தந்தை பெரியார்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! எல்லோரும் சொல்லி விட்டனர். வக்கிர ரூபம் வயித்திநாதனிலிருந்து, சாந்த மூர்த்தியான காந்தியார் வரை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஆனால் மக்கள் ஒன்றுபட்டார் களா?
மக்களை ஒரு சமுதாயமாக ஒன்றுபடவிடாமல் வெவ்வேறாகப் பிரித்து வைத்திருப்பது எது? அல்லது பிரித்து வைத்திருப்பன எவை?
படிப்பு, அதன் காரியமாகிய உத்தியோகம், பணம், அதன் காரியமாகிய ஸ்டேடஸ், அதாவது தகுதி, தொழில் அதன் காரியமாகிய பெருமை என்று பலரும் பலவாறு கூறினாலும், நம் நாட்டைப் பொறுத்த வரையில் அது வும் இந்து மதத்தைப் பொறுத்த வரையில் இவைகள் எல்லாம் பிரிவுக்கு, வேற்றுமைக்கு அடிப்படையான முக்கியக் காரணங்கள் என்று சொல்லிவிட முடியாது. இவைகளை எல்லாம் தன்னுள் அடக்கிய ஒரு மாபெரும் காரணமுண்டு. அதுதான் இந்து மதத்திற்கே "தனிச்சிறப்புடைய" அதன் வருணாசிரமம். அதாவது ஜாதி பேத முறை.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களான மன்னர்கள், சூரியகுல, சந்திரகுல, அக்கினி குல அரசர்கள் அதாவது சோழ, பாண்டிய, சேர ராஜாக்கள், மனுநீதி தவறாமல் மன்னுயிர் காத்து, மாதம் மும்மாரி மழை பெய்கிறதா? என்று மந்திரிகளைக் கேட்டறிந்து, தங்களுடைய அவதாரப் பெருமை கெடாமல் அதைக் காப்பாற்றிக் கொண்டு வரமுடிந்த அந்தக் காலத்தில், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கிற அய்ந்து பெரும் பிரிவுகளில் வைத்து சாஸ்திரத்திலும், சட்டத்திலும், நடை முறையிலும் பார்ப்பனர்கள் கையாண்டு வந்தார் கள் என்றாலும், அந்த அரசர்கள் செல்லாக் காசுகளான பிறகு, இந்த நாட்டிற்கு வந்த மற்ற நாட்டவர்கள் வியாபாரத் துறையையும், கைக்கொண்டு இந்த நாட்டு வியாபாரிகளையும் நாணயமில்லாத தரகர்களாக்கிய பிறகு, பார்ப்பனன், சூத்திரன், பஞ்சமன் என்று மூன்று பிரிவுகள் தான் இப்பூலோகத்தில் (அவர்களை உயி ரோடு, வைத்திருக்கிற இந்தியாதானே அவர்கள் பூலோகம்) உண்டு என்று சாஸ்திரிகள் முடிவு கட்டி அதைச் சட்டத்திலும் நிலை நாட்டி நடைமுறையிலும் கையாண்டு வருகிறார்கள். இந்தப் பிரிவு, அதாவது மனிதன் பிறந்த பிறப்பினாலேயே உண்டாக்கப்பட்டி ருக்கும் பிரிவு. இந்த இந்துமதம் ஒன்றைத் தவிர, உலகத்தில் வேறு எந்த மதத்திலும் இல்லாத இந்த அக் கிரம அநியாயம் ஒழிக்கப்படாத வரையில், உலகத் தோடு தம்மைச் சேர்த்து எண்ணுவதற்கே, நமக்குத் தகுதியில்லை என்பதுதான் நாம் நெடுநாளாக வற் புறுத்திச் சொல்லி வருவதாகும்.
இதை நாம் சொல்லும் போதெல்லாம் இதென்ன சுண்டைக்காய் விஷயம்! என்றார்கள் நம் நாட்டுத் தேச பக்த சிரோன்மணிகள். கட்டுப்பாட்டுக்குப் பயந்து கட்டி யிருக்கும் கதர் வேஷத்தை மறைக்க, சுண்டைக்காய் விஷயமென்று வாயால் சொல்லி வந்தார்களே தவிர, கிடைத்த ஒவ்வொரு சந்தர்பத்திலும் தங்கள் தங்களு டைய ஜாதியை, ஜாதியின் பெருமையை, ஜாதியினால் காரியத்தை முடித்துக் கொள்ளுகிற போக்கை மறந்து விடவில்லை. இருந்தாலும் சொல்லி வந்தார்கள் இதைச் சுண்டைக்காய் விஷயமென்று.
"இது சுண்டைக்காய் விஷயமல்ல" 25 வருடங்களுக்கு முன்னாலேயே சொன்னேன். அப்பொழுது இதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இன்று இது பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டது. இதைத் தீர்க்க ஒரு வழி காணாவிட்டால் வகுப்புத் துவேஷத்தால் வந்த அனர்த்தங்களைப் போல எத்தனையோ பங்கு அனர்த் தம் இதனால் உண்டாகும். காங்கிரஸ் நண்பர்களே! மறவாதீர்."
இதை நாம் கூறவில்லை. பெரியார் இராமசாமி அவர்களும் சொல்லவில்லை. சொல்லுபவர் காங்கிரஸ் தலைவர் . பெரிய தலைவர் தோழர் ராஜன் பாபுதான் இப்படிச் சொல்லுகிறார். சென்னை மாகாணத்தை மனதில் எண்ணிச் சொல்லவில்லை. பீகாரிலே இந்த நிலைமை என்கிறார் பாட்னா பொதுக் கூட்டத்திலே.
இந்து - முஸ்லிம் வகுப்புத் துவேஷம் - அதன் விளைவு எண்ணற்ற மக்கள் அனாதைகள் ஆனார்கள். கணக்கில்லாத கன்னியர் சோரஞ் செய்யப்பட்டனர். அளவற்ற வாலிபர்கள் அடித்து, குத்தி, சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். கொள்ளை, கொலை, தீவைத்தல், நித்திய சாதாரண நிகழ்ச்சிகள் மதிப்பிட முடியாத பொருள்கள் சேதம் இவைகள் தான் வகுப்புத் துவே ஷத்தால் வந்த அனர்த்தங்கள்.
இந்த அனர்த்தங்களைப் போல எத்தனையோ பங்கு அதிகமான அனர்த்தம், சுண்டைக்காய் விஷயம் என்று தேசியவாதிகளால் சொல்லப்பட்ட ஜாதித் துவே ஷத்தால் உண்டாகும் என்கிறார் ராஜன்பாபு. காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்த பிறகு, பூரண சுதந்திரம் என்று சுயராஜ்ய பள்ளு பாடிய பிறகு, இந்த நாட்டில் நடந்த முனிசிபாலிட்டி, தேர்தலை எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு ஊரிலும் ஜாதி அடிப்படையில் தான் எலக்ஷன் நடந்தது என்பதையும், நம் தேசியத் தோழர்கள் வஞ்சித்துக் கொள்ளாமல் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்த லிலும், ஜாதி அடிப்படையிலேயே நடவடிக்கைகள் நடந்தன என்பதையும், அதுவும் வரதாச்சாரி போன்ற வர்கள் கீழ்வெட்டான முறையில் ஜாதித்துவேஷத்தை வளர்த்தனர் என்பதையும் எந்தத் தேசியவாதியும் மறந்துவிட முடியாததாகும்.
ஒரே நாட்டில் வெவ்வேறு வகையான ஜாதி உலகங்கள் இருந்து கொண்டிருக்கிற வரையில், அது வும் அந்த உலகங்கள் ஒன்றையொன்று தாழ்த்திப் பேசி, காரியத்தில் நடத்திக் கொண்டிருக்கும் போது எவ் வளவோ பெரிய அனர்த்தங்கள் உண்டாயிருந்தால் அது ஆச்சரியப்படுவதற்குரியதல்ல. அவ்வாறு நம் மாகாணத்தில் உண்டாகவில்லை என்றால், அதற்குக் காரணம் பகுத்தறிவை அடிப்படை யாகக் கொண்ட திராவிடர் கழகம்தான் என்பதை அறிவுடைய ஒவ் வொருவரும் உணர்ந்திருக்க வேண்டும்.
ஜாதித்துவேஷத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியைக் குறித்துப் பேசிய தோழர் ராஜன்பாபு அவர்கள் அதைத் தீர்ப்பதற்கான முறை என்ன? என்பதை விளக்கவில்லை. ஆனால் திராவிடத்தந்தை பெரியாரவர்கள் இந்த ஜாதித் துவேஷத்தைத் தகர்த்தெறிய ஒரு ஆலோச னையைக் காங்கிரசுக்கும் அரசியல் நிர்ணய சபைக்கும் வெளியிட்டிருக்கிறார்கள். அதை மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்.
"இந்திய யூனியன் கான்ஸ்டியூஷனிலும், இந்திய தேசியக் காங்கிஸ் கான்ஸ்டியூஷனிலும் "இந்திய யூனிய"னில் உள்ள மக்களில் அல்லது இந்துக்கள் என் கிற சமுதாயத்தில் அரசியலின் பேராலும், மத இயலின் பேராலும், சமுதாய இயலின் பேராலும் பிராமணர், சூத்திரர், அரிஜனர் என்கிற பிரிவு எந்த முறையிலும் அனுஷ்டிக்கப்பட மாட்டாது."
"இந்த வார்த்தைகள் அரசியல், மத இயல், சமுதாய இயல் கொண்ட எந்த ஆதாரங்களிலும் உபயோகிக்கப் பட மாட்டாது. அதற்கு இடமும் கொடுக்கப்பட மாட்டாது. இவ்வார்த்தைகள் இருக்கும் ஆதாரங்களைச் சர்க்காரோ, காங்கிரசோ மரியாதை செய்ய மாட்டாது. கல்வித் துறையிலும் இவ்வார்த்தைகளுக்கு, பிரிவுக ளுக்கு இடமிருக்க அனுமதிக்கப்பட மாட்டாது."
இதைத் தெளிவாக காங்கிரசும், காங்கிரஸ் சர்க்காரும் மக்களுக்குச் சொல்லிவிடவேண்டும். பிறகு வகுப்புத் துவேஷம் இருக்குமா? வகுப்பு ஸ்தாபனங்களுக்குத் தான் என்ன வேலை என்று கேட்கிறார் பெரியார் அவர்கள். மக்கள் மக்களாக வாழவேண்டும். அதற்கு வழி என்ன? என்கிற சிந்தனையே உருவான பெரியாரவர்கள் தந்திருக்கும் இந்த ஆலோசனையைத் தேசியத் தோழர் கள் சிந்திக்க வேண்டும். யார் எத்தனை தடை உத்தரவைப் போட்டாலும் இனி "பார்ப்பாரத் தன்மை"யைக் காப்பாற்றி விட முடியாது அல்லது "சூத்திரத் தன்மை"யை நிலை நிறுத்திவிடவும் முடியாது. பஞ்சமத் தன்மை யையும் பராமரித்து விட முடியாது என்கிற உண்மை களை உணர்ந்து இருக்க வேண்டும்.
மற்றவர்கள் எப்படிப் போனாலும் இந்த நாட்டுப் பத்திரிகைகள் இவ்வுண்மையை உணர்ந்து, இந்தத் துவேஷ மனப்பான்மை வளராமலிருக்க, துவேஷத் திற்கு அடிப்படையான ஜாதிகள், வகுப்புகள் அழிந் தொழிய, சமத்துவச் சமுதாயம் உருவாகப் பாடுபட வேண்டும்.
இருப்பதை மறைத்தோ, குறைத்தோ 'தினமணி'யைப் போல இனி மேலும் மதிப்பிடப்படுமானால், அப்போக் கிலேயே தேசியத் தலைவர்கள் என்பவர்களும் நடந்து கொள்வார்களானால், அவர்களுக்குத் தோழர், ராஜன் பாபுவின் எச்சரிக்கை நினைவிருக்க வேண்டும் என்பதை மட்டும் நாம் எடுத்துக் கூறுகிறோம்.
- "குடிஅரசு" - தலையங்கம் - 24.04.1948
No comments:
Post a Comment