கரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது, ஆசியாவில் முதலிடம் பெற்று விட்ட கரோனா பாதிப்பு ஒடிசா மாநிலத்திலும் புகுந்தது.
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள நரசிங்கப்பூர் என்னும் இடத்தில் காளி கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த சரோஜ்குமார் பிரதான் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இக்கோரப் படுகொலை தொடர்பாக அர்ச்சகரான 70 வயதாகும் சன்சாரி ஓஜா என்பவரை காவல் துறை யினர் பிடித்து விசாரித்தனர். அப்போது கரோனாவை முடிவுக்குக் கொண்டு வர காளி தன்னிடம் இவ்வாறு செய்யச் சொன்னதாக அவர் வாக்குமூலம் அளித்துள் ளார். கோவிலுக்கு வந்து சாமி கும்பிடும் போது சம்பந்தப்பட்டவரை அடித்துக் கீழே தள்ளி தலையைத் துண்டித்ததாக கூறினார். இதனை அடுத்து பிரதானின் தலையைத் துண்டித்த அரிவாள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலை குறித்து பார்ப்பன அர்ச்சகரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அதே வேளையில் பிரதான் மற்றும் ஓஜா ஆகிய இருவருக்கும் இடையே அந்த கிராமத்தின் எல்லை பகுதியில் உள்ள மாந்தோப்பு தொடர்பாகப் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. எனவே விசாரணை அந்த கோணத்திலும் நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் உள்ள விவசாயியான பிரதானுக்கு நிறைய நிலங்கள் உண்டு. ஊரில் உள்ள காளிகோவிலுக்கு ஊருக்கு அருகில் உள்ள பிரதானின் மாந்தோப்பை தானமாகக் கொடுப்பதாக பிரதானின் தாத்தா பார்ப்பன அர்ச்சகரிடம் உறுதி மொழி அளித்திருந்தாராம். இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வரும்போதெல்லாம் ஓஜா "அந்த தோப்பை கோவிலுக்கு கொடுத்துவிடு; இல்லையென்றால் தெய்வக் குற்றம் ஆகிவிடும்" என்று கூறி வந்திருக்கிறார். அதற்குப் பிரதான் "கோவிலுக்கு நாங்கள் தொடர்ந்து நன்கொடைகளும், இதர உதவிகளும் செய்து வருகிறோம். மேலும் எனது தாத்தா கோவிலுக்குத் தானமாகக் கொடுப்பது குறித்து எதையுமே கூறவும் இல்லை, உயிலும் எழுதவில்லை" என்று கூறி வந்திருக்கிறார். மாந்தோப்பை தனது தந்தை பெயருக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி பார்ப்பனர் அர்ச்சகரின் மகன் பல முறை பிரதானிடம் சண்டையிட்டுள்ளார். இதனை அடுத்து காவல்துறை பார்ப்பன அர்ச்சகர் ஓஜா மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அர்ச்சகர் பார்ப்பனர்கள் என்றால் பரிசுத்தமானவர்கள் என்பது போலவும், கோவிலில் அர்ச்சகர் ஆவது என்றால் சாதாரணமா என்றும் முடி பிளந்து பேசுகின்றவர்களின் வாயை அடைக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி இது. கோவிலுக்குள்ளேயே தலையைத் தூண்டித்துக் கொலை செய்யும் அளவுக்கு ஓர் அர்ச்சகப் பார்ப்பனரால் முடிகிறது என்றால், அவன் எத்தகைய கொடூரனாக இருக்க முடியும்?
இன்னொருவரின் சொத்தை அபகரிக்க முயற்சி செய்த வகையில் நடத்தப்பட்ட இந்தக் கொலையைக் கரோனாவுடனும், காளி பலி கேட்டாள் என்று மதவாதத்துடனும் முடிச்சுப் போடும் இந்த மோசடியை - படுகொலையைப்பற்றி பக்தர்கள்தான் சிந்திக்க வேண்டும்.
அதே நேரத்தில் படுகொலை நடந்த இடம் காளி கோவில் என்பதும், அந்தப் படுகொலையை கடவுள் காளி பார்த்துக் கொண்டு தானே இருந்திருக்கிறாள்! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஒரு பட்டப்பகலில் சங்கரராமன் என்பவர் படுகொலை செய்யப்படவில்லையா?
இவை எல்லாம் கடவுளின் கருணையாலா? சக்தியாலா? பக்தர்கள் சிந்திக்கட்டும்!
No comments:
Post a Comment