ஏனைய உரைப் பொழிவாளர்களைக் காட்டிலும் நீண்ட நேரம் மக்களிடையே பேசும் ஆற்றல் படைத்த பெரியார், ஒருமுறை நாலரை மணி நேரம் பேச நேரிட்டது. 8.9.1956 அன்று மயிலாடுதுறையில் நடந்த கழகக் கூட்டத்தில், இரவு 7 மணிக்குப் பேசத் தொடங்கி, இரவு 11.30 மணிக்குத்தான் தம் உரையை நிறைவு செய்தார். (விடுதலைப் பொன்விழா மலர்)
ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற இயக்க பொதுக் கூட்டத்தின் போது, குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர், ஒலி பெருக்கியைப் பயன்படுத்த காவல்துறை தடை போட்டபோது பெரியார், தம் உரையை நிறுத்த மறுத்து, தொண்டையும், வயிறும் வலிக்க வலிக்க, இரண்டு மணிநேரம் இராமாயணக் கண்டன உரை நிகழ்த்தினார். (விடுதலை 1954)
சென்னைக் கடற்கரையில் இந்தி எதிர்ப்புப் படைகளை வரவேற்பதற்காக நடந்த கூட்டம், இரவு ஒருமணிக்கு அப்பாலும் நீடித்து, நாட்டிலேயே முதன் முறையாக நிகழ்ந்த நெடுநேர பொதுக்கூட்டம் என்னும் வரலாற்றுச் சிறப்பினை பதிவு செய்துகொண்டது. (விடுதலை 12.9.1938)
No comments:
Post a Comment