'விடுதலை'யின் வீர வரலாறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 4, 2020

'விடுதலை'யின் வீர வரலாறு

பேராசிரியர் நம்.சீனிவாசன்


31.5.2020 அன்றைய தொடர்ச்சி...


'விடுதலை'யின் விலை :


முதன் முதலில் விடுதலை வந்தபோது அதன் விலை அரை அணா,பின்னர் 1937இல் காலணா, 45இல் முக்கால் அணா, 1950இல் ஓர் அணா...இந்த அணாக் கணக்கு எல்லாம் நமக்குத் தெரியாது, வயதானவர் களுக்குத்தான் தெரியும்.1960இல் 7 காசு, 1966இல் 8 காசு, 1967இல் 10 காசு, 1971இல் 12 காசு,1974இல் 16 காசு, 18 காசு, 1975இல் 25 காசு, 1980இல் 35 காசு, 1981இல் 40 காசு, 1984இல் 50 காசு, 1985இல் 60 காசு, 1987இல் 75 காசு, 1989இல் விடுதலை பத்திரிக்கையின் விலை 1 ரூபாய். 1990இல் 1 ரூபாய் 20 காசு, 1991இல் 1 ரூபாய் 30 காசு,1995இல் 1 ரூபாய் 90 காசு,1996இல் இரண்டு ரூபாய், 1998இல் 2 ரூபாய் 25 காசு, 2003இல் 3 ரூபாய், 2011இல் 4 ரூபாய், 2014இல் 5 ரூபாய்... 2014இல் இருந்து இன்றுவரை விடுதலையின் விலை ரூபாய் 5 ஆகத்தொடர்கிறது.


விடுதலை சந்தித்த வழக்குகள்:



நண்பர்களே, நமது விடுதலை ஏராளமான  வழக்குகளைச்சந்தித்திருக்கிறது.விடுதலையில் கட்டுரை வெளியிட்டதற்காக பிரிவு 124-கி படி  வெளி யீட்டாளர் ஈ.வெ. கிருஷ்ணசாமி மீதும் விடுதலை ஆசிரியர் பண்டிதர் முத்துசாமிபிள்ளை மீதும் இராஜ கோபாலாச்சாரியார் அரசு வழக்குத் தொடர்ந்தது.இருவருக்கும் 6 மாதம் சிறைத்தண்டனை அளிக்கப் பட்டது.அதுபோல ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை விடுதலையில் வந்தது..அதற்காக விடுதலையின் மேல்  வழக்கு பாய்ந்தது.. வெளியீட்டாளர் ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்க ளுக்கு ரூ 2000 அபராதம் விதிக்கப்பட்டது. 2000 ரூபாய் கட்டவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார்   விடுதலையில் அறிக்கை விட்டார்.பொதுமக்கள் ரூ 15,200 அளித்தனர்.


'இளந்தமிழா,போருக்கு எழு' என்று ஒருவர் எழுதிய கட்டுரையை  வெளியிட்டதற்காக அன்னை மணியம்மையார் பாபநாசத்தில் சிறைவைக்கப்பட்டார்.அதற்குப்பிறகு வேலூர் சிறையில் இருந்தார்கள்.மிசா காலத்தில் விடுதலை சந்தித்த சோதனைகள் ஏராளம்.மிசாவின் காரணமாக 1.2.1975 முதல் பத்திரிக்கை தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.ஒவ்வொரு நாளும் விடுதலை வெளிவருவதற்கு முன் அதிகாரி களிடம் காண்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.தந்தை பெரியார் என்று போடக்கூடாது ஈ.வெ.இராமசாமி என்று போடவேண்டும் என்றார்கள். சங்கராச்சாரி என்று எழுதக்கூடாது, சங்கராச்சாரியார் என்று எழுத வேண்டும் என்றார்கள்.கடவுள் கடத்தப்பட்டது என்று செய்தி போட்டால் , அப்படிப் போடக்கூடாது,சிலை கடத்தப்பட்டது என்று போடு என்றார்கள். சிலையை வணங்கினார்கள் என்று செய்தி போட்டால், சிலையை என்று போடக்கூடாது, கடவுளை வணங்கினார்கள் என்று போடுங்கள் என்றார்கள். மிசா காலத்தில் இந்தியா முழுவதும் தலைவர்கள் கைது செய்யப்பட் டார்கள். வயதான தலைவர்கள், மொராஜி தேசாய் 79 வயதில், சரண்சிங் 73 வயதில், ஜெகஜீவன்ராம் 67 வயதில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் 73 வயதில் எனக் கைது செய்யப்பட்டனர். தமிழர் தலைவர்


கி.வீரமணி 43 வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


விடுதலையும் ஆசிரியர் வீரமணியும்:


தந்தை பெரியார் அவர்கள் யாருக்கும் இப்படி எழுதியது கிடையாது. 1962-ஆம் ஆண்டு ஆகஸ்டு 10ஆம் தேதி "வரவேற்கிறேன்' என்று தலைப்புப் போட்டு விடுதலையில் எழுதுகிறார். நண்பர்களே, ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். விடுதலையில் ஆசிரியர் வீரமணி அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கின்றபொழுது அவருக்கு வயது 29. "விடுதலையைப் பார்த்துக்கொள்வதற்கு, பத்திரிக்கைத் தொண்டை முழு நேரமாகப் பார்த்துக் கொள்வதற்கு  வீரமணி வருவதை மனதார வரவேற்கி றேன், நமக்கு ஒரு பெரிய நல்வாய்ப்பு,கிடைக்க முடி யாத ஒரு நல் வாய்ப்பு" என்று பெரியார் எழுதுகின்றார். "நான் அதிசயத்தோடு பாராட்டி வரவேற்கிறேன்." என்று தந்தை பெரியார் எழுதியிருக்கின்றார் என்று சொன்னால் அது மிகப்பெரிய அங்கீகாரம்.தந்தை பெரியார் அவர்கள் நமது ஆசிரியர் வீரமணி அவர் களை விடுதலைப் பத்திரிக்கையின் ஆசிரியர் இருக் கையில் அவரே கையைப் பிடித்துக் கொண்டு போய் உட்காரவைக்கின்றார். அதுமட்டுமல்ல 6.6.1964இல் தந்தை பெரியார் எழுதினார் அல்லாவா "வீரமணியிடம்   ஏக போக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப் படைத்துவிட்டேன்" என்று. அப்போது அய்யா வீரமணி அவர்களுக்கு 31 வயது. இன்றைக்கு விடுதலை 86-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடப் போகின்றது. நாம் கொண்டாடுகின்றோம். விடுதலையின் வீர வரலாறு என்று பார்க்கும்போது, விடுதலையின் ஆசிரியராக கடந்த 59 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அய்யா வீரமணி அவர்கள் இருக்கின்றார். என்பது ஒரு உலக மகா சாதனை.உலகத்தில் நாத்திக நாளிதழ், கடவுள் மறுப்பு நாளிதழ் என்று பார்த்தால் அது விடுதலை ஒன்று மட்டும்தான். இன்னும் ஒரு சிறப்பு சொல்ல வேண்டுமென்றால் "நேற்று ஒருவன் புரட்சியாளனாக இருந்தான் என்பதற்காக, இன்றும் அவன் ஒரு புரட்சியாளனாக இருப்பான் என்று சொல்லமுடியாது ,இன்றைக்கு அவன் எப்படி இருக்கிறான் என்று பார்க்கவேண்டும்" என்று மாசேதுங் சொல்லுவார்.


கரும்புள்ளியே இல்லை..


தந்தை பெரியார் அவர்கள் 1962இல் சொன்னார் என்பது மட்டுமல்ல,தந்தை பெரியார் கடைசியாக கலந்து கொண்ட மாநாடு 1973இல் சென்னையில் நடைபெற்ற இன ஒழிப்பு மாநாடு.அந்த மாநாட்டில் அய்யா ஆசிரியர் அவர்கள் பேசியபின்பு தந்தை பெரியார் பேசுகின்றபோது , பெரியார் சொல்கின்றார் " வீரமணி பேசிய பின்பு நான் பேசவேண்டுமா என்று யோசிக்கிறேன்.வீரமணி பேசி, நல்ல உணர்ச்சியை இந்தக்கூட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்.நான் பேசி அந்த உணர்ச்சியைக் கெடுத்துவிடக்கூடாது " என்று பெரியார் பேசுகின்றார் என்று சொன்னால் தந்தை பெரியாருக்கு வயது 95, அய்யா ஆசிரியருக்கு வயது 40. இதற்கு மேல் ஒரு அங்கீகாரம் என்று வேறு எதுவுமே கிடையாது. அப்படிப்பட்டவர்தான் இந்த விடுதலைப் பத்திரிக்கைக்கு 59 ஆண்டுகளாக ஆசிரியர். ஆசிரியரிடம் கேள்வி கேட்கிறோம்." அய்யா,உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் எது என்று கேட்கும்போது அவர் சொல்லு கின்றார். "விடுதலையில் தலையங்கம் எழுதியவுடன் ,தந்தை பெரியார் அவர்கள் இந்தத் தலையங்கம் என்னால் எழுதப்பட்டதல்ல, இந்தத் தலையங்கக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை,இந்தக்கருத்தை மறுக்கிறேன் என்று பெரியார் இதற்கு முன்னால் எழுதியிருக்கிறார். நான் விடுதலையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றபின் 1961 தொடங்கி 1973-வரை 12 ஆண்டுகள் ஒருபோதும் தந்தை பெரியார் அப்படிச் சொன்னதில்லை. எனக்கு கரும்புள்ளியே கிடைத்த தில்லை. இதனை எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்." என்று தமிழர் தலைவர் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.


அன்பொழுக ஆசிரியர் என்று அழைக்கும் தோழர்கள்


மற்ற எல்லோரும் தமிழர் தலைவர் என்று சொல் கின்றபோது, திராவிடர் கழகத்தோழர்கள், தமிழர் தலைவர் அவர்களை ஆசிரியர் என்றுதான் குறிப்பிடு கின்றார்கள். நமது பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் நேரு அவர்கள் சொன்னாரல்லவா ,அவர் ஆசிரியர் என்றுதான் எல்லோருக்கும் அறிமுகமாயிருக்கிறார்.அய்யா அவர்கள் ஒரு நாளைக்கு அதிகமாகச் செலவிடுவது விடுதலைக்காகத்தான்.நான் ஒரு கேள்வி கேட்டேன். "அய்யா நீங்கள் கஷ்டமாகக் கருதுவது கட்சி நடத்துவதா? பத்திரிக்கை நடத்துவதா? பல்கலைக்கழகம் நடத்துவதா?"என்று கேட்டேன். அவர் "கட்சி நடத்துவதுதான்" என்று பதில் சொன்னார். ஆனால் அவர் ஒரு நாளைக்கு அதிகமாக செலவிடும் நேரம் என்பது விடுதலைப் பத்திரிக்கைக்குத்தான். பத்திரிக்கைக்கு அறிக்கை எழுதுகிறார். வாழ்வியல் சிந்தனைகள் எழுதுகிறார். கேள்வி பதில் எழுதுகிறார். நண்பர்களுக்குத் தெரியும். காலையில் அவர் 10.30 மணிக்கு அலுவலகம் வந்தால் 1.30 மணிக்கு கிளம்புவார். அதில் 12.15 முதல் 1.15 வரை அச்சாகப்போகும் விடுதலையை, 8 பக்கங்களையும் வரிசையாகப் பார்த்துவிடுவார். எல்லாப்பக்கங்களை யும் பார்த்து பச்சை மையில் சின்னதாக ஒரு டிக் செய்து கையொப்பம் இட்டு அனுப்பிவிடுவார்.அதற் குப்பிறகுதான் விடுதலை பத்திரிக்கை அச்சாகிறது.மற்ற பத்திரிக்கைகள் போல ஆசிரியருக்கும் பத்திரிக் கைக்கும் சம்பந்தம் இல்லை என்று எல்லாம் கிடை யாது. ஒவ்வொரு நாள் விடுதலை பத்திரிக்கையையும், ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு எழுத்தையும் அதன் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் பார்த்த பின்புதான் விடுதலை வெளிவருகின்றது.


ஆசிரியரின் முதல் பார்வை :


விடுதலை வெளிவந்தவுடன் நான் என்ன பார்ப் பேன் என்று சொன்னால், ஆசிரியர் எங்கு இருக்கிறார் என்று ஆசிரியரின் சுற்றுப்பயணத்தைப் பார்ப்பேன்.கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியரின் சுற்றுப்பயணம் வருவது கிடையாது. அதற்கு முன்னால் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை எந்தெந்த ஊரில் இருக்கிறார் என்று சுற்றுப்பயணம் வரும். இப்போது விடுதலையை வாங்கியவுடன் முதலில் பார்ப்பது ஆசிரியரின் அறிக்கை, அடுத்தபடியாக அவரின் வாழ்வியல் சிந்தனைகள், அவருடைய பேச்சு, அதற்குப் பிறகு ஒற்றைப்பத்தி மற்ற செய்திகள் எல்லாம். நாம் எல்லாம் இப்படிப்பார்க்கின்றோம். விடுதலையில் ஒவ்வொரு வரும் பத்திரிக்கையில் முதல்முதலாக ஒன்றைப் பார்க்கின்றோம். ஆசிரியரிடம் கேட்கின்றோம்.அய்யா, விடுதலையில் நீங்கள் முதலில் எதனைப் பார்ப்பீர்கள்? ஆசிரியர் சொன்ன பதில் "நான் விடுதலைப் பத்திரிக்கையில் முதலில் பார்ப்பது நடக்க இருப்பவை. தமிழ் நாட்டில் எந்தெந்த ஊர்களில் திராவிடர் கழக்த்தின் சார்பாக கூட்டம் நடைபெறு கின்றது? யார் ஏற்பாடு செய்கின்றார்கள்? யார் யார் உரையாற்றுகின்றார்கள் என்று காட்டுகின்ற நடக்க இருப்பவை என்னும் பகுதியைத்தான் நான் முதலில் பார்ப்பேன்" என்று ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார் கள்.


ஆசிரியரும் கண்டிப்பும்:


ஆசிரியர் அவர்கள் பத்திரிக்கை நடத்தும்போது கண்டிப்பாக இருப்பாரா? என்னும் ஒரு சிறிய அய்யம் உங்களுக்கு இருக்கலாம்.அவருடைய கண்டிப்பிற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்கின்றேன்.முதலமைச் சர் கலைஞர் அவர்களின் பேச்சு விடுதலையில் வெளி வருகின்றது. முதல் பக்கம் வந்துவிட்டது. 3ஆம் பக்கம் வந்துவிட்டது. அதற்குப்பிறகு தொடர்ச்சி 4ஆம் பக்கம் பார்க்கவும் என்று போடப்பட்டிருக்கிறது. 4ஆம் பக்கத்தில் அவருடைய பேச்சைப் போட வில்லை. முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இத னைப் பார்த்துவிட்டு ஆசிரியருக்கு தொலைபேசியில் சொல்கின்றார். உடனே ஆசிரியர் அவர்கள் விடுதலை அலுவலகத்திற்கு வருகின்றார். விடுதலையில் பணி யாற்றும் சக தோழர்களாக இருந்தாலும் கண்டிக்கின் றார், அதற்கு சிறு தண்டனையும் கொடுக்கின்றார். ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகின்றது. இதன் மூலம் விடுதலை பத்திரிக்கை செம்மையாகவும், சிறப் பாகவும் வர வேண்டும், தப்பு நடக்கக்கூடாது என்ற ஆசிரியரின் அக்கறையும் நமக்குத் தெரிகிறது.


விடுதலை- ஆசிரியரின் உயிருக்கு நேர்:


அவருக்கு மிக முக்கியம் விடுதலை பத்திரிக்கை நிறைய விற்கவேண்டும். அவர் சொல்கின்றார்" எனக்கு சால்வை வேண்டாம்,சந்தா கொடுங்கள்" என்று கூறுகின்றார். ஒரு சமயம் "நட்டம் என்றால் விடுதலையை நிறுத்தி விடலாம்" என்று சொன்ன போது, விடுதலையை நிறுத்தி விடுங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக மூச்சை நிறுத்திவிடுங்கள் என்று சொல்லியிருக்கலாம் என்று சொன்னார்.அந்த அளவிற்கு விடுதலையை உயிருக்கு உயிராய் நேசிப்பவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். ஆசிரியர் அவர்கள் விடுதலைக்குள் வந்ததில் இருந்தே 1962 - முதல் தந்தை பெரியார் பிறந்த நாளுக்கு விடுதலை பெரியார் பிறந்த நாள் மலர் போட்டது.விடுதலை மலரில் வந்திருக்கக்கூடிய தந்தை பெரியார் எழுதிய கட்டுரைகள், தமிழர் தலைவர் எழுதியிருக்கக்கூடிய கட்டுரைகள் மிகப்பெரிய அளவிற்கு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவேண்டிய கட்டுரைகள்,அருமையான கட்டுரைகள். அந்த மலரில்தான் அறிஞர் அண்ணா அவர்கள் 'அந்த வசந்தம்' என்னும் கட்டுரையை எழுதினார். இந்த அச்சு இயந்திரம் பற்றிச் சொல்கின்ற போது 1969இல் ஒரு அச்சு இயந்திரம் ஜெர்மனியில் இருந்து வந்தது. அச்சு இயந்திரத்தைத் தொடங்கி வைப்பதற்காக முதல் அமைச்சர் கலைஞர் வருகின்றார். அவர் வருகின்ற பொது எல்லோருக்கும் சுவீட்,காரம் எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது.எல்லோரும் சாப்பிடுகின்றார்கள். அப்போது மேடை யில் பேசும்போது தந்தை பெரியார் கூறுகின்றார் ,எனது வாழ்க்கையில் நான் டீ பார்ட்டி எல்லாம் கொடுத்ததே இல்லை.இப்போது சுவிட்,காரம் எல்லாம் வைத்துக்கொடுத்தார்கள் என்று பேசுகின்றார்.எல் லோரும் புறப்பட்டுப்போன பின்பு எல்லோரும் சிரித் துக்கொண்டு பேசிக்கொள்கிறார்கள். தந்தை பெரியார் என்ன என்று கேட்கின்றார்.அப்போது மணியம்மை யார் சொல்கின்றார் "அய்யா, நீங்கள் பேசும்பொது  டீ பார்ட்டி பற்றி பேசினீர்கள். வீரமணி எல்லோருக்கும் டீ பார்ட்டி கொடுக்கவில்லை. நேற்று உங்கள் தலைமையில் நமது திடலில் ஒரு பிறந்த நாள் விழா நடந்தது. அதற்காக கொண்டு வந்த சுவீட், காரம் மிச்ச மாகி விட்டது. அதனை இன்று வந்து கொடுத்திருக் கின்றார்கள்" என்று சொன்னபோது பெரியார் சொல்லு கின்றார் "நமது பிள்ளைகள் நம்மிடம் ஒழுங்காகத்தான் தயாராகி இருக்கிறார்கள்"என்று. இவ்வாறு தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பெற்றவர் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள்.


விடுதலையின் சாதனைகள்:


விடுதலை என்ன சாதனை புரிந்திருக்கிறது என்று கேட்கலாம். 1952-ஆம் ஆண்டு வகுப்புரிமைப் போராட்டம் வெற்றி பெறுவதற்கும் , இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் வருவதற்கும் விடுதலை பாடுபட்டிருக்கிறது. 1952,53,54,55 களில் ஆகஸ்டு 1ஆம் தேதி இந்தி எதிர்ப்புப்போராட்டம் தீவிரமாக நடைபெற்றதற்கும் பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு உறுதி மொழி கொடுப்பதற்கும் விடுதலை காரணமாக இருந்திருக்கிறது. ஹோட்டல்களில் பிராமணாள் என்னும் பெயர் எடுக்கப்படுவதற்கும் விடுதலை காரணமாக இருந்திருக்கிறது. தமிழ் நாட்டில் ஜாதி உணர்வை அழித்த பெருமை விடுதலைக்கு உண்டு. தீண்டாமைக் கொடுமையை ஒழித்த பெருமை விடுதலைக்கு உண்டு. மூட நம்பிக்கையை வேரோடு வெட்டி வீழ்த்திய பெருமை விடுதலைக்கு உண்டு.நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி கிடைத்தற்கும் பெருமை விடுதலைக்கு உண்டு. நரிமணம் பெட்ரோ லுக்கு ராயல்டி கிடைத்தது விடுதலையால். தமிழர்க ளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது விடுதலையால்.தமிழர்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கும் காரண மாக இருந்ததும் விடுதலை பத்திரிக்கை.பார்ப்பனர் ஆதிக்கம் அகல்வதற்கு விடுதலை காரணமாக இருந் தது. மத உணர்வு மாய்ந்திட, பெண்ணுரிமை பெற்றிட, அறிவியல் மனப்பான்மை பெற்றிட விடுதலை காரணமாக இருந்தது. 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை விலக்கி கொள்ளப்படுவதற்கு விடுதலை அடித்தளம். மண்டல் கமிசன் அறிக்கை அமுல்படுத் திட அடிப்படை விடுதலை பத்திரிக்கை. 69 சதவீத இட ஒதுக்கீடு நிலை பெற்றிட விடுதலை பாடுபட்டிருக் கிறது. 31-சி சட்டம் 9ஆவது அட்டவணையில் சேர்க் கப்பட விடுதலை முக்கியமான பங்கினை ஆற்றியிருக் கிறது. தமிழ் நாடு வஞ்சிக்கப்படாமல் உரிமை பெற்றிட, மத சார்பின்மை வேர் ஊன்றிட, எல்லாவற்றிற்கும் அடிப்படையாக விடுதலை இருந்திருக்கிறது. நம் முடைய இந்திய அரசியல் சட்டத்தில் முகப்பில் சொல்லப்பட்டுள்ள இறையாண்மை, மதச்சார்பின்மை, சமதர்மம், ஜனநாயகம்,குடியரசு என்று இந்த அய்ந்தை யும் கடைப்பிடிக்கிற இதழாக விடுதலை திகழ்கிறது.விடுதலைக்கு 86ஆவது பிறந்த நாள் ஜூன்-1ஆம் தேதி. தமிழர்களின் வீடு என்பதற்கான அடையாளம் விடுதலை என்று  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சொன்னதை நினைவுபடுத்தி வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்" என்று பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற் றினார்கள்.


No comments:

Post a Comment