மதம் பிடித்தால் ஆபத்துதான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

மதம் பிடித்தால் ஆபத்துதான்

புலம்பெயர்வு தொழிலாளர்கள் தொடர்ந்து மரணித்துவரும் நிலையில் அத்தகைய மரணங்கள் நடக்கவே இல்லை என்றும், மனிதர்கள் என்றால் மரணிப்பது இயல்பே என்றும் மேற்குவங்க பாஜக தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.


பீகாரில் உள்ள இரயில் நிலையம் ஒன்றில் இறந்து கிடந்த தாய் மீது போர்த்தப்பட்ட துணியை விலக்கி அவரது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் பரவி மிகவும் பரிதாபத்துடன்  கூடிய பரபரப்பை ஏற்படுத்தியது, இதன் தாக்கம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


புலம்பெயர்வு தொழிலாளர்களின் தொடர் மரணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிய மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், ஊரடங்கு காரணமாக சில ஊழியர்கள் வேலைக்கு வர முடியவில்லை என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.


"இது போன்ற மரணங்கள் தேவையில்லாதது தான்; இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பது  தவிர்க்க முடியாதது. தற்போதைய நிலைமை சாதாரணமானது அல்ல. இதற்கு முன்பு இரயிலில் மக்கள் இறக்கவே இல்லையா, இப்போது மட்டும் ஏன் மரணங்களைப் பெரிதுபடுத்துகிறீர்கள்? தற்போது இரயிலில் நடந்த மரணங்கள் அனைத்தும் வேறு வேறு காரணங்களால் நடந்தவை. ஆகவே இரயில்வே துறையை அரசியல் காரணங்களுக்காக குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்


பாஜக தலைவரின் இந்தக்கருத்து  குறித்து திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய் கூறுகையில்,  "மாநில அரசுக்கு எதிராக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்துக்கள் அவரது ஆணவத்தின் அறிகுறிகளாகும். திலீப் கோஷின் கருத்தை எத்தனை நாளைக்குத் தான் நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியும்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விடயத்தில் மத்திய பிஜேபி அரசு நடந்து கொண்ட விதம் மிகவும் கொடூரமானது.


மாநிலங்களைக் கடந்து வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி வந்தவர்கள், கரோனா எனும் நோயின் கடும் தாக்குதல் காரணமாக சொந்தவூருக்குச் சென்று விடலாம் என்று முடிவு செய்தது இயல்பே!


அதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில், உரிய வகையில் மேற்கொள்ளாத மத்திய பிஜேபி அரசின் நிலைப்பாடு குறித்து பெரும் அதிருப்தியும், கண்டனங்களும் வெடித்தன.


காலந் தாழ்ந்து இரயில்களை ஏற்பாடு செய்த நிலையில், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையால் பிரதமரை ஷைலக்கோடு  (வட்டிக்கான தொகையாக மனித சதையை வெட்டி எடுக்கும் யூதன் - சேக்ஸ்பியர் நாடகம்) ஒப்பிட்டுப் பார்க்கும் நிலை ஏற்பட்டது. பலரும் வழிப் பயணத்திலேயே மாண்டனர்.


இந்த நிலையில் மேற்கு வங்க மாநில பிஜேபி தலைவர் கொஞ்சமும் இரக்கமின்றி  மரணங்கள் நடக்கத்தான் செய்யும் என்று பேசியிருப்பது - அவர்கள் சார்ந்த கட்சி - ஏற்றுக் கொண்ட மத மனப்பான்மை தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும். மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து, மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தே!


"மதம் என்ற பேய் பிடியாது இருக்க வேண்டும்" என்று வடலூர் இராமலிங்க அடிகள் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது.


No comments:

Post a Comment