தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் சதிய?
- தமிழ் கா.அமுதரசன்
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் வாழும் மக்களாக தமிழர்கள் உள்ளனர். 2003 ஆம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையில் அமெரிக்காவில் மட்டும் பணியில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரம். இதிலும் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என்று உலக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Science Foundation) 2013ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விபரத்தில் தெரிவித்துள்ளது.
உலகில் தமிழர்கள் இல்லாத நிறுவனங்களே இல்லை என்று சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக, white collared பணியில் உள்ளனர் இந்தப் பெருமைக்குக் காரணம், தமிழகத்தில் நடைபெற்று வந்த திராவிட இயக்க இயக்கத்தின் ஆட்சியும், அதன் சாதனைகளும் தான். இராஜகோபாலாச்சாரியார் மூடிய பள்ளிகளோடு சேர்த்து, 13 ஆயிரத்து 500க்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்தார், தந்தை பெரியாரின் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்திய காமராசர். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா, இரு மொழிக் கொள்கை என்ற மகத்தான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அதன்பின் ஆட்சியைத் தொடர்ந்த கலைஞர், கல்வியில் எந்த மாநிலமும் கண்டிடாத புதிய பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். இந்தியாவிலேயே உயர்கல்வியும், ஆராய்ச்சிப் படிப்பும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையிலும், அதிகமான பொறியியல் மாணவர்களை உருவாக்கி தருவதிலும், பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பயிலும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கையிலும் தமிழகம் தான் முதலிடம் வகிக்கின்றது.
திராவிட இன மக்களின் இந்தச் சாதனைகளையும், பெருமைகளையும் கண்டு பொறுக்காத, ஆட்சிப் பொறுப்பிலுள்ள ஆரியக்கூட்டம், நாக்பூரின் திட்டமிடலோடு தமிழகக் கல்வி முறையைச் சிதைக்க, பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. நீட் தேர்வு தொடங்கி, 5,8,11 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு, புதிய கல்விக்கொள்கை, மும்மொழி திட்டம் இவை எல்லாம் இதில் அடங்கும். ஆர்எஸ்எஸின் அரசியல் பிரிவான மத்திய பாஜகவின், கைப்பாவையாக உள்ள அதிமுகவின் ஆட்சி, மத்திய அரசு காலால் இடும் வேலைகளை தலையால் செய்துவருகிறது.
இதனுடைய தொடர்ச்சியாக, 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பை விட மிகவும் முக்கியமானது. காரணம், தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான அடிப்படை விருப்பப் பாடங்களை தேர்வு செய்வது இந்த வகுப்பில் தான்.
11 ஆம் வகுப்பில், ஒவ்வொரு பிரிவிலும் ஆறு பாடங்கள் இடம்பெற்றிருந்தது. மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கும் வகையில் பாடப்பிரிவுகள் இதுவரை இருந்து வந்தன.
அதாவது தமிழ், ஆங்கிலம், (மொழிப்பாடங்கள்) இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என ஆறு பாடங்கள் இருந்தன.
கணிதம் மற்றும் உயிரியல் எடுத்துப் பயிலும் மாணவர்கள் அனைவரும், மருத்துவப் படிப்பு அல்லது பொறியியல் படிப்பு, இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் அந்தப் பிரிவை எடுத்து படித்து வருகின்றனர், பள்ளியிலேயே அவர்களைக் குழப்பி, திசை திருப்புவதன்மூலம், பொறியியல் படிப்பில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையையோ அல்லது மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையையோ பாதியாகக் குறைத்து, அதனை பிற மாநில மாணவர்களுக்குத் தாரைவார்க்கும் சூழ்ச்சி தான் இந்தப் பாடச்சுமை குறைப்பு என்ற தமிழக அரசின் திட்டம் என்பது புலப்படுகிறது.
நீட் தேர்வு அமலுக்கு வந்தது முதல், அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் எட்டாக் கனி ஆனதோடு, மருத்துவக் கனவு பலிக்காமல் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த முறை வந்தால், ஏற்கனவே நீட் தேர்வு பயத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள், குறிப்பாக, ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள், உயிரியல் பாடம் எடுக்க மாட்டார்கள். மேலும், கணக்கின் மீது பயம் உள்ள மாணவர்கள், கணக்குப் பாடத்தையும் தேர்வு செய்யமாட்டார்கள்.
"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்பது போல, மருத்துவக் கனவும் பள்ளியிலேயே கருகிவிடும், பொறியியல் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறையும். இதன் மூலமாக, அந்தப் பாடங்களை கல்லூரியில் தேர்வு செய்யும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையும், எதிர்காலத்தில் அதன் மூலமாக பெறக்கூடிய வேலைவாய்ப்புகளும் தமிழக மாணவர்களுக்கு இல்லாமல் ஆகிவிடும். சரி! வேறு பிரிவு எடுக்கலாம் என்றால், வணிகவியல் பிரிவைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் என 5 பாடங்களும், கணக்குப்பதிவியல் பிரிவாக இருந்தால், அதிலிருந்து கணினி தொழில்நுட்பத்தை நீக்கி 5 பாடங்கள் ஆகவும் மாற்றியுள்ளனர். வணிகவியல் மாணவர்கள் கணினி தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் பறிபோகிறது.
600 மதிப்பெண்களை 500 ஆகக் குறைத்து, மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்ற இந்த அறிவிப்பு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு வைக்கப்படும் வேட்டு.
மத்திய பாஜக அரசின், புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வரும் முன்பாகவே, ஆரம்பக் கல்வி, நடுநிலை மாணவர்களுக்கு பொதுத்தேர்வை அறிவித்தது இந்த அதிமுக அரசு. நீட் தேர்வு விசயத்தில் தொடர்ந்து உண்மைகளை மறைத்ததோடு, இரட்டை வேடம் போட்டு வருகிறது.அரசுப் பள்ளி மேசைகளுக்கு, பாஜகவின் கொடியில் உள்ள வண்ணத்தை அடித்ததோடு, திருப்பூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெயரை துரோணாச்சாரியார் பெயரை மாற்றியது, அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர்களின் எதிர்ப்பை மீறி, ஸிஷிஷின் சாகா பயிற்சியைக் கொடுத்து வருகிறது. இப்படி பாஜகவின் கைப்பாவையாக, ஆர்.எஸ்.எஸ். என்னும் நூலால் கட்டப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு "மாணவர்களின் நலனுக்காக" என்ற வாதத்தை ஏற்க முடியாது. கிராமப்புறங்களில், பூனைகளைக் கண்டவுடன், "பால் பத்திரம்" என்று சொல்வார்கள்! அதுபோல, அதிமுக ஆட்சியைப் பார்த்து, "பாலகர்கள் பத்திரம்" என்று நாம் சொல்ல வேண்டி உள்ளது!
No comments:
Post a Comment