வடக்கே தேவை  மீண்டும் மண்டல் காற்று! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 2, 2020

வடக்கே தேவை  மீண்டும் மண்டல் காற்று!

மத்திய பிஜேபி அரசு சமூகநீதியில் மிகப் பெரிய துரோகத்தை இழைத்து வருகிறது - ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் 'தவம்' இருப்பதாகத் தெரிகிறது.


பிஜேபியின் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்பது இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பானதே என்பதைத் தெரிந்து கொண்டால் பிஜேபி ஆட்சியின் தலைமை இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படுவதற்கான மூக்கணாங்கயிறு எங்கே இருக்கிறது என்கிற சூட்சமத்தை சுலபத்தில் தெரிந்து கொள்ளலாம்.


மண்டல் குழுப் பரிந்துரையை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் செயல்படுத்த இருந்த நேரத்தில் இந்த பிஜேபி என்ன செய்தது? மக்கள் கவனத்தைத் திசை திருப்பிட ரத யாத்திரையை நடத்தியது என்பதை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா?


1990 ஆகஸ்டு 7இல் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கணக்கைத் திறந்தார்.


அந்தக் கால கட்டத்தில் எல்.கே. அத்வானி ரத யாத்திரையை நடத்தி அது ரத்த யாத்திரையாக உருவெடுத்து ஆங்காங்கே கலவரங்களையும் உண்டு பண்ணிய நிலையில் அந்த ர(த்)த யாத்திரை பீகாரில் நுழைந்தபோது முதல் அமைச்சர் லாலு பிரசாத் ரத யாத்திரைக்கு தடை விதித்தார்.


அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சொல்லி (அதற்காகத்தானே அந்தத் திட்டமும் கூட!) மத்தியில் வி.பி. சிங் தலைமையிலான ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த பிஜேபி தன் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்து ஒரு சமூகநீதி ஆட்சியை கவிழ்த்தது.


அப்பொழுது 'துக்ளக்'கில் திருவாளர் சோ. இராமசாமி என்ன எழுதினார் தெரியுமா?


"ஜாதி அரசியலில் வி.பி.சிங் இறங்கினார். அதை முறியடிக்க கோயிலைத் தழுவினார் அத்வானி" ('துக்ளக்' 15.1.1993) என்ற உண்மையை தன்னை அறியாமலேயே உடைத்துக் காட்டினாரே!


மண்டல் குழுப் பரிந்துரையின் ஒரு பகுதியை மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் அறிவித்ததற்காக மாணவர்களைத் தூண்டி விட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களும், பார்ப்பனர்களுமே,


ராஜீவ் கோஸ்வாமி என்ற ஒரு பார்ப்பன மாணவர் தீக்குளித்ததைப் பெரிதுபடுத்தினர். 'இண்டியா டூடே' (15.10.1990)  நிர்வாண ஆட்டம் போட்டது. ராஜீவ் கோஸ்வாமியின் படத்தை அட்டையில் போட்டு "மண்டல் குழு - காவு வாங்கியது - எரிகிறார் ராஜீவ் கோஸ்வாமி - ஜாதி மற்றும் வகுப்புவாத மோதல்கள்" என்று அட்டைப்பட கட்டுரையைத் தீட்டியது.


அதனைத் தொடர்ந்து டில்லி, ஹிஸ்ஸார், கிர்சா, சம்பாலா, லக்னோ, குவாலியர், கட்டா, காசியாபாத் முதலிய ஊர்களிலும் தீக்குளிப்பு நிகழ்ச்சிகள் அரங்கேறின. வன்முறைகளும் வெடித்தன.


தற்கொலையில் ஈடுபட்ட கோஸ்வாமியை இலட்சியவாதியாக உயர்த்திப் பிடித்தன. அந்த மாணவன் தீக்குளித்த இடத்திற்கு "குர்பான்சவுக்" (தியாகச் சதுக்கம் என்று பொருள்) என்று பெயர் சூட்டப்பட்டது - அந்தத் தெருவுக்கும் அதே பெயர் சூட்டப்பட்டது.


அதே இதழ் 'இண்டியா டுடே' (15.10.1990) இதழுக்கு அத்வானி என்ன பேட்டிகொடுத்தார்?


"எங்களோடு எதையும் பேசாமல் மண்டல் அறிக்கையை வி.பி.சிங் அரசு ஏற்றுக் கொண்டது" என்று சொன்னதன் பொருள் என்ன?


கடந்த பீகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலின்போதுகூட ஆர்.எஸ்.எஸின் அகில இந்திய தலைவர் திருவாளர் மோகன் பாகவத் என்ன கூறினார்?


இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசவில்லையா? அது தேர்தல் நேரமானதால் அந்தப் பேச்சு பிஜேபிக்கு எதிராக வெடிக்க ஆரம்பித்த நிலையில் மனுசன் 'பிளேட்'டைத் திருப்பிப் போடவில்லையா?


பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் ஊது குழலான 'துக்ளக்' என்னென்னவெல்லாம் எழுதியது...?


"பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை பிரதமருக்கு ஆதாயம்“ என்ற தலையங்கத்தில் என்ன எழுதியது 'துக்ளக்?' (15.8.1990).


"தேவிலாலை எதிர்ப்பதற்காக மண்டல் கமிஷன் அறிக்கையை ஒரு கேடயமாகப் பயன்படுத்த பிரதமர் வி.பி.சிங் முடிவு செய்து விட்டார். இதனால் நாட்டின் நிர்வாகத்திலும், எதிர்காலத்திலும் ஏற்படக் கூடிய விரும்பத்தகாத விளைவுகளைப் பற்றி அவர் சற்றும் கவலைப்படவில்லை. வி.பி.சிங் ஆட்சி கவிழுமா - எப்போது கவிழும் என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் கவிழ்வதற்கு முன்பாக நாட்டின் ஒருமைப்பாட்டைக் கவிழ்த்து விடுவார்களோ என்ற அச்சம் மட்டும் இருந்து வந்தது. இவர்கள் கவிழ்வதற்கு முன்பாக நாட்டின் நிர்வாகத்தைக் கவிழ்த்து விடுவார்களோ என்ற கவலையும் சேர்ந்திருக்கிறது" என்று சோவின் பேனா எழுதினாலும் அதுதான் இந்துத்துவா கூட்டத்தின் உள்ளார்ந்த உண்மையான முடிவு.


பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடம் அளிக்கப்பட்டால் நாட்டின் நிர்வாகம் கவிழ்ந்து விடுமாம் - இவற்றின் பின்னணியில் பார்த்தால் தான் - பிற்படுத்தப் பட்டோருக்கான மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு பூஜ்ஜியம் என்பதற்கான உண்மை சூட்சமம் புரியும்.


மண்டல் காற்றை மறுபடியும் அகில இந்திய அளவில் வீசச் செய்தால்தான் இந்த உயர்ஜாதி ஆதிக்கக்காரர்களின் வேரை வீழ்த்த முடியும்!


ஆம் தந்தை பெரியார் காற்று வடக்கேயும் வீச வேண்டும். இது காலத்தின் கட்டாயமே!


No comments:

Post a Comment