உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனைத்துப் பதவி களும் வழங்கவேண்டும் என்று மறைமுகமாக உத்தரவிட்டு உள்ளார். இதனடிப்படையில் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு மற்றும் எந்த ஒரு விதிமுறையையுமே பார்க்காமல் பார்ப்பனர்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் குழுவிற்கான பணிகளில் 415 பதவிகளில் 388 பணிகள் பார்ப்பனர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2018-2019 கல்வி ஆண் டில் மாநில அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் கஸ்தூரிபா காந்தி குழந்தைகள் பள்ளிக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் அலிகர், அலகாபாத், இட்டா மற்றும் கவுதம்புத் நகர் போன்ற 4 மாவட்டங்களில் 25-பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணியாற்றிய விவகாரம் பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்தது, இவருக்கான சம்பளம் மூன்று வங்கிக் கணக்குகளில் ஒரு கோடிவரை சென்றுள்ளது.
அந்த ஆசிரியரின் பெயர் அனாமிகா சுக்லா; 2017-ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த அனாமிகா சுக்லா அரசின் விளம்பரத்தைப் பார்த்து ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித் துள்ளார். தனது ஊருக்கு அருகில் உள்ள ஒரு பள்ளியிலும், வேறு ஒரு பள்ளியிலும் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு பள்ளிகளிலுமே வேலையில் சேர்வதற்கான உத்தரவு வந்திருக்கிறது,
முதலில் அவர் ஒரு பள்ளியிலிருந்து தனது விண்ணப்பத் தைத் திரும்பப் பெற முயன்றுள்ளார். ஆனால் அரசுத்துறையில் உள்ள அவரது உறவினர் ஒருவர் "நீ அங்கு வேலைக்கு சேராத நிலையில் அவர்களாகவே விண்ணப்பத்தை நிராகரிப்பார்கள்" என்று கூறிய உடன் அவர் வேலைக்குச் செல்லவில்லை. ஒரு பள்ளியில் மட்டுமே ஆசிரியராக பணிபுரிந்தார். இந்த நிலை யில் 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு பள்ளிகளிலிருந் துமே 60,000 ரூபாய் ஊதியம் வந்திருந்தது,
அதே நேரத்தில் அருகில் உள்ள மாவட்டங்களுக்கான பள்ளியில் ஆசிரியர் பணிக்கான விளம்பரம் வந்திருந்தது, இதனை அடுத்து அவர் 23 பள்ளிகளில் விண்ணப்பித்திருந்தார். அவர் ஏற்கெனவே பணியிலிருந்த பள்ளி மற்றும் மற்றொரு பள்ளியும் சேர்த்து மொத்தம் 25 பள்ளிகளிலும் அவருக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் ஆசிரியராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது,
அவர் பள்ளிக்குச் செல்லவில்லை; ஆனால் அவருக்கு அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு சம்பளத்தணிக்கைக் குழுவின் ஆய்வில் ஒரே சான்றிதழை வைத்து பெண் ஆசிரியை ஒருவர் 25 பள்ளிகளில் ஆசிரிய ராகப் பணிபுரிந்த விவகாரம் குறித்து மாநிலப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் விளக்கம் அளித்து உள்ளார்.
"அலகாபாத் மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவதாகக் கூறி அவருக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். 25 பள்ளிகளில் பணிபுரிவதாக ஊதியம் வாங்கிய விவகாரம் ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்து அவர் அலகாபாத் பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் பதவி விலகல் கடிதம் கொடுக்க வந்தார். அவர் அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டு தனது உறவினர் ஒருவரின் மூலம் விலகல் கடிதம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தலைமை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் அனாமிகா சுக்லா என்ற அந்த ஆசிரியரும், அவரது உறவினரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இது எப்படி நடந்தது என்றால், ஜாதியில் பார்ப்பனராக இருந்தால் எதையுமே பார்க்காமல் அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்ற மேலிட உத்தரவும், அனைத்துத் துறைகளிலும் பார்ப்பன அதிகாரிகளே இருந்ததால் எதையுமே ஆய்வு செய்யாமல் பணி நியமனத்தில் கையொப்பமிட்டு, பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணிக்கு வந்துள்ளார்களா என்றுகூடத் தெரியாமல், அவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் கொடுத்த பட்டியலின் படி வங்கிக்கணக்கில் ஊதியமாகப் பணமும் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில் தனது பெயரை சுபிரியா, சுபிரியா சுக்லா என்றும், காவல்துறையினரிடம் சுபிரியா சிங் என்றும் மாறி மாறி கூறி குழப்பியுள்ளார்.
இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பல்வேறு பெயர் கொண்ட அடையாள அட்டைகளையும் வைத்திருந் தார். இதனால் இவர் வேறு வேறு பெயரில் இன்னும் எந்த எந்த பள்ளிக்கூடத்தில் வேலை பார்ப்பதாக கூறி ஊதியம் பெற்றார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
"பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை" என்று ஒரு பழமொழி உண்டு. உ.பி.யில் ஆதித்யநாத் என்ற உயர் ஜாதிக் காரரது ஆட்சி அட்டகாசம் செய்து வருகிறது.
பா.ஜ.க. ஆட்சி கூறும் இந்துத்துவா ஆட்சி என்பது எத்தகையது என்பதற்கு இந்த ஒரு சோறு பதம் போதாதா?
No comments:
Post a Comment