்று நினைக்கிறீர்களா? மலையோடு நீங்கள் மோதுகிறீர்கள்?'' என்று இராஜகோபாலாச்சாரியார் மிரட் டும் தொனியில் சொல்கிறார்.
உடனே பெரியார் சொன்ன பதில் இருக்கிறதே, ஒப்பற்ற தலைமைக்கு அடையாளம் என்னவென்றால், யாரும் தவறாக நினைக்கக்கூடாது; இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் மீது இராஜகோபாலாச்சாரியார் மதிப்புள்ளவர்; பெரியாருக்கு இராஜகோபாலாச்சாரியார் மீது மதிப்பு - இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தந்தை பெரியார் அவர்கள் சொன்ன பதில்,
‘‘பரவாயில்லை, மயிரைக் கட்டி மலையை இழுக்கி றேன்; வந்தால் மலை; போனால் மயிர்'' என்றார்.
ஆனால், மலை அசைந்ததா? இல்லையா? இதுதான் ஒப்பற்ற தலைமைக்கு சிறந்த அடையாளம்.
மலையை அசைத்தார்; எப்படி அசைத்தார்? எதை வைத்து அசைத்தார்? எந்த ஆயுதத்தை வைத்து அசைத்தார்?
அவர் சொன்ன உதாரணம், எவ்வளவு துச்சமான பதில் - யோசிப்பு இல்லாத ஒரு பதில். எவ்வளவு பக்குவப்பட்ட, ஒப்பற்ற தலைமையாக இருந்தால், பளிச்சென்று பதிலளித் திருப்பார்.
‘‘பரவாயில்லை, மயிரைக் கட்டி மலையை இழுக்கி றேன்; வந்தால் மலை; போனால் மயிர்'' என்றார்.
மயிர் என்ற வார்த்தை இலக்கியத்தில் பயன்படுகின்ற சொல்தான். இருந்தாலும், அதைக் கொச்சைப்படுத்தக் கூடிய அளவிற்கு எப்பொழுது ஆக்கினார்கள் தெரியுமா? நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒருவருக்குக் கோபம் வந்தால், என்ன சொல்வார். ‘அவன் என்ன செய்தான், பிடுங்கினானா?’ என்று சொல் வார்களே, அது எப்படி வந்தது தெரியுமா? அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
ஆராய்ச்சியாளர் தொ.பரமசிவன் அவர்களின் விளக்கம்!
எப்படி என்று சொன்னால்,
சமணர்கள் ஆரிய எதிர்ப்பாளர்கள்; சமணர்கள் தங்களுடைய தத்துவப்படி, மொட்டை அடித்துக் கொள் வார்கள். தலையில் உள்ள முடியையெல்லாம் அவர்கள் உரித்துக் கொள்வார்கள். பெண்களைக்கூட அந்த மாதிரியான அளவிற்கு ஆக்குவார்கள்.
அவர்களைக் கொச்சைப்படுத்துவதற்கு ஆரியர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.
‘‘மயிரைப் பிடுங்கினானா?'' என்று கொச்சையாகச் சொல்கின்ற வார்த்தை எப்படி வந்தது என்று சொன்னால், ஆரியர்களால், தமிழர்களைக் கொச்சைப்படுத்த, தமிழர்கள் செய்கின்ற சடங்குகளைக் கொச்சைப்படுத்த பயன்படுத்திய வார்த்தைத்தான்!
இதனை நான் சொல்லவில்லை. பிரபல ஆராய்ச்சி யாளராக இருக்கின்ற தொ.பரமசிவன் அவர்கள், தன்னு டைய நூலிலேயே தெளிவாக சொல்லியிருக்கிறார்.
நீதிக்கட்சிக்குத் தலைவராக தந்தை பெரியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சிறைச்சாலையில் இருந்த தந்தை பெரியார் அவர்கள், தலைமை உரையை எழுதி அனுப்பினார்.
தந்தை பெரியார் அவர்களின் டைரியை ஆய்வு செய்த நேரத்தில், நம்முடைய கழகத் துணைத் தலைவர் அவர்களும், நானும் பகிர்ந்துகொண்டோம். அய்யாவினு டைய எழுத்தைப் புரிந்துகொண்டு, கல்வெட்டிலிருந்து எடுத்து எழுதுவதுபோல, மறுபடியும் நான் எழுதியிருக் கிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் சரியாகப் படித்து எழுதியிருக்கிறேன்.
1938, செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை அன்று எழுதிய டைரிக் குறிப்பில்,
பிளாட்டோவின் விளக்கம்!
ஒப்பற்ற தலைமை என்பதும், அந்தத் தலைமைப் பொறுப்பிற்கு யார் தகுதியானவர்? என்றும் ஒருமுறை பிளாட்டோவிடம் கேட்டார்களாம்.
அதற்குப் பிளாட்டோவினுடைய பதில் மிக அற்புத மான பதில் என்னவென்றால்,
‘‘யார் விரும்பவில்லையோ, அவர் தான் தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியுள்ளவன்'' என்றார்.
இப்பொழுது பெரியார் பேசுகிறார், அவருடைய எழுத்திலிருந்து ஒரு வரிகூட மாறாமல், அப்படியே பதிவு செய்திருக்கிறோம்.
முதல் முறையாகக் கிடைத்திருக்கின்ற ஒரு அரிய புதையல் இது.
ஒப்பற்ற தலைமை என்பது எப்படி இருக்கும். அதுவும் மிகப்பெரிய பெருமை, பெரிய புகழ், பெரிய பொறுப்பு அவர்மீது சுமத்தப்படுகின்ற நேரத்தில், அவர் அதை எப்படி எதிர்கொள்வார்; எப்படி அதை உணர் வார்; அவருடைய சிந்தனை எப்படி இருக்கும் என்பது தான், ஒப்பற்ற தலைமைக்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக் காட்டாகும்.
பெரியார் பேசுகிறார்!
‘‘தோழர்களே! என்னை நீங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்ததின்மூலம், உங்களுடைய ஒரு உண் மையான தொண்டனை இழந்தீர்கள். நான், பிறவித் தொண்டன். தலைவர் பதவி, தலைமையை நான் நன்கு அறிந்தவன். என்னை, சர்க்கார் சிறைப்படுத்து வதற்குப் பதிலாக, நீங்கள் சிறைப்படுத்தி விட்டீர்கள். இந்த யோசனை சரியானது அல்ல என்பது எனது அபிப்பிராயம். நான் எப்பொழுதும், எந்த நிலையிலும், தலைவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஒரு ‘லாயல்' பின்பற்றுபவன். அதுமட்டுமல்ல, எந்த ஸ்தாபனத்தில் அங்கத்தினராய் இருந்தாலும், தலைவருக்குப் பக்தி காட்டி, அவர் காரியத்திற்கு உள்ளிருந்து சங்கடம் விளைவிக்காமல் நடந்து வந்தவன். எனக்குத் தலைவர் பதவி ஒரு தொல்லையான காரியம். நான் ஒரு தெரு மனிதன். நான் ஒரு தெரு மனிதனாகவே வாழ்ந்து பழகியவன். அதிலேயே பிரியமுடையவன். பார்ப்பதற்குக்கூட சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்கிற தலைவர் இருந்த ஸ்தாபனத்தில், தெருத் தெருவாய் அலைகிற ஒருவனைக் கொண்டு வந்து போட்டிருக்கிறீர்கள். என்னால், தலைமைப் பதவிக் குள்ள கவுரவம், புரட்சி போல் மாற்றமடைந்துவிடும். இவற்றையெல்லாம் உணர்ந்து, இப்பதவியை, எப்படி ஏற்கலாம் என்ற கேள்வி எழும். நான் ஒரு தவறு செய்வதாகவே கருதி, அது அவசியமான தவறு என்று நினைத்தே ஒப்புக்கொள்கிறேன். வெகு நாளைக்கு அல்ல!''
எப்படிப்பட்ட ஒப்பற்ற தலைமை என்பதற்கு இதை விட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் நண்பர்களே!
தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வந்தார் என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு!
எனவே, தலைமைப் பதவி என்பது, கதவைத் தட்டி அவரைக் கொண்டு வந்து மிகப்பெரிய உச்சத்தில் வைக் கின்ற நேரத்தில், எல்லோரும் எப்படி நினைப்பார்கள்? ஏற்கெனவே சொன்ன தலைவர்கள் எப்படி மலிவான முறைகளில் தலைவரானார்கள்? எப்படி கூலிகளைப் பிடித்து தலைவர்களானார்கள்? மிகப்பெரிய அளவிற்கு சூழ்ச்சிகளை செய்து தலைவர்களானார்கள்? பார்ப்பனர் கள் ஏடுகளின் விளம்பரத்தினாலே, பத்திரிகைகளின் ஊடகத்தினாலே தலைவர்களானார்கள்? இயல்பான இயற்கையான தலைவர், எப்படி ஓர் உன்னதமான தலைமைப் பொறுப்பை, காப்பாளர் பொறுப்பை ஏற்காத வர், பிறகு அந்த இயக்கத்தை, இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அந்தத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வந்தார் என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பதை எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!
எனவே, இந்தக் காலகட்டத்தில், அந்த ஒப்பற்ற தலைமை என்பதையும், எவ்வளவு சிறந்த தலைமை என்பதையும் அந்த ஒப்பற்ற தலைமையினுடைய தொண்டு இன்னும் சிறப்பாக ஆகக்கூடிய அளவிற்கு, எதிர்நீச்சல் என்பது அடுத்த பொழிவில் என்னுடைய உரை இருக்கும்; அதற்கடுத்த பொழிவில், அவர் சந்தித்த துரோகங்களைப்பற்றி இருக்கும்.
நம்மை சுறுசுறுப்பாக்கும்;
நம்மை எழுந்து நிற்கச் செய்யும்!
எனவே, மூன்று பொழிவுகளாக இதனை அமைக்க விருக்கின்றோம். இதுவே சற்று நீளமானது என்று சொன்னாலும்கூட, ஆழமானதாகும்.
எனவே, நீளம் அதிகமா? ஆழம் அதிகமா? சோர்வு அதிகமா? என்று நான் நினைக்கவில்லை. நானும் சோர்வடையவில்லை; நீங்களும் சோர்வடையவில்லை; அந்தத் தலைமை நம்மை சுறுசுறுப்பாக்கும்; நம்மை எழுந்து நிற்கச் செய்யும்; விசையொடிந்த தேகத்தில் வன்மை உண்டாக்கும். வீழ்ச்சியுற்ற தமிழகத்தில், திராவிடத்தில் எழுச்சியை உண்டாக்கும். அதுதான் ஒப்பற்ற தலைமை என்ற அளவில் இன்றைய பொழிவை நிறுத்துகிறேன்.
வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment