தீட்சதர்கள் தினமும் சாப்பிடுவது கறியும் மீனும்தானா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

தீட்சதர்கள் தினமும் சாப்பிடுவது கறியும் மீனும்தானா

தீட்சதர்கள் தினமும் சாப்பிடுவது கறியும் மீனும்தானா?


பொய்யை உரக்கக் கூறினால் அது உண்மையாகிவிடும் என்று ஊரை ஏமாற்றும் பிரபல ஊடகவியாளர் அர்னாப் கோஸ்வாமி மீண்டும் ஓர் ஏமாற்று வேலையை செய்துள்ளார். அதில் சைவம் சாப்பிடுவதால் கரோனா தொற்று வராது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில் அவர் எழுதியுள்ளதாவது: "உலகம் சனாதன தர்மத்தை இனி ஏற்றுக்கொள்ள உள்ளது (இந்து தர்மம் என்று கூறவில்லை). உலக சுகாதார நிறுவனம் அசைவத்தை தவிர்த்து தூய சைவ உணவைச் சாப்பிடுவதால் கரோனா  தொற்று ஏற்படாது என்று அறிக்கை விட்டுள்ளது" என்று பச்சைப் பொய்யைக் கூறியுள்ளார். உலகமே நம்மை வணங்குகிறது, இனி நமக்கு பசுக்கோமியமும் துளசியும்தான் புனித மருந்துகள், மன அமைதிக்கு இராமாயணமும் மகாபாரதமும் மட்டுமே உலக சமாதானத்திற்கான நூல் என்று அவர் எழுதியுள்ளார். மேலும் முடிக்கும்போது "சனாதன தர்மம் வாழ்க" என்று எழுதியுள்ளார்.


இதேபோல் சைவம் சாப்பிடுபவர்களுக்குக் கரோனா வராது என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு  மருத்துவர் சமூகவலை தளங்களில் தானாகவே தயாரித்த ஏதோ ஆய்வு அறிக்கை ஒன்றைச் சான்றாக வெளியிட்டிருந்தார்.


அதாவது பார்ப்பனர்களுக்கு கரோனா வரவே வராது என்று கூறியவர்  சீனாவில் அசைவம் சாப்பிட்டதால்தான் வந்தது. அயல்நாடுகளில் அசைவம் அதிகம் சாப்பிடுவார்கள் ஆகவே அவர்களுக்கு வந்தது என்று பலவிதமாக உளறிக் கொட்டியிருந்தார். 


முதலில் குளிர்ப்பிரதேச மக்களுக்கு மட்டும் வரும் என்றார்கள். அப்போது அய்ராப்பிய நாடுகளில் கரோனா தொற்று அதிகம் பரவிக்கொண்டு இருந்தது. அதன் பிறகு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவியது. அப்போது அவர் களின் உணவு முறை, வாழ்க்கை முறை சரியில்லை ஆகையால் கரோனா பரவுகிறது என்றார்கள்.  இன்று இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. மீண்டும் ரயில் சேவை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தம், விமானப் பயணம் நிறுத்தம் என அறிவித்துக்கொண்டு இருக்கின்றனர். விரைவில் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு என்ற ஒரு பேச்சும் எழுந்து கொண்டு இருக்கிறது, 


இந்த நிலையில் இவர்கள் கூறும் சைவ சாப்பாடுப் பிரியர்கள் அதிகம் வாழும் குஜராத்தில் கரோனா தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. காளகஸ்தி சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட பல பார்ப்பனர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி கோவில் மூடப்பட்டது. அதே போல்  கீழ் திருப்பதி கோவிலிலும்  இதே நிலைதான் அங்கே பார்ப்பனர்களின் பல குடும்பங்களுக்கு கரோனா தொற்று இருப்பதால் சாமிக்கு பூஜைகள் செய்ய ஆள் இல்லை.


உலக சுகாதார நிறுவனம் சைவம் சாப்பிட்டால் கரோனா தொற்றாது என்று ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறதா? உலக சுகாதார நிறுவனம், நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக கிடைக்க இறைச்சியை எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் உள்ள வைட்டமின் டி மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகள் நமக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளன என்று கூறியுள்ளது.


இந்த நிலையில் சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி தேர் மற்றும் தரிசன விழா நடக்க இருந்தது. இதில் பங்கேற்க உள்ள தீட்சதர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோத னையில் ஆரம்ப கட்டத்தில் இருவருக்கு தொற்று உறுதியானது. இன்னும் 50 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டும்.


நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தீட்சிதர்களுக்கு தொற்று உறுதியானதால், கோவிலுக்குள் செல்ல 5 தீட்சிதர் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என ஆட்சியர் அன்புச்செல்வன் உறுதியாகத் தெரிவித்தார். இதனால் கீழ வீதியில் முற்றிலும் தடை ஏற்படுத்தப்பட்டது. கீழ சன்னதியின் முகப்பும் தடுப்பு கட்டப்பட்டு காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இருந்தும் தீட்சிதர்களின் கோரிக்கை ஏற்று, ஆனிதிருமஞ்சன விழாவை கோவிலுக்குள் எளிமையாக நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும், பல தீட்சிதர் களுக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் எல்லாம் என்ன வாரம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ கடாவெட்டு விருந்து சாப்பிடுபவர்களா?  கறியும், மீனும்தான் இவர்களுக்கு தின உணவா?


கரோனா தொற்றை ஒழிக்கும் பணியில் முதலிடத்தில் உள்ள கேரளாவில் கரோனா தொற்று உள்ளவர்களுக்கு வைட்டமின் டி மற்றும் புரதச்சத்துகள் நிறைந்த மாட்டிறைச்சி உணவுதானே வழங்கப்பட்டு வருகிறது.


எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் இந்தப் பார்ப்பனீயம் தன் வயிற்றுப் பிழைப்பு வேலையை மட்டும் உஷாராகவே செய்து கொண்டு தானிருக்கும் - எச்சரிக்கை!


No comments:

Post a Comment