பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் எழுதிய, வரலாறுகளைத் தெளிவாக உள்ளடக்கிய மிக அழகான நூல், "மனித உரிமை போரில் பெரியார் பேணிய அடையாளம்". நூலின் தலைப்பிலேயே எத்தகையச் செய்திகளை உள்ளடக்கியது இந்த நூல் என்பது தெரியவரும். யாவருக்கும் புரியும் வகையில், அய்யாவைப் பற்றிக் கூறுவதும், அவருக்கு முன்னான வரலாறுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் நமக்கு உதவும் இந்தப் புத்தகம் 174 பக்கங்களைக் கொண்டதாகும். இந்நூலின் இறுதிப் பகுதியில்தான் பெரியாரின் வாழ்வு, போராட்டம் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகள் அனைத்தும் பெரியாருக்கு முன் இந்த ஒட்டுமொத்த சமூக அமைப்பின் நிலை, மாற்றம் வேண்டி குரல் எழுப்பியவர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட தடைகள், தொடர்ச்சியாக பெரியாரின் குரல், இயக்கச் செயல்பாடுகள் என, தெளிவாகப் புரியும்படி செய்திகள் பொதிந்திருக்கின்றன.
அறியாமை, மூடநம்பிக்கை, இனங்காணல், தற்கால இந்தியாவின் தொடக்க நிலை, பழைய மரபு, ஜாதி மத அடையாளம், ஆங்கிலேய ஆட்சி, பார்ப்பனர்களின் கெட்டிக்காரத்தனம், கல்வி, மொழியறிவு, ஹிந்து, கிருத்துவம், முஸ்லிம், நீதிக் கட்சி, முற்போக்கு, சுயமரியாதை என அய்யா பெரியாரின் தொடக்கத்திற்கு முன் பழைய நிலையை எடுத்துக்கூறி, பெரியாரின் மனிதநேயத்தையும், அதில் அவர் வெற்றியும் பெற்றதைச் சான்றுகளோடு நிறுவி, உணர்த்தியிருக்கிறது இந்நூல்!
பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார்? என்பவர்களுக்குப் பதில் உரையாக, "பெரியாருக்கு முன்" சமுக நிலையையும், "பெரியாருக்குப் பின்" சமுகத்தின் நிலை என்ன என்பனவற்றையும் முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர். அய்யாவைப் பற்றிய இவரின் சிந்தனை, சொல்லாடல், மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் வரலாற்றுப் பதிவுகளைத் தாங்கிய கேடயமாக இருக்கிறது "மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்".
த.மு.யாழ் திலீபன், தருமபுரி
No comments:
Post a Comment