'ஆரிய மாயை' எனும் நூலில் அறிஞர் அண்ணா அவர்கள் 'ஆரியத்தை பேசு நா இரண்டுடையாய் போற்றி' என்று ஆராதிப்பார்.
கேரளாவில் ஒரு கருவுற்ற யானை மரணித்தது என்றவுடன் பிஜேபியும் சங்பரிவாரும் ஆடி தீர்த்தனர். கம்யூனிஸ்டு ஆட்சியில் எங்கள் தும்பிக்கை விநாயகரின் யானை கொல்லப்பட்டது. இந்து மதத்துக்கு எதிரான கம்யூனிஸ்டு ஆட்சி ஒழிக என்று மத்திய அமைச்சர் முதற்கொண்டு முண்டா தட்டினர். இப்பொழுது பிஜேபி ஆளும் இமாசலப் பிரதேசத்தில் இவர்கள் கோமாதாவாகிய கருவுற்ற பசு அதே போல (கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி மருந்து வைத்து) மாண்டு விட்டது - ஆனால் பேச்சு மூச்சைக் காணோமே - மனு நீதி, ஒரு குலத்துக்கொரு நீதி இதுதானே!
கரோனாவைக் கட்டுப்படுத்தும் சாதனையில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) ஆளும் கேரளா இந்தியத் துணைக் கண்டத்திலேயே முன் மாதிரி மாநிலமாக ஒளிவீசி நிற்கிறது.
பினராயி விஜயன் மிகவும் சாதுர்யமாகவும் சரியான திட்டமிடலுடனும் இதனைச் சாதித்தும் காட்டியுள்ளார்.
பொறுக்குமா பிஜேபி சங்பரிவார் வகையறாக் களுக்கு! ஏதாவது சாக்குப்போக்குக் கிடைக்காதா அதை வைத்து இவர்களை நையப் புடைத்து விட லாமே என்று ஏங்கிக் கிடந்தார்கள் போலிருக்கிறது.
இப்பொழுது ஒரு கருவுற்ற யானை விடயம் அவர்களுக்கு வசமாகக் கிடைத்து விட்டது. விட்டு விடுவார்களா இதனை? ஆம். இதனைத்தானே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தோம்.
ஆபத்பாந்தவனாக கஜேந்திரன் அருள் பாலித்து விட்டான் என்ற நினைப்பில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டனர்.
கேரள மலப்புரத்தில் வனப் பகுதியில் உள்ள தோட்டத்தில் மரவள்ளி மற்றும் இதரப் பயிர்களைக் காட்டுப் பன்றி சேதப்படுத்துவது உண்டு. அதற்காக விவசாயிகள் ஒரு வேலையை செய்வதுண்டு. (சட்ட விரோதமானதுதான் அது)
பன்றிகள் விரும்பி சாப்பிடும் பழங்களில் வெடி மருந்துகளைத் திணித்து வைத்து விடுவார்கள்.
இந்த நிலையில் கருவுற்ற பெண் யானை ஒன்று காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்ட வெடி மருந்து பொதியப்பட்ட தேங்காயை சாப்பிட்டதால் வெடித்து, உறுப் புகள் சிதைந்து பரிதாபகரமாக மரணத்தைத் தழுவியது வேதனையான ஒன்றே!
இல்லை..... இல்லை - யாரோ ஒருவர் திட்டமிட்டு தான் வெடி மருந்தை உள்ளே வைத்து அந்தப் பொருளை யானைக்குக் கொடுத்துள்ளனர் என்பது இன்னொரு செய்தி.
இதன்மீது கேரள அரசு வேகமாக விசார ணையைத் தொடங்கியுள்ள நிலையில், ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா - கேரள கம்யூனிஸ்டு அரசுமீது பழி தூற்றலாமா சகதிகளை வீசலாமா என்று காத்துக் கொண்டிருந்த பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பல் 'விட்டேனா பார்!' என்று தோள் தட்டி, துடை தட்டி வஸ்தாது வேலையில் இறங்கி விட்டது.
சாதாரண திருப்பதி நாராயண அய்யர்களிலிருந்து மேனகா காந்தி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ டேகர் வரை கொம்பு சுற்ற ஆரம்பித்து விட்டனர்.
யானை முகத்தான் அல்லவா விநாயகக் கடவுள்.... அவனை அவமதிப்பதா? ஆச்சா - போச்சா என்று ஆவேச ஊழிக் கூத்து ஆடித் திரிகின்றனர்.
திரிநூல் ஏடான தினமலரோ (6.6.2020) "யானை யின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்று வோம்!" எட்டுப் பத்தி தலைப்புக் கொடுத்து அந்தப் பக்கத்தில் கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளது.
"வெடி பொருள் நிரப்பிய அன்னாசி பழத்தை ஒரு கொடூர மனித மிருகமே அந்த யானைக்குக் கொடுத்துள்ளது.
ஏதும் அறியாத அந்த அப்பாவி யானை, கொடுத்தவரை நன்றியுடன் பார்த்தவாறு, வெகு வேகமாக பழத்தை துதிக்கையில் ஏந்தி வாயில் போட்டதுதான் தாமதம், யானையின் வாய், தாடை, நாக்கு எல்லாம் சிதறியது.
ரத்தம் சொட்டச் சொட்ட, செய்வதறியாது தவித்த யானை, அங்குமிங்கும் ஓடியது. "இது போன்ற நேரத்தில் யானைக்கு கோபம் வரும். ஆனால், இந்த யானை, யாரையும் தாக்கவில்லை. எந்தப் பொருட்களையும் சேதப்படுத்தவில்லை.
'தெய்வீகமானதாகத் தெரிந்தது' என சம்பவத்தை நேரில்பார்த்தவர்கள் கூறுகிறார்கள் என்கிறது தினமலர்.
நேரில் பார்த்தவர்கள் கூறுவதாக 'தினமலர்' கூறுகிறது. நேரில் பார்த்தவர்கள் இருந்திருந்தால் யானைக்கு அன்னாசி பழத்தைக் கொடுத்தது உண்மையானால், அந்த ஆசாமி யார் என்று சொல்லியிருக்க மாட்டார்களா?
நேரில் பார்த்தது போல 'தினமலர்' திரிக்கிறது - திரிநூலுக்குத் திரிக்கவா தெரியாது.
யானைக்குக் கோபம் வரவில்லை. 'தெய்வீகமாக தெரிந்தது - அடேயப்பா - எத்தகைய கற்பனை வளம்'.
இப்பொழுது அடுத்த கட்டத்திற்குத் தாவி விட்டது 'தினமலர்' ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கா விட்டால் அந்த வகையறாவுக்குத் தூக்கம் வருமா?
மதத்தை இதனோடு சம்பந்தப்படுத்தி யானை யின் ஆன்மா சாந்தி அடைய ஏற்பாடும் செய்து விட்டது.
இன்று (7.6.2020 ஞாயிறு) மாலை 6.05 - 6.15 மணிக்குள் வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு முன் ஒரு விளக்கை ஏற்றுவோம். இறந்த யானை களின் (ஆமாம் இறந்தது ஒரு யானைதானே? அது என்ன யானைகளின்!) ஆன்மா சாந்தி அடைய மனமுருகி வேண்டுகிறோம் என்பதோடு நிற்க வில்லை -
விநாயகர் அகவலிலிருந்து ஒரு பாட்டையும் வெளியிட்டுள்ளது.
எங்கு இழவு விழுந்தாலும் திதிக்கும், திவசத்துக்கு தயாராகும் கூட்டமல்லவா - யானை விடயத்திலும் 'பக்தி விநாயகர்' விளம்பரத்தைச் செய்துள்ளது.
இப்பொழுதெல்லாம் விளக்கு ஏற்றச் சொல் லுவது, கைதட்டச் சொல்லுவதுதான் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டதே!
யானையின் பரிதாபகரமான மரணத்துக்காக துயரம் பொதுவாக நிலவும் ஒரு நிலையில், இதில் மதத்தையும் கொண்டு வந்து வலுக்கட்டாயமாக திணித்து சர்ச்சை ஏற்படுத்துவதற்கான குற்றத்தைச் செய்திருப்பது 'தினமலர்' என்பது நினைவில் இருக்கட்டும்.
ஆற்றுக்குச் சென்ற யானையை முதலைக் கவ்விப் பிடிக்க உயிருக்குப்போராடிய நிலையில் ஆதிமூலமே! என்று யானை பிளிற, கஜேந்திரன் தோன்றி முதலையைக் கொன்று தும்பிக்கைப் பகவானின் (விநாயகனின்) யானையைக் காப்பாற்றி யதாகக் கூறும் புராண சமாச்சாரங்கள் இங்கே 'ஒர்க் அவுட்' ஆகவில்லையோ!
அதே நேரத்தில் இன்னொரு தகவலை இந்த இடத்தில் எடுத்துக் கூறினால்தான் இந்த விநாயகப் பக்தர்களான ஜீவோபகார மனுஷாளுக்கு கொஞ்சம் உறைக்கும்.
2016ஆம் ஆண்டுக்குப் போவோம். காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு போராட்டம் நடத்தியது பிஜேபி. கலவரச் சூழலில் குதிரைப் படையைக் கொண்டு வந்தது அரசு.
ஒரு பிஜேபி பிரமுகர் கணேஷ் ஜோஷி என்ன செய்தார்? ஒரு குதிரையை மிருகத்தனமாகத் தாக்கி அதன் காலையே உடைத்து விட்டார். காணொலியில் அந்தக் காட்சி ஓடியது.
அந்தக் குதிரை கடுமையாகத் தாக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்தும் விட்டது.
ஒரு குதிரை சாகும் அளவுக்குச் சண்டித்தனம் செய்தார் ஒருவர் என்றால், அதுஎன்ன சாதாரணமா?
2017ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் பிஜேபி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்று விட்டார்.
அந்தத் திருப்தியோடு 'ஆத்மா' சாந்தி அடை யுமா? அமைச்சர் பதவிக்கு நிகரான சுகாதாரத்துறைக் கண்காணிப்புக் குழுத் தலைவராக பரிவட்டம் சார்த்தப்பட்டார்.
குதிரையைச் சாகடித்தது எல்லாம் ஜீவ காருண்ய - தெய்வீக ஒளி வட்டத்துக்குள் வராதா! செத்த மாட் டின் தோலை உரித்த நான்கு தாழ்த்தப்பட்டவர்களை சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் கொன்றார்களே - அது எத்தனைக் கோர - ஜீவோபகாரம்? மனித உயிரைவிட செத்துப் போன பசுதானே பரிவார் களுக்கு உயிர்!
யானை, பசு இவைகளைத்தான் தெய்வமாக வழிபடுகிறோம் என்று 'தினமலர்' இந்தக் கட்டு ரையில் எழுதி - எங்களப்பன் குதிருக்குள் இல்லை! என்று அடம் பிடிக்கிறது.
காந்தியார் படுகொலை செய்யப்பட்ட போதும், ஒரு ஹிந்துவே ஒரு ஹிந்துவைக் கொன்றதால் ஏற்பட்டுள்ள தோஷத்தைப் போக்க எல்லாரும் ஸ்நானம் பண்ணுங்கோ! என்றார் காஞ்சிப் பெரிய வாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.
சிறீரங்கத்தில் சுபயோக சுபதினத்தில் நிச்சயிக் கப்பட்ட ஒரு விவாஹ சுபமுகூர்த்தத்தின்போது, மணப்பெண் சேலை தீ பிடித்து மணமகன் உட்பட பலரும் பரிதாபமான முறையில் இறந்த நேரத்தில்கூட காஞ்சிபெரியவாள் சொன்னது: - வீட்டுக்கு வீடு விளக்கு ஏற்றுங்கள்" என்பதுதான்.
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்குள் ஓர் எருமைக் கிடா 'அத்துமீறி' நுழைந்தபோதும் இதையேதான் பெரியவாள் சொன்னார். எதிலும் மதம், எதிலும் சாங்கியம், இவற்றை இடை இடையே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் இவற்றில்தான் அவாள் ஜீவிதமே இருக்கிறது. நன்னா தெரிஞ்சிக்கிங்கோ!
- கலி. பூங்குன்றன்
No comments:
Post a Comment