சிலியா சான்செஸ் மாண்டுலே, கியூபப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையான பெண். பிடல் காஸ்ட்ரோ அவர்களின் "ஜூலை 26" இயக்கத்தின் இரகசிய உறுப்பினர். சியர்ரா மேஸ்ட்ரா மலைத்தொடரில் இயங்கிய கொரில்லாப் படையின் முதல் வீரர் என அறியப்படுபவர்.
1920 ஆம் ஆண்டு, கியூபாவின் மெடியா லூனா நகரில், மருத்துவர் இம்மானுவேல் சான்செஸ் சில்வெய்ரா மற்றும் அகெசியா தம்பதியினருக்கு எட்டு குழந்தைகளுள் ஒருவராக பிறந்தவர். இளமையிலேயே தன் தாயின் அரவணைப்பை இழந்து, ஆறு வயதிலேயே 'நியூரோஸிஸ்' என்ற நோய்க்கு ஆட்பட்டாலும், தன் படிப்பின் பற்றறுகாமல் உயர்கல்வி வரை பயின்றார். பல்கலைக்கழகக் கல்வி பயிலும் வாய்ப்பின்றிப் போனாலும், மருத்துவரான தன் தந்தைக்கு உறுதுணையாக விளங்கினார். தந்தையின் மூலமாக அன்றைய அரசியல் சூழலையும், சமூகத்தில் வறுமையால் மக்களுறும் துயரங்களையும் கூர்ந்து கவனிக்கலானார். எவனொருவன் சமூக நிலை குறித்து எண்ணி, அதன் துயரங்களை, இழிவுகளை துடைத்தெறிவதற்கான எண்ணத்தீயை மனதில் மூட்டுகிறானோ, அவன் தான் புரட்சிக்கான வித்து என்பதற்கேற்ப சிலியா மனதில் எண்ணம் வளர்ந்து கொண்டிருந்தது.
1952 ஆம் ஆண்டு, ஜனநாயக முறைப்படி நடைபெற இருந்த தேர்தலுக்கு முன்னதாக கார்லோஸ் பிரியோ தலைமையிலான கியூப அரசை இராணுவத் தளபதி பல்கென்சியொ பாடிஸ்டா, கலைத்துத் தன் வசமாக்கி, தேர்தலை இரத்து செய்ததே கியூபப் புரட்சிக்கு வித்திட்டது. அமெரிக்க அரசின் நெருங்கிய தொடர்புடன் இருந்த பாடிஸ்டா, அன்று முளைவிட்டெழுந்த கம்யூனிச கொள்கைக்கு எதிராக, பிடல் முன்வைத்த சித்தாந்தங்களுக்கு எதிராக இராணுவத்தின் உதவிகொண்டு ஆட்சி அரியணையைக் கைப்பற்றினார். மக்களை ஒடுக்க உருவாக்கப்பட்ட சர்வாதிகார அரசுக்கு எதிராக பிடல் காஸ்ட்ரோ, அவர் சகோதரர் ரால் காஸ்ட்ரோ ஆகியோர் புரட்சிப் படை ஒன்றை உருவாக்கி, 1953 ஆம் ஆண்டு, ஜூலை 26 ஆம் தேதி, சாண்டியாகோவில் உள்ள மோன்காடா இராணுவக் குடியிருப்பில் சுமார் 160 புரட்சியாளர்களை உள்ளடக்கிய தங்கள் முதல் தாக்குதலை நடத்தினர். அதன் காரணமாகவே அதற்கு "ஜூலை 26 இயக்கம்" என்ற பெயர் வழங்கப் பெறுகிறது. அந்த தாக்குதலுக்காக 15 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பின்னர், 1955 ஆம் ஆண்டு பொது மன்னிப்பில் (அன்று நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய "வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்ற உரை தான் 'The History will absolve me’ என்ற வரலாற்றுப் புகழ் பெற்ற புத்தகமாக வெளிவந்தது) விடுதலை அடைந்து மெக்ஸிகோ தப்பினர். அங்கு அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மார்க்சியத் தோழர், மருத்துவர் எர்னஸ்டோ சே குவேராவின் நட்பைப் பெற்றனர். அத்தகைய கியூபப் புரட்சி வரலாற்றின் மிக முக்கிய இயக்கத்தில், மருத்துவ உதவியாளர் என்ற முறையில் தன்னை இணைத்துக்கொண்டு, கியூபப் புரட்சிக்கு அடித்தளமிட்டவர்களுள் மிக முக்கியமானவராக விளங்கிய சிலியா, "ஜூலை 26" இயக்கத்தை மான்சானில்லோ நகரில் நிறுவினார்.
மெக்சிகோவில் பாடிஸ்டா அரசை வீழ்த்துவதற்கான அடித்தளத்தை அமைத்த பின்னர், பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா உள்ளிட்ட 82 புரட்சியாளர்கள் கியூபாவை அடைய 1956, நவம்பர் மாதம் "கிரான்மா" (Granma) என்ற நீர் கசியும் சொகுசுப் படகுப் (Yacht) பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிலியா செய்தார். டிசம்பர் 2 அன்று "கிரான்மா" படகு மூலம் கியூபாவின் ஓரியண்ட் மாகாணத்தை அடைந்த பின்னர், பாடிஸ்டா அரசுப் படையினருடனான தாக்குதலில் பெருத்த சேதமடைந்த புரட்சிப் படையினருக்கும், கழுத்தில் காயமுற்றிருந்த சே குவேரா (அந்த தாக்குதலில் தான் பிடல் காஸ்ட்ரோ இறந்துவிட்டதாக பாடிஸ்டா அரசு தவறாக அறிவித்தது.) ஆகியோருக்கும் தேவையான தளவாடங்கள், பணம், உணவு மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் பெரும் பணியைச் செய்தார். சியர்ரா மேஸ்ட்ரா, கிழக்கு கியூபாவில் இயங்கிய புரட்சிப் படையினர், சிலியாவை The Godmother என்றே அழைத்தனர்.
1957 ஆம் ஆண்டு, பாடிஸ்டா அரசால் தேடப்படும் மிக முக்கியப் புரட்சிப் படையினராக அறிவிக்கப்பட்டதும், சியர்ரா மேஸ்ட்ரா மலைத்தொடரில் பதுங்கி, அரசுப் படைகளுக்கு எதிரான புரட்சிப் படையில், முதல் பெண் கொரில்லா வீரராக மாறினார். அவ்வகையில் 1957 ஆம் ஆண்டு, மே மாதத்தில், எல் உவேரோ களத்தில் தான் தன் முதல் போரில் ஈடுபட்டதாக, சிலியாவை தனது 15 ஆவது வயதில் சந்தித்த முன்னாள் கொரில்லா படைப்பிரிவின் பிரிகேடியர் ஜெனரல் டீட் பியூப்லா, நினைவுகூர்ந்த செய்தியை 2011 ஆம் ஆண்டு, பிபிசி ரேடியோ பதிவு செய்திருக்கிறது.
1957 ஆம் ஆண்டு அரசுப் படைகளுக்கு எதிரான போர் தான், சியர்ரா மேஸ்ட்ரோ புரட்சிப்படையினருக்கு பெரும் சவாலாக அமைந்தது. அந்தத் தாக்குதலில் புரட்சிப் படையினருக்கு சேதம் ஏற்பட்டதோடு, அப்பகுதி விவசாயிகள் பலர் இறந்தனர். சில நேரங்களில் அரசுப்படையினர், கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்குத் தீ வைத்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்நேரங்களில் சிலியா, வாழ்விடம் இன்றி தவிக்கும் அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடிய செயலிலும் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறியும்போதும், போர்க்களத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களுக்கிடையிலும், அப்பாவி மக்களின் துயர் கண்டு தாளாது உதவிய தலைமைப் பண்பைக் காணும்போதும், நாட்டு நலனுக்காக போராடும் அதே தருணத்தில் தன் உயிரினையும் பொருட்படுத்தாமல் மாந்தநேயத்தின் உயிரை மீட்டெடுக்கப் போராடியதை எண்ணும்போதும் மெய் சிலிர்க்காமல் போகாது!
1959 ஆம் ஆண்டு, ஜனவரி 2 அன்று, ஹவானாவில் நுழைந்த 9000 கொரில்லா வீரர்களைக் கொண்ட பிடல் - சே புரட்சிப் படையினரை எதிர்கொள்ளத் திராணியற்று, பாடிஸ்டா படை பின்வாங்க, அதிபர் பாடிஸ்டா, தன் பதவியைத் துறந்து ஓடியே விட்டார். புரட்சிக்குப் பின்னான பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஆட்சியில், அவரின் நம்பத்தகுந்த நண்பர்களுள் ஒருவராக இறுதிவரை விளங்கிய சிலியா, ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்கள் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். தன் மறைவு வரை சேவைத் துறையிலும் பணியாற்றினார்.
புரட்சிக்குப் பின்னான காலக்கட்டத்தில், பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிரான ஊடுருவலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு உதவும் முயற்சிகளில் ஈடுபட்டார். சிலியா தனக்கு மிக விருப்பமான பாலே (Ballet) "Coppelia" என்ற பெயரில் பனிக்கூழ் விற்பனையகம் ஒன்றை நிறுவினார். அதன் மூலமாக இளைஞர்கள், முதியவர்கள், முன்னாள் புரட்சியாளர்கள், வெள்ளையர்கள், கருப்பினத்தவர், முலட்டோ (Mulatto) என்றழைக்கப்படும் வெள்ளையர் - கருப்பின தம்பதிகளின் பிள்ளைகள் ஒன்றுகூட, அவர்களுக்கிடையிலான உறவு மேம்படும் வாய்ப்பாக அமைய நிறுவியது, சிலியாவின் தேர்ந்த மதியூகத்தையும், தொலைநோக்குச் சிந்தனையையும் தெளிவாக விளக்குகிறது. அத்துடன் கியூபத் தலைநகர் ஹவானாவில் "லெனின் பார்க்" என்ற ஒன்றை நிறுவி அதில் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஏரிகள், விளையாட்டரங்கங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியது அவர் சிறந்த திட்ட வல்லுநர் என்பதைக் காட்டுகிறது. எனினும், புரட்சிக்குப் பிறகான பிடல் காஸ்ட்ரோ ஆட்சியில், சிலியாவின் திட்டங்கள் வழியாக ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்பது குறித்தான தெளிவான செய்திகள் இல்லாதிருப்பது ஏமாற்றமளிக்ககூடியதாக அமைந்தாலும், சிலியாவின் புகழை இன்றளவும் கியூபா நினைவுகூர்கிறது.
சிலியா, தன் வாழ்நாள் நிகழ்வுகளைக் குறித்த 'டைரி' குறிப்புகள் எதனையும் எழுதியதாக அறிய முடியவில்லை. எனினும், இன்று கியூப புரட்சி குறித்த வரலாற்றை ஆவணப்படுத்தியதில் பெரும் பங்கு அவரையே சாரும். சியர்ரா மேஸ்ட்ரா மலைத்தொடரில் கொரில்லாப் படைப்பிரிவில் இருந்த காலம் முதற்கொண்டே அனைத்து செய்திகளையும் ஆவணப்படுத்தும் பணியில் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். புரட்சிப் படை எதிர்கொண்ட தாக்குதல்கள், போர்க்களங்கள், புரட்சிப் படையினருடனான தகவல் பரிமாற்றங்கள், கடிதங்கள், ஒளிப்படங்கள் குறித்த அனைத்து செய்திகளையும் ஆவணப்படுத்தினார்.
போர்க்களங்களில் கிடைக்கும் சிறு துண்டு காகிதம், புரட்சிப் படையினரின் சிறு குறிப்பு, படிப்பறிவில்லாத பாமர விவசாயியின் வாக்குமூலம் உட்பட அனைத்தும் வரலாற்றுத் தகவல்கள் பொதிந்துள்ள பாதுகாக்கப்பட வேண்டிய பெட்டகமாகவே கருதினார்.
அவ்வாறு அவர் ஆவணப்படுத்திய தகவல்களை, சிலியா அவர்களால் நிறுவப்பட்ட வரலாற்று நிகழ்வுகளுக்கான அலுவலகம் (Office of Historical Affairs), கியூபப் புரட்சி அருங்காட்சியகம் (Museum of the Revolution) ஆகியவற்றில் பாதுகாத்தார். சிலியா அவர்களால் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களே இன்றளவும் கியூபப் புரட்சி குறித்த செய்திகளுக்கு ஊற்றாக அமைந்திருக்கின்றன. கியூப மக்கள் அந்த ஆவணங்களை அன்புடன் எல் பாண்டோ டி சிலியா (el fondo de Celia) என்று அழைக்கின்றனர்.
இவ்வாறு சிலியா தன் வாழ்நாளில் மேற்கொண்ட பணிகளில் எல்லாம், தன் இளமைக் காலத்தில் தந்தை மூலமாக அறிந்த அரசியல், சமூக நிலை குறித்த தாக்கங்கள் தொடர்ந்து நிறைந்து காணப்படுகிறது. தன் வாழ்வில் திருமண உறவு என்ற ஒன்றை அடையாமல் நாட்டு நலனிலும், மக்களின் நலனிலுமே தன்னை முழுமையாக ஈடுபத்திய சிலியா, 1980 ஆம் ஆண்டு நுரையீரல் புற்றுநோய் தாக்கத்தால் உயிர் நீத்தார்.
சிலியா சான்செஸ் மாண்டுலே அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட மருத்துவமனை வாயிலில், சிலியாவின் மறைவுக்குப் பின்னர் உரையாற்றிய பிடல் காஸ்ட்ரோ, புரட்சிக்கெனவே தன் வாழ்வை அர்ப்பணித்த சிலியா கியூப தேசத்தின் அடையாளமாகத் திகழ்வதாக பெருமைப்படுத்தி, சிலியாவின் தன்னலமில்லா பொதுநலத் தொண்டை நினைவுகூர்ந்தார். கியூப மக்கள் சிலியாவின் தியாக தீர வாழ்வை பெருமைப்படுத்தும் விதமாக பள்ளிகள், மருத்துவமனைகள், சமுதாய நலக் கூடங்கள் ஆகியவற்றிற்கு பெயர் சூட்டி தங்கள் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிலியா அவர்களின் நினைவாக நினைவிடங்களை ஹவானாவிலும், மான்சானில்லோ நகரிலும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் கியூபாவின் பணமான 'பெசோ'வில் சில்வியா அவர்களின் பெயர், முகத்தைப் பதித்தும், 1990 ஆம் ஆண்டு, 10 பெசோ மதிப்புள்ள நாணயத்தையும் அவர் நினைவாக வெளியிட்டுச் சிறப்பித்தனர்.
கியூப தேசம் மீட்சி பெற நிகழ்த்திய புரட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வீராங்கனையாக மட்டுமல்லாமல், கியூப தேசத்தின் புதிய அடையாளச் சின்னமாகவே விளங்குகிறார். கியூப தேசத்துப் பெண்களின் புரட்சிக்கான அடையாளமாக மட்டுமல்லாது, வீரம், தலைமைப் பண்பு, தாய்மைக் குணம், எளிமை, தொண்டு வாழ்வுக்கான சின்னமாக அறியப்படும் சிலியா, கியூப வானின் நிலையான விடி வெள்ளியாக ஒளி வீசிக்கொண்டிருக்கிறார்!
-அ.சி.கிருபாகரராஜ்
No comments:
Post a Comment