* கலி. பூங்குன்றன்
இப்படியொரு சுவரொட்டி கோவை மாநகரமெங்கும் ஒட்டப்பட்டுள்ளது. ஆற்றில் சிக்கி சாகப் போகிறவன் துரும்பாவது கிடைக்காதா என்று கையையும், காலையும் ஆட்டி அவதிப்படுவதுபோல இந்த பிஜேபி - சங்பரிவார் கும்பல் தமிழ்நாட்டில் போணியாகாத விரக்தியில் இப்படியொரு கற்பனைக் குற்றத்தை எடுத்துக் கொண்டு மக்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவலாம் என்று மனப்பால் குடிப்பதாகத் தெரிகிறது.
எந்த சமுதாயத்திலும் பிரகலாதன்கள் கிடைப்பார்கள் தானே!
இவர்களின் அரசியல் தூண்டிலுக்கு திராவிடர் கழகத்தையும் இழுத்துப் போர்த்துவதுதான் வேடிக்கை.
இதே தமிழக பிஜேபியின் தலைவராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் கிருபாநிதியை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினர்? மாநில தலைவருக்குக் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்ற முடியாத சூழலை உருவாக்கவில்லையா?
நகல் எடுக்கவும், டைப் செய்யவும்கூட அலுவலகத்தின் வெளியில்தான் செல்ல வேண்டியிருந்தது என்று பேட்டி கொடுக்கவில்லையா? பிஜேபி பிரமுகர் இல. கணேசன் தன் கையைப் பிடித்து முறுக்கினார் என்று கண்ணீர் விட்டு அறிக்கை கொடுத்தாரே டாக்டர் கிருபாநிதி! இத்தகவல் களை அந்த சந்தர்ப்பத்திலேயே 'விடுதலை' எழுதிக் கண்டித்தது உண்டே!
அகில இந்திய பிஜேபி தலைவர் பங்காரு லட்சும ணனும், உ.பி. கல்யாண்சிங்கும், செல்வி உமாபாரதியும் பிஜேபி என்றால் பார்ப்பனக் கட்சிதான் என்று வெளிப்படையாகவே கூறிடவில்லையா?
ஆர்.எஸ்.எசுக்கு தலைவராக ஒரு பார்ப்பனரைத் தவிர வேறு ஒருவரை அமர்த்த முடியுமா? (விதி விலக்கு - ஒரே ஒரு முறை ராஜேந்திரசிங்).
சுய விளம்பரத்துக்காக சுவரொட்டி ஒட்டியுள்ள இந்த தலித் அமைப்பின் பொறுப்பாளர் (இவர் யார் என்று உள்ளூர் மக்களுக்கே தெரியவில்லை என்பதுதான் நகைச்சுவையான செய்தி.) காஞ்சி சங்கரமடத்துக்குள் நுழைந்து சங்கராச்சாரியின் பக்கத்தில் சற்று இடைவெளியி லாவது (கரோனா காலம் என்றுகூட சொல்லிக் கொள்ள லாமே!) ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்லுங்கள் பார்க்கலாம்!
ஆனால் சுப்பிரமணியசுவாமிகளும், அசோக் சிங்கால்களும் சங்கராச்சாரியாருக்கு அருகில் சரி சமமாக நாற்காலியில் அட்டகாசமாக உட்கார முடிகிறது (ஏடுகளில் படங்களே வெளி வந்தன). அதே நேரத்தில் மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் தரையில்தானே அமர முடிந்தது. ஏன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்கூட தரையில் தானே அமர்த்தப்பட்டார். இந்த வரலாறு எல்லாம் தெரியுமா இந்தப் பிரகலாதன் களுக்கு?
'தீண்டாமை க்ஷேமகரமானது!' என்று சொல்பவர்கள் தானே இந்த சங்கராச்சாரியார்கள்?
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாண்புமிகு கே.ஆர். நாராயணன் அவர்கள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த போதும் சரி, குடியரசுத் தலைவராக இருந்த போதும் சரி சங்கரமடம் செல்லுவதை அறவே தவிர்த்தார் - சங்கரமடத்தில் தலை குனியும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்ற தன்மானம் தான் இதற்குக் காரணம்.
சங்கரமடத்தில் பார்ப்பனர்களுக்கு மரியாதையும் பார்ப்பனர் அல்லாதாருக்கு அவமரியாதையும்
தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அதற்காக தொடர்ந்து களம் கண்ட கழகம் திராவிடர் கழகம் - அதன் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.
அதற்காக சட்டம் கொண்டு வந்தது திமுக - முதல் அமைச்சர் கலைஞர்தானே! அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! அருந்த தியர்க்காக தனி ஒதுக்கீட்டை (3 விழுக்காடு) கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அளித்தது திமுக - முதல் அமைச்சர் கலைஞர். (அதன் பலன் என்ன என்பதை 'பெட்டி செய்தி'யில் காண்க) பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கியது யார்?
சென்னை உயர்நீதிமன்றத்திலே இதுவரை ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக முடியவில்லையே என்று குரல் கொடுத்தவர் யார்? தந்தை பெரியார்தானே! விடுதலையில் தலையங்கம் தீட்டியவர் யார்? விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்கள் தானே - அதற்கான செயல்பாட்டைச் செய்தவர் யார்? முதல் அமைச்சர் கலைஞர் தானே! சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜஸ்டிஸ் ஏ. வரதராஜன் அவர்கள்தானே முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி, உச்சநீதிமன்றத்திலும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தமுதல் நீதிபதியும் அவர்தானே? இந்த சரித்திரம் படைக்கப்பட்டதும் எப்படி? யாரால்? என்பது நாட்டுக்கே தெரியும் - வரலாற்றிலும் பதியும் !
இவையெல்லாம் தெரியாமலோ - தெரிந்திருந்தும், யாருக்கோ அம்பாகவோ செயல்படுவது அசல் வெட்கக் கேடு!
இந்த வெட்கக்கேட்டுக்கு பொட்டு வைத்ததைப் போல், அண்ணா திமுகவினரும் சேர்ந்து சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதும்.
மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அருணாசலம் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக அவரை விமானத்தைவிட்டு இறங்கச் செய்தது யார்? அவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக எதிர்பார்க்கிறதா?
திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி - இந்த அமைப்புகளுக்கே 'பள்ளன் கட்சி', 'பறையன்' கட்சி என்றுதான் பெயர். அதற்காக அன்றும் சரி, இன்றும் சரி, நாங்கள் பெருமைப்படக் கூடியவர்கள்தாம்!
'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்' என்று கூறும் பிஜேபியே! எல்லாரும் ஒரே ஜாதி - சரி சமம் என்று சொல்லத் தயாரா? சட்டம் கொண்டு வரத் தயாரா? என்று திராவிடர் கழகத் தலைவர் வினா தொடுத்தாரே - இதுவரை பதில் உண்டா?
ஜாதி ஒழிப்புக்காக அரசமைப்புச் சட்டம் வரை எரித்து பத்தாயிரம் பேர்கள் வரை போராட்டத்தில் குதித்து மூன்றாண்டு வரை சிறைத் தண்டனை ஏற்ற திராவிடர் கழகத்தைச் சம்பந்தப்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது.
எங்களைக் கைது செய்ய வேண்டுமாம், செய்து பார்க்கட்டும் - பார்ப்பனீயத்தின் வண்டவாளத்தையும், துணைபோகும் விபீடணத்தையும், பின்னணியிலிருந்து இயக்கும் சூத்திரதாரிகளையும் நீதிமன்றத்திலேயே சந்தி சிரிக்க வைக்கும் நல்ல வாய்ப்பே! அந்த நாளும் வந்திடாதோ என்றுதான் ஏங்குகிறோம்.
வரலாறு தெரியாமல் யாருடைய ஏவலுக்கோ அம்பாக வேண்டாம் அன்பரே!
அருந்ததியினர் பெற்ற பலன்
ஆதி திராவிட மக்களுக்குள், அருந்ததியினர் சமூக மற்றும் பொரு ளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்கு சிறப் புச் சலுகைகள் அளிப்பது அவசி யமெனக் கருதி, ஆதி திராவிடர் களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முடிவு 27-11-2008 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக் கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2009ஆம் ஆண்டில் “தமிழ்நாடு அருந்ததி யர்கள் “தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங் களில் இடங்கள் மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை தாழ்த்தப்பட் டோருக்கான ஒதுக்கீட்டிற்குள்ளாக தனி ஒதுக்கீடு செய்தல் சட்டம்” இயற்றப்பட்டு,29-4-2009இல் இது தொடர்பான விதிகளும் உருவாக் கப்பட்டு தி.மு.கழக ஆட்சியில் இவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்கப் பட்டதன் காரணமாக 2009- 2010இல் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 56 மாணவ - மாண வியர் மருத்துவக் கல்லூரிகளிலும், 1,165 மாணவ - மாணவியர் பொறியியல் கல்லூரி களிலும் சேர்ந்து, மொத்தம் 1,221 பேர் பயன் பெற்றனர்.
2008-2009ஆம் ஆண்டில், பொறியியல் பட்டப்படிப்பில் அருந் ததியர்களுக்கு கிடைத்த இடங்கள் 1,093. உள்ஒதுக்கீடு வழங்கியதற்குப் பிறகு 2009-2010ஆம் ஆண்டில், அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1,165.
2010 - 2011இல் இந்த எண் ணிக்கை மருத்துவக் கல்லூரிகளில் 70 என்றும், பொறியியல் கல்லூரி களில் 1,813 என்றும் மொத்தம் 1,883 என்றும் மேலும் அதிகரித்தது.
2009-2010இல் முதன் முதலாக - அருந்ததியர்க்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின் மருத்துவ, பொறியியல் கல்லூரி களில் சேர்ந்து பயனடைந்த அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக; “பெண் சிங்கம்” என்ற திரைப்படத்திற்கு தான் கதை வசனம் எழுதி, அதற்கு ஊதியமாகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயையும், மேலும் தன் சொந்தப் பணத்திலி ருந்து 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் 61 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கி, இந்த 1,221 பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி வளர்ச்சி நிதியாக 5-12-2009 அன்று வழங்கியவர் டாக்டர் கலைஞர். இவற்றை எல்லாம் மறைத்து விட்டு தாழ்த்தப்பட்டோ ருக்கு எதிரி திமுக என்று திமுகமீது சேற்றை வாரி இறைக்கலாமா?
No comments:
Post a Comment