"மருத்துவக் கல்லூரிகளில் நியாமான இடஒதுக்கீடு களை மத்திய அரசு அலட்சியப்படுத்தி வரும் நிலை நீடித்தால் காலப் போக்கில் பொதுச் சுகாதார அமைவே அடியோடு அழிந்து விடக் கூடும்" என்கிறார் தமிழ் நாட்டின் பிரபல மருத்துவர்களுள் ஒருவரான டாக்டர் சக்திராஜன். 31.5.2020 அன்று "த வயர்" எனும் இணைய தளப் பத்திரிகை மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்தின் சுருக்கம் பின்வருமாறு:
ஜாதி வேறுபாடுகள் இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்து உதவி புரிந்ததால் பல ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று இன்று பணியாற்றி வருகின்றனர். சமூகப் பிணைப்புடனும் மனித நேயத்துடனும் அப்படிப்பட்ட மருத்துவர்கள் கடந்த மூன்று மாதங் களாக கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வருகின்றனர். உயிரிழப்புகள் பெருமளவு தவிர்க்கப் பட்டதற்கு அவர்களுடைய தன்னலமற்ற சேவையே காரணம். மருத்துவக் கல்லூரிப் படிப்பு மறுக்கப்பட் டிருந்தால் ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து இத் தனை சிறந்த மருத்துவர்கள் நமக்குக் கிடைத்திருப் பார்களா என்று நம்மை கேட்க வைக்கிறார் சக்திராஜன்.
ஏழைகளுக்கு என்றே எண்ணத் தோன்றியது
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி கள் உட்பட அனைத்து மருத்தவச் சேவை அமைப்புக ளுமே முகம் சுளிக்கும் வகையில் தூய்மையற்ற நிலையில் இருப்பதாகவே தோன்றியது கரோனா வைரஸ் உலகைப் பாதித்த நாள் வரை. பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அப்படியொரு தோற்றத்தையே அளித்து வந்துள்ளது. பொது மருத் துவமனைகளுக்கு வசதியற்றவர்களே பெரும்பாலும் வேறு வழியின்றி சென்று வந்தனர். மேட்டுக்குடிச் செல்வந்தர்களை மட்டுமே வரவேற்று காத்து வந்தன தனியார் மருத்துவமனைகள். மோசமாகப் பராமரிக்கப் பட்டு வரும் பொது மருத்துவமனைகள் மட்டுமே ஏழைகளுக்கு என்றே எண்ணத் தோன்றியது.
கோவிட்-19 என்று சுருக்கமாக நாம் குறிப்பிடும் வைரஸ் நோய்த் தொற்று நாம் சற்றும் எதிர்பார்க்காத இயற்கைப் பேரிடர் தான் என்றாலும் இது நம்மை பல கோணங்களில் சிந்திக்கவும் விவாதிக்கவும் உதவி யுள்ளது. பொதுச் சுகாதார அமைவும் குடும்ப நலத் துறையும் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலைப் போல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த அவல நிலையில் தனியார் சுகாதார மய்யங் கள் பொது மக்களின் உடல் நலத்தில் எந்த அளவுக்கு அக்கறை செலுத்தி வருகின்றன என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தருணம் இது. கவலையளிக்கும் நிலைமையைச் சரி செய்ய வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.
அபாயகரமான காலகட்டத்தில் உழைத்து வருகின்றனர்
கடந்த மார்ச் மாதம், நாடு தழுவிய ஊரடங்கு துவங்கியதிலிருந்து பொதுச் சுகாதாரம் மற்றும் உடல் நலப் பாதுகாப்பு அமைவு தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை நானே கண்கூடாகப் பார்த்து வருகிறேன். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் - எல்லோரும் இந்த அபாயகரமான காலக்கட்டத்தில் இரவும் பகலும் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர், தங்கள் உடல்நலத்தையும் உயிரையும் பணயம் வைத்து. தனியார் மருத்துவமனைகளும் சிறு தனியார் சிகிச்சை நிலையங்களும் இழுத்து மூடப்பட் டுள்ள நிலையில், பொதுச் சுகாதார அமைப்புகளைச் சார்ந்த பணியாளர்களின் சேவை பாராட்டுக்குரிய தல்லவா?
கரோனா தொற்றின் பாதிப்பு குஜராத்தில் அதி கரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தனியார்மயச் சுகாதார நிலையங்களும் மருத்துவமனை களும் உடனே திறக்கப்பட வேண்டும் என்று அகமதா பாத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் உடனே செயல்பட வேண்டும் என்றும் தவறினால் அவை தண்டிக்கப்படும் என்றும் குஜராத் மாநில அரசு எச்சரித்துள்ளது.
கசப்பான உண்மைக்கு உதாரணம்
மகாராட்டிரத்தில் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. அந்த மாநில அரசு ஒரு படி மேலே சென்று, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர் களின் பணி உரிமம் ரத்து செய்யப்படும் என்றே அச்சுறுத்திவிட்டது. அரசு மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ள கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவர்கள் முன்வராததால் இந்த நட வடிக்கை. தனியார் சுகாதாரத் துறை மனித நேயம் துறந்து, கடமையுணர்வை இழந்து பொறுப்பற்ற முறை யில் அலட்சியமாகச் செயல்பட்டு வருகிறது என்ற கசப் பான உண்மைக்கு இது ஓர் உதாரணம்.
கடமையை சற்றும் மறக்காமல்
இதற்கு நேர்மாறாக, பாராட்டுக்குரியதாக உள்ளது நம் தமிழ் நாட்டின் பொதுச் சுகாதார அமைவு. ஏறத்தாழ 18000 மருத்துவர்கள் இங்கே உள்ளனர். அவர்களுள் சுமார் 12000 மருத்துவர்கள் கிராமப் புறங்களில், ஊரகப் பகுதிகளில் சேவை புரிந்து வருகின்றனர். இவர்களைத் தவிர லட்சக்கணக்கான செவிலியர்களும், தூய்மைப் பணியாளர்களும் இன்னபிற துணை மருத்துவர்களும் சமூகப் பிரக்ஞையுடன் பணியாற்றி வருகின்றனர் நம் தமிழ்நாட்டில். ஆனால் கரோனாவுக்கு அஞ்சி ஒருவர் கூட இன்று வரை தங்கள் பணியைத் துறக்கவில்லை. முன்நின்று சேவை செய்யும் தூய்மைப் பணியாளர்கள், முதல்நிலை ஊழியர்கள், தங்கள் கடமையை சற்றும் மறக்காமல் கடந்த மூன்று மாதங்களாக உழைத்து வருவதை நாம் எல்லோரும் கவனித்து வருகிறோம். பல மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்தவக் கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்று பயிற்சியில் உள்ள மாணவர்களும் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விட்டு விலகிச் செல்லாமல் பல முதல் நிலைப் பணியாளர்கள் இன்றும் சேவை புரிந்து வருகின்றனர்.
மனிதநேயம் ஒன்றே...
ஊதியத்திற்காக மட்டுமா ஊழியம் புரிந்து வரு கிறார்கள் இவர்கள்? அப்படிச் சொல்வதே மனிதாபிமா னமற்றச் செயலாகும். ஒரு மருத்துவர் என்ற அடை யாளத்துடன் நான் சொல்கிறேன் - மனிதநேயம் ஒன்றே அவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பணிபுரிய வைத்துள்ளது. இதை ஒரு அசாதாரணமான சமூகப் பிணைப்பாகவே நான் பார்க்கிறேன். இதுவே என் நம்பிக்கை.
ஒரே நாளில் உருவாகக் கூடியதா சமூகப் பிணைப்பு? என்னைப் போன்ற முதல் தலைமுறைப் பட்டதாரிகள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்ததற்கே ஜாதிகள் சார்ந்த இட ஒதுக்கீடு தான் காரணம். எத்தனை ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் என் போன்றவர்களுக்கு இந்த விடியல்!
ஊரகப் பகுதிகளிலும் வசதிகளற்ற கிராமப்புறங் களிலும் சேவை புரிந்து வரும் பனிரெண்டாயிரம் மருத் துவர்களுள் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தி னர் தான் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். நகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவக் கல்லூரிகள் தவிர, கிராமப்புறங்களில் மேல் ஜாதியினர் என்று சொல்லப்படுகிறவர்களின் பங்களிப்பு மருத்துவச் சேவைகளில் அறவே இல்லை என்றும் நான் நிச்சய மாகக் கூறுவேன். ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து உருவாகி வந்துள்ள என் போன்ற மருத்துவர்கள் தான் இத்தகைய சமூகப் பிணைப்பில் அக்கறை செலுத்து வருகிறோம். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துயரமும் வலியும் என் போன்ற மருத்துவர்களுக்கு எளிதில் புரியும்.
முதுநிலை மருத்துவக் கல்லூரிப் படிப்பில் 50% இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ஆறுத லான விஷயம். தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ள இது அவர்களுக்கு பெரிதும் உதவும். பணி ஓய்வுக் காலம் வரை அரசு மருத்துவமனைகளில் சேவை புரிவது கட்டாயம் என்று ஒப்பந்தப் பத்திரத்தில் மருத்துவர்கள் கையெழுத்திட வேண்டியுள்ளது. எனவே முதுநிலைப் படிப்பிற்கான இடஒதுக்கீடு இளம் மருத்துவர்களுக்கு ஊக்கமளித்து, பணி ஓய்வுக் காலம் வரை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து பணி யாற்றவும் உற்சாகப்படுத்துகிறது.
'நீட்' தேர்வின் தேவையற்ற அறிமுகம்
ஆனால் முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர் களுக்கு முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய தடைக்கல் லாக இருப்பது 'நீட்' தேர்வின் தேவையற்ற அறிமுகம். கல்வியில் சமத்துவம் என்ற போர்வையில், மாணவர் களின் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோல் என்றெல் லாம் விளக்கமளித்துக் கொண்டு இந்த 'நீட்' கொடு மையைக் கைவிடாமல் பிடிவாதமாக இருந்து வருகிறது மத்திய அரசு. எந்த வகுப்பினராக இருந்தாலும் நகர்ப்புற மேட்டுக் குடியினருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி எனும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தன்னலமற்ற சேவைகள்
பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இங்கே உயிரிழப்பு குறைவு என்பது மிகப்பெரிய ஆறுதல். நம் மாநிலத்து மருத்துவர்களின் தன்னலமற்ற சேவைகளால் தான் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. தங்கள் ஆற்றலையும் திறமையையும் நிரூபிக்க இவர்கள் 'நீட்' தேர்வையா எழுதினார்கள்? இல்லையே! மனிதநேயம் மிகுந்த சேவைகள் வாயிலாகவே தங்கள் தகுதியையும் தரத்தையும் நிரூ பித்துவிட்டார்கள் நம் மாநிலத்து மருத்துவர்கள்.
கரோனா வைரஸ் நம்மைத் தாக்கியதால் தெளிவாகி யுள்ள உண்மை எது? தகுதியைக் கணிக்கும் அளவு கோலாக 'நீட்' தேர்வு இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை என்ற உண்மைதான். இதைக் கைவிடமாட்டோம் என்று மத்திய அரசு இனிமேலும் பிடிவாதமாக இருந்தால் அதன் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். நம் நாட்டு மக்களின் சுகாதாரமும் உடல் ஆரோக்கியமும் குடும்ப நல அமைவும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
தேவையற்ற திருத்தம்
இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த நிலை யில் தேவையற்ற திருத்தம் ஒன்றைச் செய்துள்ளது. அதிகார வரம்பை மீறிய செயல் அது. இவர்களுடைய திருத்தத்தின்படி, இனிமேல் அரசு மருத்தவர்களுக்கு இடஒதுக்கீடு டிப்ளமோ எனப்படும் பட்டயப்படிப்புக்கு மட்டும் தானாம், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு இல்லையாம். அகில இந்திய அளவில் மத்திய அரசின் பங்காக உள்ள இடங்களிலும், மாநில அரசுகளின் பங்காக உள்ள இடங்களிலும் கதவடைப்பு என்கிறது இந்திய மருத்தவக் குழுவின் இந்தத் திருத்தம்.
குழப்பம் அதிகரித்துள்ளது
கடந்த ஆண்டு பட்டயப் படிப்பு இடங்கள் யாவும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புக்கான இடங்களாக மாற்றப்பட்டு குழப்பம் அதிகரித்து தலைச்சுற்ற வைத் துள்ளது. எதற்காக தேவையில்லாமல் இத்தனை மாற்றங்கள்? எல்லோருக்கும் புரியுமா? இளநிலை பட்டம் பெற்று அரசு ஊழியர்களாக கிராமப் புறங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் முதுநிலைப் படிப்பு வாய்ப்பை இதன் மூலம் இழக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய இனிமேல் இளம் மருத்துவர்களுக்கு ஆர்வம் எப்படி ஏற்படும்?
ஏராளமாக செலவு செய்து பயிற்சி நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ள செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகளால் மட்டுமே முடியும். செல்வம் கொழிக்கும் சீமான் வீட்டு மாணவர்களோடு போட்டியிட்டு முட்டி மோதி, வசதியற்ற இளம் மருத்துவர்கள் எப்படி தங்கள் தொழிலில் வளர்ச்சி காண முடியும்? தனியார் மருத்துவமனைகள், தனியார் சுகாதார துறைகள் - இவை வளரத்தானே இந்தக் குழப்பங்கள் வழி வகுக்கும்?
அகில இந்தியப் பங்கில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பூஜ்ஜியம் பல்வேறு மாநிலங்கள் தங்கள் மருத்துவக் கல்லூரி இடங்களிலிருந்து 50% இடங்களை ஏற்கெனவே வழங்கிவிட்ட பின்பும் இந்தக் கொடுமை. மத்திய அரசின் ஆளுமைக்குட்பட்ட சுகாதார, குடும்ப நல அமைச்சகம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த அநீதியை இழைத்து வந்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 2500 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இளநிலை பட்டதாரிகள், தங்கள் படிப்பைத் தொடர்ந்து முதுநிலைப் பட்டம் பெற முடியாத துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சீர்குலைத்து விட்டனர்
தேசிய மருத்துவக் குழு என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவான பிறகு தான் அரசு மருத்துவர் களுக்கு முதுநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கையில் இடஒதுக்கீடு மறுப்பு நிகழ்ந்துள்ளது. இதன்மூலம் மாநில அரசும் மத்திய அரசும் பொதுச் சுகாதார அமை வையே சீர்குலைத்து செயலிழக்கச் செய்து விட்டன என்றே கூறலாம்.
தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைகள் திறம்பட செயலாற்றி வந்துள்ளன. இவ்விரண்டு மாநிலங்களை யும் இடஒதுக்கீட்டு மறுப்பு பாதித்துள்ளன. கரோனா தொற்று போன்ற ஓர் ஆபத்து என்றேனும் மறுபடியும் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் ஆற்றல் நமக்கு இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. நாளைய உல கிற்கு எங்கே மருத்துவர்கள்? மெல்ல நலிந்தும் நசிந்தும் வரும் மத்தியச் சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நல அமைவிற்கு இன்னொரு பேரிடரைத் தாங்கும் வலிமை இனிவரும் காலத்தில் இருக்குமா?
அபாயகரமான பின் விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய எல்லா முடிவுகளையும் மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். பொது மக்களின் உடல் நலனுக்கு பாதிப்பு எல்லா வகையிலும் தடுக்கப்பட வேண்டும். இன்னொரு கரோனாவை நாடு தாங்காது. நம் நாடு இனிமேலும் விழித்துக் கொள்ளாமல் கிடந்தால் அதற்கான விலையைத் தர நேரிடும்.
.- நன்றி: 'த வயர்'
இணையதளப் பத்திரிகை, 31.5.2020
No comments:
Post a Comment