காணொலிமூலம் வகுப்புகளால் பயன்பெறப் போவோர் யார்?
காணொலிமூலம் ஏற்படும் பிரச்சினை கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
கரோனா நோய்த் தொற்று காலத்தில் கல்விக் கூடங்கள் திறக்கப்படாத ஒரு நிலை; இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார்ப் பள்ளிகள் வகுப்புகளைக் காணொலி மூலம் தொடங்கிவிட்டன.
மற்ற அரசு பள்ளிகளும் சரி, வாய்ப்பு வசதி இல்லாத தனியார்ப் பள்ளிகளும் சரி காணொலி மூலம் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை.
காணொலிமூலம் வகுப்புகளை நடத்தி னாலும், ஒரு வீட்டில் ஒரு பிள்ளைக்கு மேலிருந்தால், அத்தனைப் பேரும் காணொலி வகுப்புகளில் கலந்துகொள்ள முடியுமா? ஒவ்வொருவருக்கும் மடிக் கணினியோ அல்லது ஒவ்வொருவரிடமும் கைப்பேசியோ இருக்க வேண்டுமே! இது சாத்தியம்தானா?
இது மாதிரி ஒரு சூழ்நிலையில், வசதியும், வாய்ப்பும் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பயனளிக்கக் கூடிய வகையில் வகுப்புகளை நடத்தினால், இந்த வாய்ப்பின் காரணமாக, வசதியில்லாத குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளை களின் நிலை என்ன? குறிப்பாக கிராமப்புறங் களைச் சேர்ந்த பிள்ளைகளின் சூழ்நிலை என்ன?
கிராமப்புறப் பள்ளிகளிலும், நகர்ப்புறங் களில்கூட மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிப் பள்ளிகள்மூலம் காணொலிவழியாக கல்வி கற்பதற்கான கட்டமைப்புகள் (Infrastructure) உண்டா?
அரசு நடத்தும் பள்ளிகளிலேயே காணொலிமூலம் வகுப்புகளை நடத்த முடியாத நிலையில், தனியார் கல்வி நிறுவனங்களில் நடத்த அனுமதிப்பது எப்படி?
தொடக்கக் கல்வியிலும் இது அறிமுகம் என்பது - உளவியல் ரீதியாக சரியானதுதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காணொலிமூலம் வாய்ப்புப் பெறும் மாணவர்கள் - இந்த வாய்ப்புப் பெற முடியாத மாணவர்களுக்கெல்லாம் ஒரே மாதிரி தேர்வுகள் தானே நடத்தப்படும்?
அப்படி தேர்வு நடத்தப்பட்டால், யார் அதிக அளவில் மதிப்பெண்களைப் பெற முடியும்? அந்த மதிப்பெண்களை வைத்துத்தானே தகுதி - திறமைகளை நிர்ணயித்து உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேர்வு செய்யப்படுகிறார் கள்? இது ஒரு பாரபட்சமான நிலையாகாதா?
வாய்ப்பு வசதி உள்ளவர்கள் - வாய்ப்பு வசதி இல்லாதவர்கள் என்ற ஒரு ‘புதிய ஜாதி'யை உருவாக்கும் இந்தத் திட்டத்தை அனு மதிக்கலாமா?
அறிவியல் வளர்ச்சியை விரும்பாதவர்கள் அல்ல நாம்! அந்த வசதி அனைத்து நிலையில் உள்ளவர்களுக்கும் உருவாக்கிக் கொடுக்காமல், ஒரு குறிப்பிட்ட மேல்தட்டுப் பிரிவினருக்கு மட்டும் மேலும் வாய்ப்புக் கதவுகளைத் திறந்து விடுவதும், இந்த சூழ்நிலையில் தகுதி, திறமை பேசுவதும் - கொடுமையான ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவது ஆகாதா?
முதலில் காணொலி வகுப்புக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அடுத்த இரண்டு மணிநேர இடைவெளியில் அனுமதி அளித் ததன் பின்னணி என்ன? பின்னால் இருந்து அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? அ.தி.மு.க. அரசு யாருக்கான அரசு?
சமூகநீதி என்பது பல வகையிலும் கவ னிக்கப்பட வேண்டிய மிகமிக முக்கியமான ஒன்று. இதில் ‘புதிய ஜாதி'யை உண்டாக்க வேண்டாம் தமிழ்நாடு அரசு.
சிலருக்கு மட்டும் கூடுதல் வாய்ப்பு - பெரும் பாலோருக்கு அந்த வாய்ப்பு மறுப்பு என்பது சமூகநீதியா?
தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், இது ஒரு பெரிய பிரச்சினையாக வெடிக்கும் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
6.6.2020
No comments:
Post a Comment