அருமைத் தமிழ் நெஞ்சங்களே, மனிதநேயர்களே,
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக இரண்டு வணிகர்கள் - ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் ஆகியவர்களை காவல்துறை அதிகாரிகள் - கடையைத் திறந்து வைத்தார்கள் ஊரடங்கில் என்ற ‘‘மாபெரும் தேசிய குற்றத்திற்காக'' கைது செய்ததோடு, மிருகப் பலத்தைப் பயன்படுத்திய காரணத்தினாலே, விசாரணைக் கைதிகளான - வாட்ட சாட்டமான வாலிபரும், மற்றும் நடுத்தரவயது தாண்டும் நிலையில் உள்ள அவர் தந்தையும் கோவில்பட்டி சிறைச்சாலையில் உயிர்பறிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது நாட்டை உலுக்குகிறது; மனித உரிமைக்காகப் போராடுபவர்கள் மட்டுமல்ல - திரைப்படத் துறையினர் பலரும், மனிதநேய உணர்வு பொங்க, காவல்துறையின் அத்துமீறிய அடக்குமுறை அருவருப்புகளைக் கண்டனம் செய்து அறிக்கைகள் விட்டு வருகின்றனர்! சில 'வீரர்கள்' மவுனம்!
தமிழ்நாட்டில் சில ‘‘பிரபல'' கட்சித் தலைவர்கள் ஏனோ இப்போது தங்களை இதிலிருந்து ‘‘தனிமைப் படுத்திக் கொண்டனர்!''
தவறான தகவலைக்கூட ‘‘அழுத்தந்திருத்தமாகக்'' கூறி, ‘அவாளின் சபாஷ்' பெறும் பிரபல சினிமா நடிகரும்கூட இதுவரை எந்த ‘ரியாக்ஷனும்' தனது கருத்துக் களத்தில் கூறவில்லை! சில தலைவர்களுக்குத் தெரியாமலே அவர்கள் பெயரில் அன்றாட அறிக்கை, தவறாமல் ஊடக உதவியால் இடம்பெறுவது தப்பாத நிலை உள்ளதே - அவர்களும்கூட இப்பிரச்சினையிலோ, உடுமலை சங்கர் கொலை வழக்கு விசாரணையில் வந்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுபற்றியோ மூச்சுகூட விடவில்லையே!
ஏன்? ஏன்? ஏன்?
கரோனா பயத்தை மீறிய ஜாதி ஓட்டுகள் பயமா?
அரசின் நேசம் குறைந்துவிடும் என்பதாலா?
அறியோம்!
No comments:
Post a Comment