தாமே முன்வந்து விடுதலையை ஊக்குவிக்கும்
தகைமையாளர்களுக்கு நம் நன்றி! நன்றி!! நன்றி!!!
ஆசிரியர் கி.வீரமணி
1.6.2020 அன்று ‘விடுதலை' நாளிதழின் 86 ஆவது அகவையையொட்டி ‘விடுதலை' வாசகர் விளைச்சல் விழாவில், நான் ஆற்றிய உரை - நம் அறிவு ஆசான் ஒளியாகத் திகழ்ந்து, ‘விடுதலை' என்ற அறிவுப் போர் ஆயுதத்தை நம் தலைமுறையிடம் மிகவும் பாதுகாத்துத் தர, பட்ட இன்னல்களும், பொருள் இழப்புகளும் ஏராளம் என்ற வரலாற்றுச் சுவடுகளை உங்கள் மனதில் பதித்தேன்.
அறிஞர் ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு 2.9.1937 இல் ‘விடுதலை' ஏடு பற்றிய ஒரு கடிதத்தில் அதன் பொருள் நட்டம் அக்காலத்தில் - மாதம் ரூ.500 என்று குறிப்பிட்டதோடு, அதற்காக உழைப்பு என்ற பெரியாரின் மூலதனத்தின் முக்கிய பங்குபற்றி குறிப்பிடுகிறார் (ஆ-ர்).
‘‘காலை ஏழரை மணிக்கு ஆபீசுக்கு வந்தால், இரவு 10 மணிக்கு வீட்டுக்குப் போகிறேன். இதன் மத்தியில் சுற்றுப்பயணம், இந்த நிலைமையில் ரோஷம் என்னை அடிமையாக்கிக் கொண்டு, இந்த மாதிரித் தொல்லையில் இறக்கிவிட்டது. காசு, பணம் எதிர்பார்த்து இவற்றை நான் எழுதவில்லை.'' என்று தந்தை பெரியார் குறிப்பிட் டுள்ளார்.
இதன் பிறகும் சலித்து ஒதுங்கி ‘விடுதலை' ஏடு நடத்தும் முயற்சியில் சற்றும் தளரவில்லை நம் அறிவு ஆசான் அய்யா அவர்கள்.
சென்னைக்கு அதனைக் கொணர்ந்து விரிவாக்கி திராவிடர் உரிமைக்காக, லட்சியப் போரில் இந்தப் போர்க் கருவியின் பயன் மிகவும் தேவையானது என்பதை உணர்ந்து, தொடரும் பணியையொட்டி ஓர் அறிக்கையை 1.9.1940 இல் (இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு நினைவில் நிறுத்துங்கள்) விடுக்கிறார்.
அதில், ‘விடுதலை'க்கு ஆதரவை அரசிடமிருந்தோ, பெரும் முதலாளிகள், பணக்காரர்களிடமிருந்தோ எதிர்பார்க்கக் கூடாது; அப்படி உதவி பெற்றால், கொள்கை - லட்சியங்களில் வளைந்து கொடுத்து, ‘சமரசம்' செய்துகொள்ளும் நிலைதான் மிஞ்சுமே தவிர, ‘விடுதலை'யின் நோக்கம் - எதற்காகத் தொடங்கப்பட்டதோ அது நிறைவேறாது என்பதை மிகவும் துல்லியமாக - தனது கொள்கை உணர்ச்சி என்ற எரிமலை எப்படிப்பட்டது என்பதை உலகு அறியக் கூடிய தன்மையில் எழுதுகிறார், படியுங்கள்:
‘‘.....ஆதலால், இந்த நஷ்டத்திற்காக நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்து, ‘‘அடிமை விடுதலை''யாகி, விளம்பரத்திலும், செல்வவான் களிடமும் நன்கொடை பெறுவதா அல்லது ‘‘சுதந்திரமான விடுதலை''யாக இருந்து, எவ்விதக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல், சகல விஷயங்களையும் உரிமையாக வெளியிடும் உரிமையுடன் நடத்துவதா என்பதற்காகத்தான் விடுதலையைச் சுதந்திரமாக நடத்தச் செய்கிறீர்களா அல்லது ‘‘அடிமை விடுதலை''யாக நடத்தச் செய்கின்றீர்களா என்று கேட்கிறது.
இனியும் நம் இயக்கம் வலுக்க வலுக்க நம் ‘விடுதலை'க்கு அதிக சுதந்திரம் வேண்டியிருக்கும். அப்பொழுதுதான் நிலையானதும், நேர்மையானதுமான பிரயோஜனத்தைத் திராவிடர்கள் அடையக் கூடும்.
ஆதலால், திராவிட மக்களே! ‘‘‘விடுதலை'க்கு உதவுங்கள், உதவுங்கள், பண முடிப்பாக உதவுங்கள்'' என்று எழுதியது வெறும் எழுத்துக்களா? அல்லது ஏடு நடத்துவோருக்கும், இயக்கம் நடத்துவோருக்கும், கொள்கை லட்சிய உறுதிக்கானவர்களுக்குமான இலக்கணமா என்றே கேட்கத் தோன்றுகிறது.
இதைப் படித்து கண்ணீர் விட்ட பொள்ளாச்சி நடராஜச் செட்டியார் என்ற வாசகர், பெரியாருக்கு மாதம் ஒரு ரூபாய் தன் பங்குக்கு அனுப்புவதாக எழுதிய கடிதத்திற்குத் தந்தை பெரியார் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுபோல், நாங்கள் வேண்டுகோள் விடாமலேயே தற்கால இணைய வழி, கட்செவி - வாட்ஸ்அப் வழி ‘விடுதலை' பல்லாயிரம், லட்சம் வாசகர்களுக்கு அனுப்புவதை உணர்ந்து தோழர்கள் உரத்தநாடு முருகேசன் தொடங்கி, வழக்கமான பெரியார் மாணாக்கன், பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், அவரது மாமியார் லீலாவதி அம்மையார் போன்றவர்கள் ‘விடுதலை' வளர்ச்சி நிதியைத் தொடக்கி வைத்து, ‘‘துவள வேண்டாம்; தொய்வு கூடாது'' என்று எங்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளனர்.
நன்கொடைகளை கழகத்தவர்களும், ஆதரவாளர்களும் அன்பொழுக நாங்கள் கேட்காமலேயே தந்து, எங்களது லட்சிய உழைப்பை மேலும் தீவிரமாக்க அச்சாரம் தந்துள்ளார்கள். ‘விடுதலை'யின் வெற்றியில்தான் மனித குலத்தின் மீட்சியும், திராவிட இனத்தின் உண்மையான ஆட்சியும் உள்ளது.
இதை சரிவர உணர்ந்த காரணத்தாலேயே எங்கள் கடமையை நாளும் நடத்த உறுதிபூண்டுள்ளோம் என்பதை வாசகர்களுக்கு அறிவிக்கிறோம் - விழிகளில் வழியும் மகிழ்ச்சிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே,
‘‘கடன்பட்டோம்; கடமையாற்றத் தவறோம்'' என்ற உறுதியுடன், ‘விடுதலை'யின் பணி முழு வீச்சில் தொடரும் என்று உறுதி கூறி, இந்த வளர்ச்சி நிதியை வெளியிட்டு, மக்களால் நடக்கும் மக்களுக்கான மக்கள் நாளேடு ‘விடுதலை' என்ற பெரியாரின் போர் ஆயுதம் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
No comments:
Post a Comment