கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் உடலால் மறைந்தார் எனினும், உணர்வால், சாதனைகளால் நம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். கொள்கையால் வாழும் கொற்றவர் அவர்!
சமுதாயச் சிந்தனையானாலும், அரசியல் ஆனாலும், ஆட்சியானாலும் அவர் பொறித்துச் சென்ற முத்திரைகள் என்றும் நிலைக்கக் கூடியவை.
எத்தனையோ ஆதாரங்களை எடுத்துக் கொட்ட முடியும் என்றாலும் ‘விடுதலை’ பொன் விழா மலருக்கென்று அவர் அளித்த தனித்த பேட்டி, அவரின் முழு வடிவத்தையும், எண்ணங்களையும் முழுமையாகப் பறைசாற்றக் கூடியவை.
கேள்வி: தமிழர்களிடத்தில் இனமானமும், இனவுணர்வும் தழைத்தோங்க என்னென்ன காரியங்களை நாம் செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
கலைஞர் பதில்: “தமிழர்களுடைய வரலாறு, மரபு, பண்பாடு, இலக்கியக் கருத்து இவையெல்லாம் தமிழ் இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
அத்தகைய கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நாள் தோறும் நடைபெற வேண்டும். மிகக் குறிப்பாக பல்வேறு ஜாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கின்ற தமிழ் சமுதாயத்தில் முக்குலத்தோர், வன்னியர், முதலியார், செட்டியார் என்பது போன்ற பல்வேறு ஜாதிப் பிரிவுகளையெல்லாம் அகற்றி எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் எல்லோரும் தமிழ் ஜாதிதான் என்கிற அந்தவுணர்வை உருவாக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.
இதுதான் அவர் மனதில் ஆழமாக ஊன்றி வளர்ந்திருந்த கொள்கைத்தரு.
அந்த அடிப்படையில் தான் பெரியார் நினைவு சமத் துவப்புரங்களை நாடெங்கும் உருவாக்கினார். இந்தியத் துணைக் கண்டத்தில் எவர் சிந்தனையிலும் உதிக்காத இந்தக் கருத்து - சாதனை காலம் உள்ளவரை கணீர்! கணீர்! என ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ஜாதிக்கென்று தனி சுடுகாடு கிடையாது - எந்த மதத்தின் வழிபாட்டுச் சின்னங்களும் கிடையாது - நூலகம் உண்டு, சமுதாயக் கூடம் உண்டு என்பதெல்லாம் எத்தகைய ஆக்கப் பூர்வமான சிந்தனை? அவர் காண விரும்பிய ஜாதி ஒழிந்த மாதிரி உலகம் (Model World).
பெரும்பாலான பெரியார் நினைவு சமத்துவப்புரங்களைத் திறந்து வைத்த பெருமை உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களையே சாரும்.
திராவிடர் இயக்கச் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை, நியாயமாக அண்ணாவின் பெயராலே கட்சியை வைத்துக் கொண்டு, ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கும் அண்ணா திமுக ஆட்சி, அதனை மேலும் விரிவுபடுத்தியிருக்க வேண் டாமா? நிலைமை என்ன என்றால், சரிவரப் பராமரிப்பு இன்றிப் பாழ்பட்டுக் கிடக்கும் பரிதாப நிலையைக் கண்டு கண்ணீர் வடிக்கும் நிலைதான்! எதிலும் அரசியல் - என்பது ஆரோக்கியமானதல்ல.
அதேபோல அனைத்து ஜாதியினருக்கும் - அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் இரு முறை மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் இயற்றப்பட்டன.
தந்தை பெரியாரின் இந்த இறுதிக் கட்டளையை நிறைவேற்றிடாமல், நெஞ்சில் முள்ளோடு அய்யாவைப் புதைத்தோமே என்று புலம்பிக் கண்ணீர் வடித்த கலைஞர் அவர்கள் அதனைச் செயல்படுத்தத்தான் அத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்தார்.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே இந்த வரிசையில் முதல் சட்டம் என்பது மானமிகு கலைஞர் அவர்கள் ஆட்சி யில் தான் நடைபெற்றது.
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் அய்யா - அண்ணா ஆகியோர் ஊட்டிய திராவிட இயக்க சுயமரியாதை சிந்தனைகள்தான் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.
சுயமரியாதை இயக்க, திராவிட இயக்க வீரத் தாய்மார்கள் பெயரில் அலை அலையாக, அணி அணியாக மகளிர் மறுமலர்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றிய சாதனைக்குச் சொந்தக்காரர் அவர்.
அதனால்தான் திராவிடர் கழகம் -
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
விழாவில்
“மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்” எனும் விருது அளித்துப் பாராட்டியது.
குடிசை மாற்று வாரியம் - செம்மொழிக்கான அங்கீகாரம், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பவை மானமிகு கலைஞர் அவர்களின் சுயமரியாதை - திராவிடர் இயக்கச் சிந்தனைத் தோட்டத்தில் பூத்திட்ட புகழ் மலர்கள்!
சமூகநீதி என்பது அவரின் குருதியோட்டமாகும். சிறுபான் மையினருக்கும் இடஒதுக்கீடு - அடேயப்பா எத்தனை எத்தனைக் குறுக்கீடுகள்! அவற்றை எல்லாம் புறந்தள்ளி, தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டினாரே!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் என்ற அட்டவணை அவர்தம் ஆட்சியின் அருட்கொடையல்லவா!
திமுக என்றால் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அமைப்பு என்ற ஒரு பொய்யை ஒப்பனை செய்து திட்டமிட்டு கிளப்பி விட்டுள்ளார்கள். இந்துத்துவா பேசும் பிஜேபி இதனைச் சொல்லுவதுதான் கடைந்தெடுத்த நகைச்சுவை!
இவர்களின் ஜெகத்குரு சங்கராச்சாரியாரை விட்டு குறைந்தபட்சம் ‘தீண்டாமை ஒழிக’ என்று திருவாய் மலரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இன்னும் சொல்லப் போனால் “தீண்டாமை க்ஷேமகர மானது” என்று சொன்ன ‘தெய்வத்தின் (?) திருக்குரல்’தான் இது (மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யின் கூற்று இது).
ஒடுக்கப்பட்ட மக்களான அருந்ததியருக்கு மூன்று விழுக்காடுகள் இடஒதுக்கீட்டை அளித்தவர் மானமிகு கலைஞர் அல்லவா!
இந்த இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில் மருத்துவக் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற இடம் என்ன? இந்த இடஒதுக் கீடு முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட பின் அருந்ததிய சகோதரர்கள் பெற்ற இடங்கள் எத்தனை என்பதைக் கணக்கிட்டால் அவர்களின் ‘மனசாட்சி’ நெக் குருகும்.
தன்னைப்பற்றி ஒரு வார்த்தை அளவில் விமர்சனம் செய்யுமாறு கேட்டுக் கொண்டபோது அவர் உதிர்த்த அமுத மொழி “மானமிகு சுயமரியாதைக்காரன்!” என்பதே.
கலைஞர் வாழ்கிறார்
கொள்கையால்
இலட்சியத்தால்
சாதனைகளால்
வாழ்கிறார் -
வாழ்ந்து கொண்டே இருப்பார்.
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!!
No comments:
Post a Comment