ஜார்க்கண்டில் ஒரு புரட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 4, 2020

ஜார்க்கண்டில் ஒரு புரட்சி

இந்திய வரலாற்றில் முதல்முறையாக பழங்குடி யினத்தவர் ஒருவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியுள்ளார்.


ஜார்க்கண்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பழங்குடிப் பெண் பேராசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.


 ஜார்கண்ட் மாநில ஆளுநர்  திரவுபதி முர்மூ, கடந்த மே 28 அன்று ஜார்க்கண்டின் தும்காவில் உள்ள சிடோ கன்ஹு முர்மூ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சோனாஜாரியா மின்ஸை நியமித் தார்.  ஆளுநர் முர்மூ கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங் களின் வேந்தராக இருந்து வருகிறார்.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் (ஜே.என்.யு.டி.ஏ) தங்களது முன்னாள் தலைவர் மின்ஸின் நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


மின்ஸ் தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் அண்ட் சிஸ்டம்ஸ் சயின்ஸின் பேராசிரியராக உள்ளார். கடந்த ஜனவரி 5-ஆம் தேதி இரவு ஜே.என்.யூ. வளாகத்தில் இந்துத்துவ குண்டர்களால்  நடத்தப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்த பேராசிரியர்களில் இவரும் ஒருவர்.


தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் மின்ஸ் உயர் படிப்பை முடித்தார். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஜே.என்.யுவிலிருந்து கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.


கடந்த 1992-ஆம் ஆண்டில் ஜே.என்.யுவில் சேருவதற்கு முன்பு, மின்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மத்திய பிரதேசத்தின் பர்கத்துல்லா பல்கலைக்கழகம் ஆகிய வற்றில் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இதுமட்டுமின்றி தேசிய மற்றும் பன்னாட்டு பத்திரி கைகளில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட் டுள்ளார்.


பீகார் சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டத்தால் 1992-ஆம் ஆண்டில் இந்தப் பல்கலைக்கழகம் சிடோ கன்ஹு முர்மூ பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. இது ஜார்க்கண்ட் மாநிலத்தின் கீழ் வந்தது. இது 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.  பல்கலைக்கழக அதிகார வரம்பு சந்தால் பர்கானாஸின் ஆறு மாவட்டங்களில் பரவியுள்ளது. இது 13 தொகுதிகளைக் கொண்டுள்ளது மற்றும் நிரந்தரமாக இணைக்கப்பட்ட ஒன்பது கல்லூரிகள் உள்ளன.


கடந்த 1855-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்  ஆட்சிக்கு எதிராக, இந்தியாவில் முதல் சுதந்திரப் போருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சந்தால் ஹல் என்று பிரபலமாக அறியப்பட்ட சந்தால் போராட்டத்தை வழிநடத்திய இரண்டு புகழ்பெற்ற சந்தால் சுதந்திரப் போராளிகளான சிடோ முர்மூ மற்றும் கன்ஹு முர்மூ ஆகியோரின் நினைவாகவே இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.


இவரது இந்தப்பயணம் எளிமையான பய ணம் அல்ல, இவருக்கு ஒவ்வொரு முறையும் முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு இவரைத் தேடி வரும் போது உடனடியாக இவர் வேறு ஒரு துறைக்கு மாற்றப்பட்டுவிடுவார்.  இவர் ஆட்சியாளரின் கொள்கைக்கு எதிரான இடதுசாரிக் கொள்கை அமைப்பில் இருந்த காரணத்தால் இவருக்கு பல வழிகளில் நெருக்கடிகள் தொடர்ந்து கொடுத்து வந்தனர். முக்கியமாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஒன்று திரண்ட போது முகமூடி அணிந்த இந்துத்துவ அமைப்பு மாணவர்கள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து மாணவிகள் தங்கி இருந்த விடுதியில் தாக்குதல் நடத்தினர். அவர்கள் தாக்குதலில் தாக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இந்தப் பேராசிரியரின் பெயரும் உண்டு. ஆகையால் தான் அவரைத் தேடிச் சென்று தாக்கினார்கள். மாணவிகளைக் காப்பாற்ற தனது முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையிலும் இந்துத்துவ குண்டர்களிடம் போராடினார். துணைவேந்தராக இவர் நியமிக்கப்படுவதற்கு காங்கிரஸ் கூட்டணி -  ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் மிகவும் முக்கிய காரணம் ஆவார். இந்த சமூக நீதிப் புரட்சி வடமாநிலங்களில் மேலும் மேலும் பரவட்டும்!


No comments:

Post a Comment