- மயிலாடுதுறை சிவா, வாசிங்டன்
கடந்த மே மாதம் 25ந் தேதி, அமெரிக்கா - மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபோலிஸ் என்ற நகரத்தில், ஒரு 46 வயது நபர், ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கச் சென்றபோது, அங்கு நடந்த ஒரு சிறு வாக்குவாதம், அமெரிக்காவையே, ஏன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் என்று யாருமே கற்பனை செய்து இருக்கமாட்டார்கள்.
உலகம் உச்சரித்த அந்த நபரின் பெயர், ஜார்ஜ் ப்ளாயட். இவர் கருப்பர் இனத்தைச் சார்ந்தவர். அந்தச் சிறிய கடையில் சிகரெட் வாங்குவதற்கு, 20 டாலர்கள் கொடுத்து இருக்கிறார். அந்தப் பணம் போலியான பணம் என கடை நபர் சந்தேகப்பட்டு, காவல்துறையை அணுகுகிறார். உடனே அந்த இடத்திற்கு முதலில் இரு காவல் அதிகாரிகள் வந்து ஜார்ஜை கைது செய்கிறார்கள். தலைச் சுற்றல் இருக்கின்ற காரணத்தால், ஜார்ஜ் காவல்துறை காரில் ஏறத் தயங்குகிறார். இதன்காரணமாக காவலர்களுக்கும், ஜார்ஜ்க்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டு, டெரிக் என்ற காவல்துறை அதிகாரி, அவரைக் கீழே தள்ளி, கழுத்துப் பகுதியில் தன் முழங்காலை வைத்து கிட்டத்தட்ட 9 நிமிடங்கள் அழுத்திக் கொண்டே இருக்கிறார். ஜார்ஜ், "என்னால் மூச்சு விட முடியவில்லை" என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அருகே நின்றிருந்த மற்ற காவல்துறை அதிகாரிகளும் அந்த டெரிக்கைத் தடுக்கவில்லை! அந்த வழியே செல்லும் பொது மக்களும், ‘ஜார்ஜ் கிரிமினல் அல்ல! அவரை ஏன் இப்படிச் சித்திரவதை செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள், அதனையும் மதிக்காமல், டெரிக், அவரை அந்த இடத்திலேயே கொன்றும் விடுகிறார். அந்த 9 நிமிடங்களில் கடைசி 3 நிமிடங்கள் ஜார்ஜ் தன் நினைவை இழந்து விடுகிறார்! அவர் இறுதியாக சொன்ன வார்த்தை, “அம்மா” ”அம்மா”.
இந்த ஜார்ஜின் இறப்பு, 24 மணி நேரத்தில் அமெரிக்காவை உலுக்கி எடுத்து விட்டது. "கருப்பர்கள் வாழ்க்கை மிக முக்கியம்" என்ற பதாகை ஏந்தி, அமெரிக்கா முழுக்க முதலில் பெரும் நகரங்களில், கலவரங்களும், கண்ணீர் புகைக் குண்டு வீச்சுகளும், ரப்பர் துப்பாக்கிச் சூடுகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.
ஜார்ஜ் இறந்து போன அந்த நகரத்தின் வீதிகள் அனைத்தும், கருப்பின மக்களால் சூறையாடப்பட்டது. அமெரிக்கா முழுக்க கிட்ட தட்ட 400 சிறு நகரங்களிலும் இந்தப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்தக் கருப்பின மக்களின் கோபத்திற்கான பின்புலமாக பல உண்மைக் காரணங்கள் இருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்கா முழுவதும் கருப்பின மக்களின் மீது காவல்துறை மூர்க்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
2014ம் ஆண்டு, நியூயார்க்கில், இதே போல எரிக் கார்ட்னர் என்ற கருப்பரை, வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி கொன்று விட்டார். அந்தப் பிரச்சினைக்குக் கிட்டத் தட்ட 5 ஆண்டுகள் தீர்வு எட்டப்படவில்லை!
சில ஆண்டுகள் முன்பு, மைக்கேல் ப்ரௌன் என்ற 18 வயது சிறுவனை, 28 வயது வில்சன் என்ற காவல்துறை அதிகாரி, தொடர்ந்து 12 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று இருக்கின்றார். இது நடந்த மாநிலம் மிசௌரி. நகரம் ஃப்ர்குசான். அப்போதும் ஃபர்குசான் நகர மக்கள் போராடினார்கள். அந்த நகரில் மட்டும் பெரும் கலவரம் மூண்டது. எண்ணற்ற கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில ஆண்டுகள் வழக்கிற்குப் பிறகு, வில்சன் என்ற அந்த அதிகாரி, தற்காப்பிற்காக மைக்கேலைக் கொன்று விட்டார் என்று அந்த வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது.
இப்படி பல நிகழ்வுகள், அமெரிக்காவில் அங்கும் இங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவை அனைத்திலுமே வெகுவாகப் பாதிக்கபடுவது கருப்பின மக்கள் மட்டுமே. அவர்கள் அனைவரும் செய்த அல்லது செய்யாத சிறு தவறுகளுக்கு, அவர்கள் சுட்டுக் கொல்லபடுவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
சென்ற வாரம் நடந்த ஜார்ஜ் கொலையிலும், மக்கள் பொறுத்துப் போகத் தயாராக இல்லை. ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பல மாநிலங்களில், எண்ணற்ற நகரங்களில் போராட்டம் வெடித்துச் சிதறிவிட்டது. மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்போது அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்திருந்தால், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரி இருப்பார். கருப்பர்களைக் கொன்ற காவல்துறை அதிகாரிகளை வேலையை விட்டு நீக்கி இருப்பார். அவர்களைச் சிறையில் அடைத்து இருப்பார். ஆனால் அதிபர் ட்ரம்ப், மக்களைச் சமாதானப்படுத்தாமல், போராடும் மக்களைக் கண்டித்து, ‘இராணுவத்தை இறக்கி, சுட்டுக் கொல்வேன்!’ என்கிறார். இதனால் மக்கள் கோபம் அதிகரித்து, பல மாநிலங்களில் போராட்டம் வலுவடைந்துவிட்டது. சில மாநிலங்களில் இரவு நேரங்களில் தடை உத்தரவும் நீடிக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் இறந்து போன சூழலில், அமெரிக்கா முழுவதும் பெரும் கடை அடைப்பு, அலுவலகங்கள் மூடல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் இருக்கும் இந்தநேரத்திலும் மக்கள் பெருங்கோபத்துடன் வெளியே வரக் காரணம் - கருப்பின மக்களுக்குத் தொடர்ச்சியாக நடந்து வரும் மிகப் பெரும் பாதிப்பும், உயிர் இழப்புகளுமே! அமெரிக்கா முழுக்க எண்ணற்ற நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்றும் பல நகரங்களில் அமைதியாக போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.
மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபோலிஸ் என்ற நகரத்தில், ஜார்ஜைக் கொன்ற அடுத்த நாள் கலவரம் நடந்த இடத்தில், அமெரிக்காவின் மிக முக்கிய ஊடகமான சி.என்.என். நிருபரை அதே இடத்தில் காவல்துறை அதிகாரி கைது செய்கிறார். அந்த நிருபரும் கருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. சி.என்.என். ஊடகத் தலைமை அதிகாரி, மினசோட்டா கவர்னரை அழைத்துப் பேசி, அந்த நிருபரை விடுவிக்கிறார்.
அமெரிக்க முன்னேற்றத்திற்காக கருப்பின மக்கள் மகத்தான தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள். மிகப்பெரும் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், போராசிரியர்கள், செவிலித்தாய்கள், தொழில் அதிபர்கள், சிறந்த கல்வியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பலரும், தன்னலமற்று அமெரிக்க சமுதாயத்தை மேம்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஏதாவது பிரச்சினை என்று வந்து விட்டால் அவர்கள், “கருப்பர்கள்” என்று பொது சமுதாயம் ஒதுக்கிவிடும் என்பது மிக கசப்பான உண்மை.
வாசிங்டன், நியூயார்க், பென்சில்வேனியா, பிலடெல்பியா, அட்லாண்டா, மினியா போலிஸ், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் என்று பல நகரங்களில் கிட்டத்தட்ட 40-50 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரும் கலவரம் இப்போது 2020ல் நடந்து கொண்டு இருக்கிறது.
அந்த மக்களின் ஒரே கோரிக்கை, பாதிக்கப்பட்ட ஜார்ஜ் குடும்பத்திற்கு நீதி வேண்டும். அந்த நான்கு காவல்துறை அதிகாரிகளும் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும், நால்வரையும் சிறையில் குறைந்தது 30 ஆண்டுகள் தள்ள வேண்டும் என்பதே!
ஜார்ஜ் பிரச்சினைக்காக அமெரிக்காவில் மட்டுமல்ல, அய்ரோப்பிய நகரங்களிலும் “கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்று தொடர் போராட்டங்களாக நடந்து கொண்டு இருக்கின்றன.
கருப்பின மக்களின் விடுதலைக்குப் போராடிய 'மார்டின் லூதர் கிங்'-கின் கனவு கொஞ்ச கொஞ்சமாக நிறைவேறி வரும் வேளையில், மீண்டும் வெள்ளை, கருப்பின மக்களுக்கு நடுவே பிளவு ஏற்படுவது வருந்தத்தக்கது.
உலக நாடுகளில் அமெரிக்கா மிகவும் முன்னேறிய நாடு, முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட நாடு, உலகம் போற்றும் கல்வி நிறுவனங்கள், பெரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ள நாடு. ஆனால் இந்த ஜார்ஜ் பிரச்சினையால், எல்லாம் சிதைந்து விட்டது என்ற சிந்தனையே மீண்டும் தோன்றிவிட்டது.
ஆனால் இந்தப் போராட்டத்தில், பெரும் வெள்ளைக்கார இளைஞர்களும், வெள்ளைக்கார காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்பதும், அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதும் பெரும் நம்பிக்கைத் தருகிறது.
No comments:
Post a Comment