இந்த முழக்கங்களைத் தந்தவர் - நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தாம்.
'விடுதலை'யின் பொன்விழா மலரில் (1985 செப்டம்பர் 17 - தந்தை பெரியார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில்) எடுத்த எடுப்பில் முதல் பக்கத்தில் 'நினைவிடம் நோக்கி' என்று தலைப்பிட்டு எழுதியபோது ஒளியிடும் ஒலி முழக்கம் இது!
அனேகமாக இந்த நான்கு சொற்களில் நம் இயக்கத்தின் உள்ளடக்கம் ஒளிர்கிறது என்றே சொல்ல வேண்டும்.
நீதிக்கட்சியின் வாரம் இரு இதழாக அரும்பி (1935 ஜூன் முதல் நாள்) 1937ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களின் போர்வாளாக அவரிடம் வந்து சேர்ந்த 'விடுதலை' 85அய்க் கடந்து 86ஆம் ஆண்டில் தன் வரலாற்றுப் பொன்னடியை பதிக்கிறது.
85 ஆண்டு 'விடுதலை' என்றும் சொல்லலாம்; தமிழ் நாட்டின் 85 ஆண்டு கால வரலாற்றின் வயது என்றும் வேறு சொற்களால் சொல்லலாம்.
'விடுதலை' என்றால் தமிழ் இனத்தின் 'கெசட்' என்று சொல்லும் வழக்கம் - விவரம் அறிந்தவர்கள் மத்தியில் உண்டு.
புனைகளும், புழுதிகளும் அண்டாப் பெரு நெருப்பே 'விடுதலை!' அதன் ஒவ்வொரு எழுத்தும் சொல்லும். அழகுக்காக அணி செய்வதல்ல - ஆணித்தரமான கருத்தினை ஆணி அடித்துச் சொல்லும் சுணைக்குச் சொந்தமானது.
சமுதாயப் புரட்சி ஏடுதான் என்றாலும், அதற்காக அரசியல் எக்கேடு கெட்டுக் குட்டி சுவராகப் போனால் என்ன என்று பராக்குப் பார்ப்பதில்லை; அதனை இனநலன் சார்ந்த வழிபடுத்த, சமூக நீதிப் பாட்டைக்குத் திருப்ப, மூடநம்பிக்கைப் படுகுழிக்குள் விழாமல் பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க வைக்க, உளைச் சேற்றில் அழுந்திப்போன அதன் சக்கரத்தைத் தன் தோளைக் கொடுத்துத் தூக்கி ஒழுங்கான திசை நோக்கிச் செலுத்த வைப்பதையே தன் அன்றாடப் போர்ப்பணியாக ஆற்றும் அருந்தொண்டுக்கு மறு பெயர்தான் விடுதலை.
'விடுதலை' என்ற ஏடு நீதிக்கட்சியின் சார்பில் வெளி வருகிறது என்ற செய்தி தமது பார்வைக்கு வந்தபோது தந்தை பெரியார் அது பற்றி மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து எழுதுகோலின் நாக்கால் தேனூற்றைத் திறந்து விடுகிறார்.
"2, 3 வருஷங்களாகவே பரிசுத்த வீர ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும், இரவும், பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்கிற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்ததும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும், அதன் பயன்களைச் சமீப காலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும், மறுபடியும் புதிய தலைமுறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல.
அப்படிப்பட்ட நிலையில் 'விடுதலை' என்னும் பேரால் பத்திரிகை வெளியாய் இருப்பதைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லா தாரும் தங்களுக்கு ஏதோ ஒரு "பாக்கியம்" கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா? இது எப்படி வருகிறது? என்று யாரும் கவனிக்க மாட்டார்கள்.
ஆதலால் நமது மதிப்புரை எழுதும் வீண் வேலையில் பிரவேசிக்காமல், வந்துவிட்டது! தமிழ்ப் பத்திரிகை!! என்று விளம்பரம் செய்யவே ஆசைப்படுகின்றோம்.
"விடுதலை"ப் பத்திரிகை இன்று வார இருமுறையாக வெளி வந்தாலும், கூடிய சீக்கிரம் தமிழ் மக்கள் ஆதரவுக்கு ஏற்பத் தினசரி ஆகும் என்பதில் நமக்கு அய்யமில்லை" என்று தந்தை பெரியார் எழுதுகிறார்.
அன்றைக்கு அய்யா எழுதியபடி அவரே செயல்படுத்தினார் என்பது தான் வரலாற்றின் விசித்திரம். வாரம் இரு முறை வெளிவந்த 'விடுதலை' தந்தை பெரியார் கைக்கு வந்தபின் நாளேடாக நாட்டை வலம் வந்தது. எத்தனை எத்தனையோ பெயர்பெற்ற ஆசிரியர் பெருமக்கள் அ(ப)ணி செய்தனர்.
இதில் நமது ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கட்குக் கிடைத்த பேறு - அவரை ஆசிரியராக அய்யா அறிவித்ததோடு, அவரின் தோளைப் பற்றி சென்னை சிந்தாதரிப்பேட்டை விடுதலை அலுவலகத்தில் 'விடுதலை' ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்தாரே - அந்தப் பேறு வேறு யாருக்குத் தான் கிடைக்கும்?
'விடுதலை'யின் ஆசிரியராக அவர் பொறுப்பேற்க முன்வரா விட்டால் 'விடுதலை' நாளேடாக அல்லாமல் வார ஏடாகத்தான் வந்திருக்கும் என்று தந்தை பெரியார் அவர்களே கூறுகிறார் ('விடுதலை', 6.6.1964).
நாளேடாக நடைபோடுகிறது 'விடுதலை' என்றால் அதற்குக் காரணமான நமது மானமிகு ஆசிரியப் பெருந்தகைக்கு இயக்கம் மட்டுமல்ல - நாதியற்ற இந்த இனமே, நாடே நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளது.
4 பக்கங்களாக இருந்த 'விடுதலை' இன்று எட்டு பக்கங்களாக பல வண்ணக் கலவையோடு, சென்னை, திருச்சி என்று இரு பதிப்புகளாக வெளிவந்து கொண்டுள்ளது.
"'விடுதலை'யை வீரமணியின் ஏகபோக ஆதிக்கத்தில் ஒப்படைத்து விட்டேன்!" என்று தந்தை பெரியார் சொன்னார்கள் அல்லவா - அந்த அருமருந்தன்ன நம்பிக்கையை நம் தலைவர் ஆசிரியர் நூற்றுக்கு நூறு நிரூபித்துவிட்டாரே.
1976இல் விடுதலைக்கு ஒரு நெருக்கடி வந்தது. அதிலிருந்து அன்னை மணியம்மையார் மீட்டெடுத்துத் தந்தார். இப்பொழுது இன்னொரு நெருக்கடி - கரோனா எனும் நோயின் படையெடுப்பால்...
ஆனாலும் 'விடுதலை'யை இணையம் என்ற விஞ்ஞான வாகனத்தில் ஏற்றி உலவ விட்டு விட்டார் இன்றைய நமது ஆசிரியர். இதன் வாசகர்கள் முன்னிலும் அதிகரித்த சிறப்பை என் சொல்ல! ஒரு லட்சத்திற்கு மேல் வாசகர்களைப் பெருக்கிக் காட்டுங்கள் என்று தலைவர் அன்புக் கட்டளையிட்டுவிட்டார்.
86ஆம் ஆண்டை 'விடுதலை' நிறைவு செய்யும்போது அதன் வாசகர்களின் எண்ணிக்கை பன்மடங்கு ஏறு முகத்தில் செல்ல எல்லா வகையிலும் முனைவோம் - முடித்துத் தருவோம்!
பெரியாரே நம் ஒளி!
'விடுதலை'யே நம் வழி!!
No comments:
Post a Comment