இலட்சங்கள் எங்களுக்கு முக்கியமல்ல - இலட்சியம்தான் எங்களுக்கு முக்கியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 5, 2020

இலட்சங்கள் எங்களுக்கு முக்கியமல்ல - இலட்சியம்தான் எங்களுக்கு முக்கியம்!

'விடுதலை' கருத்துப் போர் ஆயுதம் -


அறப்போர் ஆயுதம் - கொள்கைப் போர் ஆயுதம்!


‘விடுதலை' விளைச்சல் விழா - காணொலிமூலம் திராவிடர் கழகத் தலைவர் சிறப்புரை



சென்னை, ஜூன் 5-  லட்சியம், கொள்கை என் பதை நிலை நிறுத்திடுவதே முக்கியமே தவிர, இலட்சங்கள் பெறுவது எங்களுக்கு முக்கியமல்ல  - இலட்சியம்தான் எங்களுக்கு முக்கியம். இலட்சியத் தைப் பரப்புவதற்கு ‘விடுதலை' போர் ஆயுதம்;  கருத்துப் போர் ஆயுதம்; அறப்போர் ஆயுதம் - கொள்கைப் போர் ஆயுதம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நாம் மிகத் தெளிவாக நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


‘விடுதலை' விளைச்சல் விழா!


கடந்த 1.6.2020 அன்று மாலை  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.


அவரது சிறப்புரை வருமாறு:


அனைவருக்கும் வணக்கம்.


உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள்....


வாசக நேயர்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகலந்த வாழ்த்துகள். வாழ்த்துகள் என்பதைவிட, இது ஒரு நன்றித் திருவிழா நம்மைப் பொறுத்த வரையில். ஏனென்றால், ‘விடுதலை'யினுடைய வாழ்வு என்பது, வாசகர்களுடைய உழைப்பு என்பதிலிருந்துதான் எப்பொழுதும் கிடைத்துக் கொண் டிருக்கின்றது. அந்த வகையில், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நண்பர்கள், உடனடியாக ‘விடு தலை'யைப் படித்துவிட்டு, அவர்கள் தங்களுடைய கருத்துகளை அளிக்கிறார்கள், பரப்புகிறார்கள்.


அதுவும் இப்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலை உலகம் முழுவதும். கரோனா என்ற தொற்று நோயினுடைய தாக்கம், உயிர்ப்பலி வரையில் வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஊரடங்கிற்று, உலகடங்கிற்று, வீட்டுக்குள்ளே முடங்கிவிட்டோம் என்று சொல்லக்கூடிய நிலையில், எது அடங்கினாலும், பெரியார் கொள்கை பரவுவது அடங்காது. காற்றுக்கு எப்படி வேலி போட முடியாதோ, அதுபோலத்தான். நிச்சயமாக, இந்த சுயமரியாதை வீச்சுக்கும் வேலி போட முடியாது என்பதற்கு அடையாளமாக, ‘விடு தலை' தன்னுடைய தொடர் பணியைத் தொய் வில்லாமல் நடத்திக் கொண்டு வருவதற்கு ஒத்து ழைப்புக் கொடுக்கின்ற வாசகப் பெருமக்களாகிய உங்களுக்கு தலைதாழ்ந்த நன்றியை, ‘விடுதலை' யினுடைய 86 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், மிகுந்த அடக்கத்தோடு, பணிவன்போடு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.


சூறாவளிகளையும், சுனாமிகளையும் சந்தித்து எதிநீர்ச்சல் போட்ட ஏடு!


நம்முடைய ‘விடுதலை'யினுடைய வரலாற்றை எடுத்துப் பார்ப்போமேயானால், இத்தனை ஆண்டு காலம் அது பயணித்த காலகட்டத்தில், அது சந்தித் திருக்கின்ற சூறாவளிகள், சுனாமிகள் பலவகைப் பட்டவை, அவை சாதாரணமானவையல்ல. மிக வேகமாக சொல்லக்கூடிய ஒரு கருத்து என்று சொல்கின்றபொழுது, ‘விடுதலை' எதிர்நீச்சல் ஏடாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.


எதை மக்கள் பெரும்பாலும் நம்புகிறார்களோ, அதனை மறுப்பது, அவர்களைத் திருத்துவது என்ற பணிக்கு ஆளாகியது.


நம்முடைய இயக்கத்தினுடைய மிகப்பெரிய போர்க் கருவி ‘விடுதலை'யாகும்.


‘விடுதலை'யைப் பொறுத்தவரையில், அச்சகத்தில் அச்சிட்டு வெளியில் வருகின்றபொழுது அது காகிதம்; நம்முடைய வாசகர்கள் அதனைப் படித்து முடித்தவுடன் அது ஒரு போர் ஆயுதம். அந்த ஆயுதம், வன்முறைக்குப் போகாது - அறிவாயுதம்.


மண்டல் கமிசன் அறிக்கையில்....


மண்டல் கமிசன் அறிக்கையில் சொன்னதைப் போல, ‘‘சுயமரியாதை இயக்கத்தினுடைய புரட்சி என்பது, தெருக்களிலே நடத்தப்பட்ட புரட்சியல்ல - மக்கள் மனங்களிலே நடத்தப்பட்ட ஒரு புரட்சி'' என்று.


அந்த மக்கள் மனதில், மிகப்பெரிய ஒரு கருவியாக, போர்க் கருவியாக, முனை மழுங்காத போர்க் கரு வியாக அய்யா அவர்கள் அவ்வப்பொழுது கொடுத்த பொழுது, உங்கள் அத்துணை பேருடைய உற்சாகம், அதனை எப்பொழுதும் முனை மழுங்காமல் வைத் துக் கொண்டிருக்கிறது.


உலகம் முழுவதும் ‘விடுதலை', ‘விடுதலை' என்ற உணர்வை உருவாக்குவோம்!


அந்த வகையில், ‘விடுதலை'க்கு எத்தனையோ சோதனைகள் அய்யா காலத்திலிருந்தே வந்திருக் கின்றன. ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லுகிறேன். என்னுடைய உரை ஒரு நீண்ட உரையாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், ‘விடுதலை'யினுடைய தொண்டர்கள், தோழர்கள், விளைச்சலுக்கு உரிய உழவராப் பணியை செய்வதற்கு ஒத்துழைப்பதற் காகவே நீங்கள் வந்திருக்கின்றீர்கள். உங்களுடைய உழவராப் பணிகள் காரணமாகத்தான், விளைச்சலை நாம் பார்க்க முடியும்.


உழ வேண்டிய நேரத்தில், உழ வேண்டும் -


களை எடுக்கவேண்டிய நேரத்தில், களை எடுக்க வேண்டும் -


களத்து மேட்டுக்குக் கொண்டு வரவேண்டிய காலகட்டத்தில், அதனைக் கொண்டு வந்து மூட்டைக் கட்டவேண்டும் என்பதுபோன்ற பணிகளைச் செய் யக்கூடிய உங்கள் மத்தியில், அதிகமாக ‘விடுதலை' யினுடைய பெருமைகளைச் சொல்லவேண்டிய அவசியமில்லை - அதனை உணர்ந்தவர்கள் நீங்கள். அதற்காக நாங்கள் உறுதியேற்று, உலகம் முழுவதும் ‘விடுதலை', ‘விடுதலை' என்ற உணர்வை உருவாக்கு வோம் என்ற தெளிவு இருக்கக் கூடிய உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவேண்டும்.


அய்யா அவர்கள், ‘விடுதலை'யை ஈரோட்டில் இருந்து நடத்துகின்ற நேரத்தில்,  அந்தக் கால கட்டத் திலேயே 5 ஆயிரம் ‘விடுதலை' பிரதிகள் அச்சிடப் பட்டன. அந்தக் காலகட்டத்தில் நட்டம் 500 ரூபாய். அந்தக் காலகட்டத்தில் 500 ரூபாய் என்றால், நீங்கள் நினைத்துப் பார்த்தால், பணத்தினுடைய மதிப்பு என்னவென்று உங்களால் புரிந்துகொள்ள முடியும்.


உலகத்தின் தலைசிறந்த பொருளாதார மேதை ஆர்.கே.சண்முகம்


அய்யா அவர்களால் பெருமைப்படுத்தப்பட்ட ஆர்.கே.சண்முகம் அவர்கள், பிற்காலத்தில், இந்தியா வினுடைய நிதியமைச்சராக வந்தார். உலகத்தின் தலைசிறந்த பொருளாதார மேதை என்று உலக மக்களால் கணிக்கப்பட்டவர். அவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.


ஒருமுறை காந்தியாரை சந்தித்த ஆர்.கே.சண்முகம் அவர்கள், அவரிடம் வேகமாக பேசிய நேரத்தில்,


காந்தியார் அவர்கள், ‘‘இவ்வளவு தெளிவாக, இவ்வளவு ஆழமாக நீங்கள் பேசுகிறீர்களே, உங்களுக்கு யார் குருநாதர்?'' என்று கேட்டபொழுது,


ஆர்.கே.சண்முகம் அவர்கள் மிகத் தெளிவாக, ‘‘பெரியார்தான் எனக்கு இந்தக் கொள்கைகளில் வழிகாட்டி'' என்று சொன்னார்.


வியப்படைந்த காந்தியார்!


காந்தியார் வியப்படைந்து, ‘‘நம்முடைய ராமசாமி நாயக்கரா? அவ்வளவு அடக்கமாக இருக்கிறாரே?'' என்றார்.


அப்படிப்பட்ட ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு, 1937 ஆம் ஆண்டு ஈரோட்டிலிருந்து தந்தை பெரியார் அவர்கள் ஒரு கடிதம் எழுதுகிறார்.


அந்தக் கடித வாசகங்களை, நம்முடைய இறை யனார் அவர்கள் ‘‘இதழாளர் பெரியார்'' என்ற நூலில் மிக அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.


இளைய தலைமுறையினருக்கு இந்த வரலாறுகள் தெரியவேண்டும்; எப்படிப்பட்ட சூறாவளிகளையும், சுனாமிகளையும் பல்வேறு காலகட்டங்களிலே சந்தித் துள்ளார், நம்முடைய காலகட்டத்தில் மட்டுமல்ல.


பெரியார் அவர்கள் ‘விடுதலை'யை தொடங்கியதிலிருந்து அய்யா அவர்கள் பட்ட பாடு எப்படிப் பட்டது என்று நினைக்கின்ற நேரத்தில், இப்பொழுது ஒரு நல்ல சிமெண்ட் சாலையில் நாம் பயணிக்கின் றோம். ஏதோ நாம், பெரிய அளவிற்கு தியாகம் செய்து விட்டோம்; சாதித்துவிட்டோம் என்று நினைக்கக் கூடாது.


ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு


தந்தை பெரியார் எழுதிய கடிதம்!


அய்யா அவர்கள் 2.9.1937 ஆம் ஆண்டில் அந்தக் கடிதத்தினை கோவையிலுள்ள சர்.ஆர்கே.சண்முகம் அவர்களுக்கு ஈரோட்டிலிருந்து எழுதுகிறார்.


‘‘விடுதலை - தினசரிப் பத்திரிகை தினம் 5000 பிரதிகள் வெளியாகின்றது. பத்திரிகை நடத்துவதில் எவ்வளவு சிக்கனமாக நடத்தியும், மாதம் ரூ.500 வீதம் நஷ்டமாகிறது. இனி நஷ்டம் அதிகமாகுமே தவிர, குறையாது. காலை ஏழரை மணிக்கு ஆபீசுக்கு வந்தால், இரவு 10 மணிக்கு வீட்டுக்குப் போகிறேன். இதன் மத்தியில் சுற்றுப் பிரயாணம், இந்த நிலைமை யில் ரோஷம் என்னை அடிமையாக்கிக் கொண்டு, இந்த மாதிரித் தொல்லையில் இறக்கிவிட்டது. காசு பணம் எதிர்பார்த்து இவற்றை நான் எழுதவில்லை.''


‘விடுதலை'யைத் தூக்கி நிறுத்துவதற்கு அய்யா அவர்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு இருக்கிறார்கள் என்பதை, இன்றைய இளைய தலைமுறையினர், இன்றைய வாசகத் தலைமுறையினர் பழைய வரலாற்றுச் சுவடுகளை அளந்து பார்க்கவேண்டிய அதில் நடந்து பார்க்கவேண்டிய ஒரு மிக முக்கியமான கட்டம்.


1943 ஆம் ஆண்டு ‘விடுதலை' சென்னைக்கு வந்த காலகட்டத்தில், இடையில் ஒரு ஒன்றரை ஆண்டு காலம் யுத்த காலத்தில், அரசிடம் கொடுக்கப் பட்டு, பிறகு மீட்கப்பட்டு, 1945 ஆம் ஆண்டு முதல் ‘விடுதலை' தொடர்ந்து நடத்தப்பட்ட காலகட்டம்.


‘விடுதலை' பரவினாலும்,


பொருள் நட்டம் குறையவில்லை!


இந்தி எதிர்ப்பு, நீதிக்கட்சிக்குத் தலைவராகக் கூடிய பொறுப்பு- ஒரு பெரிய அரசியல் சூழல்களை யெல்லாம் சந்திக்கக்கூடிய சூழல். நமக்கு இருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் - ஒரே ஒரு தினசரி ‘விடுதலை'தான் என்று இருக்கின்றபொழுது, அதை நாம் விட்டுவிட முடியாது. அந்தக் காலகட்டத்தில், அண்ணா போன்ற வர்கள் எல்லாம் ‘விடுதலை' ஆசிரியராகப் பொறுப் பேற்று, எழுதி, ‘விடுதலை' மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்த அந்த சூழ்நிலைகள் வந்த பிறகுகூட, பொருள் நஷ்டம் குறையவில்லை.


‘விடுதலை'யினுடைய பொருள் லாபம் - தத்துவ லாபம் - கொள்கை வரவுகள் - பரப்பல்கள் மிக அதிகமாகின. ஆனால், பொருள் நட்டம் என்பது அடிப்படையானது. எவ்வளவுக்கெவ்வளவு ‘விடு தலை' பரவுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நட்டமும் கூடுதல் என்ற சூழ்நிலை வந்தபொழுது, எல்லா பத்திரிகைகளும் விளம்பர வருவாயை நம்பித்தான் இருக்கின்றன.


இன்றைக்கு நீங்கள் பார்த்திருப்பீர்கள், பிரபலமான பத்திரிகைகள் எல்லாம் தங்களுக்கு வருவாய் இல்லை என்று சொல்லி, எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் சந்தித்த செய்திகள் அண்மையில் வந்தது என்பது உங்கள் எல்லோரும் தெரிந்த செய்தியாகும்.


ஆனால், ‘விடுதலை' நாளிதழ் என்பது, விளம்பர வருவாயே இல்லாத ஒரு பத்திரிகை. சினிமா விளம்பரங்களைப் போடாத ஒரு பத்திரிகை. மூடநம்பிக்கை செய்திகளான ஜோதிடம், இராசி பலன் போன்றவற்றை போடாத பத்திரிகை ‘விடு தலை'. மக்கள் எதைச் சொன்னால் இனிப்பாக இருக் கும், பத்திரிகையை வாங்குவார்களோ அந்த உணர் விற்கு ஆட்படாமல், லட்சியம், கொள்கை என் பதை நிலை நிறுத்திடுவதே முக்கியமே தவிர, லட்சங்கள் பெறுவது எங்களுக்கு முக்கியமல்ல  - இலட்சியம்தான் எங்களுக்கு முக்கியம். இலட்சியத்தைப் பரப்புவதற்கு ‘விடுதலை' போர் ஆயுதம்;  கருத்துப் போர் ஆயுதம்; அறப்போர் ஆயுதம் - கொள்கைப் போர் ஆயுதம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நாம் மிகத் தெளிவாக நடத்திக் கொண்டிருக்கின்றோம்.


இன்னொரு அறிக்கையை அய்யா அவர்கள் தெளிவாகக் கொடுக்கிறார்கள்.


‘விடுதலை'க்கு எப்படி ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறபொழுது நண்பர்களே, இன்றைய இளைய தலைமுறையினருக்குப் பழைய வரலாற்றுச் சுவடுகளை நினைவூட்டுகிறோம். நெருக்கடி காலத்தைப்பற்றி கழகத் துணைத் தலைவர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதேபோல, கரோனா தொற்று காலத்தில், உங்களுடைய ஒத்து ழைப்பினால், ‘விடுதலை' தொடர்ந்து நடந்துகொண் டிருக்கின்றது. இன்றைய காலம் என்பது மின்னணு காலம். தோழர்களுடைய மனமுவந்த ஒத்துழைப்பு இருக்கின்ற காரணத்தினால், எங்களைப் போன்றவர் களுக்கு எளிதாக இருக்கின்றது இந்தப் பணி.


இதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது - எந்தப் பணியில் நமக்கு ஆர்வம் இருந்தாலும், அந்தப் பணி நமக்கு மிக எளிதாகும். எனவேதான், மனம்தான் அடிப்படையானது; மன உறுதியும், அந்தப் பிடிப்பும் தான் மிகவும் முக்கிய மானது.


எப்படிப்பட்ட ‘விடுதலை' பத்திரிகையை


நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் வாசகர்களே?


அய்யா அவர்கள் வாசகர்களை நோக்கி ஒன்றைக் கேட்கிறார், ஓர் அறிக்கையின்மூலம். 1940 ஆம் ஆண்டு சென்னைக்கு வருகின்ற நேரத்தில், அந்த அறிக்கையை வெளியிடுகிறார்.


உங்களுக்கு எப்படிப்பட்ட விடுதலை வேண்டும்?


‘விடுதலை' பத்திரிகை என்பது எப்படி அமைய வேண்டும்?


எப்படிப்பட்ட ‘விடுதலை' பத்திரிகையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் வாசகர்களே?


1935 ஆம் ஆண்டில் ஈரோட்டில் ‘விடுதலை'யைத் தொடங்கி, இத்தனை ஆண்டுகாலம் கஷ்டங்களை அனுபவித்து, சென்னைக்கு வருகின்ற நேரத்தில், என்ன சூழல் என்பதைப்பற்றி சொல்லும்பொழுது, அய்யா அவர்கள் இன்னொரு செய்தியை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார் என்பதை அந்தப் பகுதியை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.


‘‘அடிமை விடுதலையா? சுதந்திர விடுதலையா?'' இதுதான் தந்தை பெரியார் அவர்களின் அறிக்கையினுடைய தலைப்பு.


சுதந்திரமான விடுதலை வெளிவரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது அடிமை விடு தலையாக வரவேண்டும் என்று நினைக்கின்றீர்களா?


(தொடரும்)


No comments:

Post a Comment