ராம ஜென்ம பூமியைத் தோண்ட புத்தம் கிளம்பியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

ராம ஜென்ம பூமியைத் தோண்ட புத்தம் கிளம்பியது!

பேராசிரியர் அ.மார்க்ஸ்



"விண்ணளாவ இராமர் கோவில் எழுகிறது” என அமித்ஷா முழக்கமிட்டபடி அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காகப் பணிகள் தொடங்கிவிட்டன. கொரோனா கட்டுப்பாடுகள், அது, இது எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சென்ற மே 11 அன்று, பழைய இடிமானங்களின் மீது இராமர் கோவில் கட்டுவதற்கான முதற்படியாக, இடிபாடுகளைத் தோண்டி சமன்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கின. பொறுப்பேற்று செயல்படுத்திக் கொண்டுள்ள வினோத் பன்சால் என்பவர், “அகழாய்வு முக்கியத்துவம் வாய்ந்த பல பொருள்கள் தோண்டத் தோண்ட வந்து கொண்டே உள்ளன” என நாள்தோறும் ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார். அய்ந்தடி உயர சிவலிங்கம், கருப்புக் கற்களால் ஆன ஏழு தூண்கள், சிவப்புக் கற்களால் ஆன ஆறு தூண்கள், உடைந்துபோன பல கடவுளர் சிலைகள்...” - இப்படி!


சங்கிகள் சும்மா இருப்பர்களா? அவர்கள் பங்கிற்கு விஷத்தைக் கக்கத் தொடங்கினார்கள்..


“நாங்கள் அப்போதே சொன்னோம்! அங்கு இராமர் கோவில்தான் இருந்தது. அதை இடித்து விட்டுத்தான் பாபரின் தளபதி மீர்பாகி, அங்கே மசூதியைக் கட்டினான் என்றோம். ஆனால் இந்த பிபின் சந்திரா, சர்வபள்ளி கோபால், ரொமிலா தப்பார், இர்ஃபான் ஹபீப் முதலான கம்யூனிஸ்ட் வரலாற்றாசிரியர்கள் அதை மறுத்தார்கள். அதன் விளைவாக என்னென்ன நடந்து முடிந்து விட்டன! எத்தனை இரத்தம் இங்கே சிந்த வேண்டியதாயிற்று!” என்றெல்லாம் அவர்களைத் திட்டித் தீர்த்தார்கள். இந்த அறிஞர்கள் மீது பெரு மதிப்பு கொண்ட நாம் எல்லோரும் வேதனையோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.


ஒன்றை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த அறிஞர்கள் யாரும் அங்கே பாபர் மசூதிக்கு முன்னதாக எந்தக் கட்டுமானங்களும் இல்லை எனச் சொன்னதில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் அங்கு இதற்கு முன் ஏதாவது இருந்திருந்தால் அல்லது ஏதாவது இடிக்கப்பட்ட கட்டிடத் தூண்கள் மசூதி கட்டப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை இந்து ஆலயங்களில் இருந்தவை அல்ல. அவை பவுத்த விகாரை அல்லது சமணத் தலங்களில் இருந்தவையாக இருக்க வேண்டும் என்பதுதான்!


சங்கிகள், தங்களின் வெறுப்புக் கதையாடல்களை நிறுத்தவில்லை. ஆனால் சென்ற வாரத்தில் அவர்களால் வெளியிடப்பட்ட படங்களை எல்லாம் பார்த்த பவுத்த மதத்தவர்கள், அவர்களின் கதையை மறுத்தபோது, எல்லோரும் அதிர்ந்தார்கள். என்ன நடக்கிறது என கூர்ந்து பார்த்தோம். ‘தோண்டியபோது கிடைத்ததாக நீங்கள் சொல்லும் தூண்கள் முதலியன அஜந்தா, எல்லோரா, பனாரசில் இருக்கும் பவுத்தக் கட்டுமானங்களில் உள்ள தூண்களின் பாணியிலேயே உள்ளன. அவற்றைப் பாதுகாப்பாக வைத்து ஆய்வு செய்ய வேண்டும்’ எனும் குரல்கள், பல திசைகளிலிருந்து இப்போது வரத் தொடங்கியுள்ளன. பவுத்த மதத்தினர் பலரும், பிரதமர் மோடி உட்பட பலருக்கும் தொடர்பு கொண்டு இதனை வற்புறுத்தியுள்ளனர். உலகப் பாரம்பரியங்களைக் காப்பதற்கான “யுனெஸ்கோ” அமைப்பைத் தலையிடுமாறு வற்புறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.


முன்னாள் காங்கிரஸ் எம்.பி உதித் ராஜ், “இன்று வெளிவந்துள்ள இந்தத் தூண்கள் பற்றிய உண்மைகளின் அடிப்படையில், நான் ஒன்றும் ‘நம்பிக்கைகள்தான் முக்கியம்’ எனச் சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியெல்லாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், வல்லுநர்களைக் கொண்டு இது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். தொல்லியல் ஆய்வுக் கழக (கிஷிமி) மேற்பார்வையில், முழுமையாக அகழ்ந்து பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இப்படியான கருத்து வருவது இது முதல்முறை அல்ல. முன்னதாகச் சென்ற முறை (2014-19) பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் கட்சி எம்.பிக்களில் ஒருவரான சாவித்ரிபாய் புலே என்பவர், “அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோவிலும் வேண்டாம். மசூதியும் வேண்டாம். பேசாமல் புத்த நினைவிடமாக அதை ஆக்கி விடலாம்” எனக் கூறியதும், அயோத்தியைச் சேர்ந்த வினித் குமார் மௌர்யா என்பவர், அப்பகுதியை “அயோத்தி புத்த விகாரை” என அறிவிக்குமாறு வழக்குத் தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கன.


 


நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பாபர் மசூதி இருந்த அயோத்தி என்பது ஒரு மிகப் பழைய நகரம். குறைந்தபட்சமாக அதன் காலத்தை நிர்ணயித்தாலும் கூட, கி.மு. 500-லிருந்து அந் நகரம் முக்கியமான ஒன்றாக வரலாற்றில் காணப்படுகிறது என வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர் (அதற்கும் முன்னதாகச் சொல்பவர்களும் உண்டு). அதாவது புத்தர், மகாவீரர் காலத்திலிருந்து உள்ள நகரம். இந்த இருவருமே அயோத்தி வந்து தங்கியதாக அவர்களின் நம்பிக்கைகள் உள்ளன. புத்தர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகாலம் அங்கிருந்ததாகக் கூறுகின்றனர். சமண தீர்த்தங்கரர்களில் அய்வர் அயோத்தியில் பிறந்ததாக அவர்கள் நம்புகின்றனர்.


பழம் சீன யாத்ரீகர்களான பாகியான், யுவான் சுவாங் இருவருமே அயோத்தியை ஒரு பவுத்த மய்யமாகவே குறிக்கின்றனர். அப்போது அதன் உண்மையான பழம் பெயரான “சாகேத்” (சமஸ்கிருதத்தில் ‘சாகேதா’) என, அது அழைக்கப்பட்டது. சாவஸ்தி - பிரதிஸ்தனம், ராஜகிருகம் - வாரணாசி எனும் இரு முக்கிய வணிகப் பாதைகள் சந்திக்கும் புள்ளியாக சாகேத் இருந்துள்ளது. சம்யுத்த நிகாயம், வினய பிடகம், சுத்த நிபாதம் முதலான பவுத்தத்தின் மூன்று புனித நூல்களில் சாகேத் பற்றிக் குறிப்புகள் உள்ளன. சிராவஸ்தி எனும் சரித்திரப் புகழ்பெற்ற நகரம் சாகேத்தில் இருந்து 6 யோசனைத் தூரத்தில் இருந்தது என்றும் பதிவு இருக்கிறது. புகழ்பெற்ற பவுத்த அறிஞர் அஸ்வ கோஷர், தன்னை “சாகேத்தின் மகன்” எனச் சொல்லிக் கொண்டார். மாமன்னர் அசோகர் காலத்திய 200 தூபங்கள் அங்கே நிறுவப்பட்டிருந்தன என அவர் குறிப்பிடுகிறார்.


1862 - 63 ஆம் ஆண்டுகளில், அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தொடங்கி, ஃப்யூரர், பி.பி.லால் எனப் பல அகழாய்வு நிபுணர்களால் கிட்டத்தட்ட 5 முறை அயோத்தியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் அந்நகரின் பவுத்த சமணப் பழைமைகள்தான் உறுதி செய்யப்பட்டிருக்கிறதே ஒழிய, ராமர் கோவில் இருந்ததற்கு வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை. பாபர் காலத்தில், அவருக்குச் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்தான், புகழ்பெற்ற கவிஞர் கோஸ்வாமி துளசிதாசரால் (கி.பி. 1532 -1623) இராமனின் வரலாறான ‘ராமச்சந்திர மானஸ்’ எனும் முக்கிய காவியம் இயற்றப்படுகிறது. அதில் எங்கும் அயோத்தியில் கோவில் இருந்து, இடிக்கப்பட்டதாக எல்லாம் குறிப்பு இல்லை.


ஆக, பாரம்பரியமாக ‘சாகேத்’ எனும் பெயருடைய சமண, பவுத்த நகரமாகத்தான் அது இருந்துள்ளது. அதன்பின், இன்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன் அங்கு முஸ்லிம் ஆட்சியின்போது, பாபர் மசூதி கட்டப்பட்டதுதான் வரலாறாக உள்ளது. கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக, ஃபைசாபாத் மாவட்டமாக இருந்ததுதான் இப்போது யோகி ஆதித்யநாத்தால் அயோத்தி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி எனும் பெயர், இடைக் காலத்தில் ராஜபுத்திரர்கள் ஆண்டபோது புழக்கத்திற்கு வந்திருக்கலாம். தற்போது இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்னதாக இராமர் கோவில் இருந்ததற்கு எந்தப் புதிய ஆதாரமும் கண்டுபிடிக்கப் படவில்லை. இப்போது அகழ்வில் கிடைத்துள்ள தூண்கள் முதலியன மசூதியை இடித்த நடவடிக்கையை நியாயப்படுத்த எந்த வகையிலும் உதவாது. அங்கு ஏதோ ஒரு காலத்தில் இராமர் கோவில் இருந்தது என வாதிடுவதற்கும் அவை உதவாது. சிரவண மதங்கள் குறிப்பிடும் ‘சாகேத்’ நகரமாக இன்றைய அயோத்தி இருந்து வந்ததற்கு ஆதாரமாக மட்டுமே அவை அமையலாம்.


பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு குற்ற நடவடிக்கை, அங்கே மீண்டும் மசூதி நிறுவப்படாமல் ஆக்கப்பட்டது அநீதி என்கிற கருத்து எங்கிருந்து வருகிறது என்றால் இப்படி 400 ஆண்டுகள் இருந்து, தொழுகை நடத்தப்பட்ட ஒரு தொழுகைக் தலத்தை இடித்தது குற்றம் என்பதும், அந்த அடிப்படையில் மீண்டும் அங்கு மசூதியே கட்டப்பட வேண்டும் என்பதும்தான். நமது அடிப்படைச் சட்டங்களின்படி, 400 ஆண்டுகளுக்குப் பின்னெல்லாம் யாரும், எந்த உரிமையும் கோர முடியாது என்பதையும் நாம் நினைவில் இருத்த வேண்டும். அண்மைத் தீர்ப்பைப் பொருத்தமட்டில், நானூறு ஆண்டுகள் முஸ்லிம்களின் தொழுகைத் தலமாக இருந்த ஒரு கட்டுமானம், வன்முறையாக இடிக்கப்பட்டதை நியாயப் படுத்துவதற்கெல்லாம் இன்று அவர்கள், ஏக ஆர்பாட்டமாகச் சுட்டிக் காட்டும் இப்போது தோண்டி எடுக்கப்பட்ட இந்தத் தூண்கள் உதவாது.


ஒரு பிற்குறிப்புடன் முடித்துக் கொள்கிறேன். இன்று வடநாட்டில் உள்ள தலித் அறிவுஜீவிகள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்கின்றனர். அவர்கள் இந்திய வரலாறு குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்திலிருந்து இதைத் தொடங்குகின்றனர். இந்திய வரலாற்றை இந்து - முஸ்லிம் போராட்டமாக சங்கப் பரிவாரங்கள் முன் வைப்பதை அம்பேத்கர் ஏற்பதில்லை. இங்கிருந்த அடிப்படை முரண்பாடு, வைதீகத்திற்கும், பவுத்தத்திற்கும் உள்ள முரண்பாடுதான் என்பதை அவர், பல ஆதாரங்களுடன் வலியுறுத்தி உள்ளார். புஷ்ய மித்திர சுங்கன் போன்ற பார்ப்பன மன்னர்களால் பவுத்தம் அழிக்கப்பட்டது. ஒரு சாகேத் எனும் பவுத்த நகரம் இப்படி வன்முறையாக இடிபாடுகள் செய்து அயோத்தியாவாக மாற்றப்படுவதை ஏற்கமுடியாது என இன்று யோகி சிக்கந்த், சுனந்தா கே. தத்தா ராய் முதலான தலித் அறிஞர்கள் வாதிடுகின்றனர்.


No comments:

Post a Comment