டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மேனாள் பாஜக தலைவரும், நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா, பீகார் மாநிலத்தில் ஆளும் நிதிஷ் குமார் அரசை எதிர் கொள்ள, புதிய அரசியல் கட்சியைத் துவங்க முடிவு செய்துள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- ராஜீவ் காந்தி அமைப்புக்கு, சீனாவில் இருந்து நன்கொடை பெற்றதை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியதற்கு, அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டால், சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து வெளியேறிவிடும் என பிரதமர் மோடி உறுதி அளிப்பாரா? என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
- தமிழக கிராமங்களிலும் இணைய சேவை தருவதற்கான கேபிள் வழங்கிட பாரத் நெட் நிறுவனம் நடத்திய ரூ. 1950 கோடி அளவிலான ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது என தி.மு.க., அறப் போர் இயக்கம் ஆகியவை குற்றச்சாட்டை வைத்துள்ளன. தற்போது, இந்த ஏலத்தை ரத்து செய்து, புதிய ஏலத்தை நடத்திட மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, செய்தி ஊடகத்தில் ஒளிப்பதிவாளராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த வேல்முருகன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தமிழக அரசின் சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. அவரது துணைவியார், ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அந்த பணியும் நிரந்தர பணியாக மாற்றி ஆணை தரப்பட்டது.
- புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல்வர் அலுவலகம் இரண்டு நாட்கள் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்படும் என முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- கரோனா தொற்று பரவத் துவங்கிய நிலையிலேயே அது குறித்துப் பரிசோதனை அதிகப்படுத்தாமல் இருந்ததாலும், பாதிக்கப் பட்டோர் பற்றிய விவரங்களை சரிவரக் கையாளாமல் இருந்ததாலும், சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதாலும், கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் 78000த்தைத் தாண்டி விட்டது; இறப்பும் 1025 ஆக அதிகரித்தி விட்டது என கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- கரோனா தடுப்பு மருந்து என சொல்லி மக்களை ஏமாற்றி யுள்ளனர் என்ற புகாரின் அடிப்படையில், யோகா சாமியார் பாபா ராம்தேவ், அவரது பதஞ்சலி நிறுவன தலைமை அதிகாரிகள் ஆகி யோர் மீது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகர காவல் துறை குற்றப்பத்திரிக்கை பதிவிட்டுள்ளது.
- அரசியல் காரணங்களுக்காக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது. இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவி உள்ளதைக் கூறுவோர் அனைவரையும், தொலைக்காட்சி ஊடகங்களில், கடுமையாக சாடுவதையும், நாட்டிற்கு எதிராக எப்படி பேசலாம் என்றும், தனிப்பட்ட தாக்குதலையும் நடத்துகின்றனர். இந்த சூழலில், மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? ராணுவ தலைமை அதிகாரி இது குறித்து மக்களுக்கு ஒரு செய்தியும் தரவில்லை என எழுத்தாளர் தல்வீன் சிங் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- மத்திய நிதி அமைச்சகம், இந்த நிதி ஆண்டில் (2020-21), பொருளாதார வீழ்ச்சி 5 விழுக்காடு என்றும், அடுத்த நிதி ஆண்டில் (2021-22), அது 5 விழுக்காடாக மீளும் எனக் கூறியுள்ளது. ஆனால், 2022-23 நிதி ஆண்டுவரை, இந்த வீழ்ச்சி, மீள்வதற்குச் சாத்தியம் இல்லை என மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது கட்டுரை யில் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- பூரி ஜெகந்நாதர்கோயில் பத்து நாள் ரத யாத்திரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜூன் 23ஆம் தேதி துவங்கி நகரின் பல இடங்களுக்குச் சென்று திரும்பும் நிலையில், ஜூன் 30 இரவு முதல் ஜூலை 2ஆம் தேதி இரவு வரை பூரி நகரம் முழுமைக்கும் முழு ஊரடங்கை ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
தி இந்து, டில்லி பதிப்பு:
- சீனாவில் இருந்து நிதி பெற்றதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலாக, சீன நாட்டுக்குச் சென்ற பாஜக தலைவர்கள் பட்டியலை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜிவாலா வெளியிட்டார். மேலும், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் வெளி நாட்டுப் பிரிவு மற்றும் விவேகனந்தா அமைப்புக்கு சீனா உள்ளிட்ட எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு பணம் கிடைத்தது, கொடுத்தவர்கள் யார்? என்ற பட்டியலையும் வெளியிடத் தயாரா? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.
- குடந்தை கருணா,
27.6.2020
No comments:
Post a Comment