பெரியார் கேட்கும் கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 1, 2020

பெரியார் கேட்கும் கேள்வி!


(பல்வேறு மக்களின் கேள்விகளுக்கு - தனது பொது வாழ்வில் பொதுக் கூட்டங் களிலும், பேட்டிகளிலும், தனிப்பட்ட உரை யாடல்களிலும் அவை லட்சத்திற்கும் மேற் பட்டவையாக இருக்கும். அவைகளுக் கெல்லாம்  ‘கணினி' போல் பதில்கள் கிடைக் கும் உடனே!


திராவிடர் இயக்கப் பயிற்சிப் பாசறைகளில் தந்தை பெரியார் கொடுத்த அந்தப் பயிற்சிதான் இன்னும் அவ்வியக்கங்களின் அசையாத கொள்கை பலமாகவே உள்ளது!


ஒரு ஊரில் பார்ப்பனர் ஒருவர் பெரியார் பேசும்போது, எதிரில் அமர்ந்து சரமாரியாக கேள்விகளை எழுதி எழுதி மேடைக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார். எழுதிய வருடைய பேனா முள் உடைந்துவிட்டதால், அவர் எழுதிட முடியாமல் நிறுத்துகிறார்; இதைப் பார்த்துக் கொண்டே பதில் அளித்த தந்தை பெரியார், தனது சட்டைப் பையி லிருந்து பேனாவை எடுத்து அவரிடம் கொடுத்து கேள்வி எழுதி அனுப்பிட உதவி யதைக் கண்டு வெட்கமடைந்து, வணக்கம் தெரிவித்து, கூட்ட முடிவில், அவர் தந்தை பெரியாரிடம் மன்னிப்புக் கோரிய வரலாறு எல்லாம் உண்டு.


இவ்வளவு லட்சம் பதில்களை தந்த பெரியார், நம் மக்களை சிந்திக்க வைக்க தனது எழுத்திலும் சரி, பேச்சிலும் சரி, கேள்விகளை அடுக்கடுக்காகத் தொடுத்தே மக்களை அறியாமை இருட்டிலிருந்து அறிவு வெளிச்சத்திற்குக் கொணர்ந்தார். மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார் பெரியார்.  ஆனால், பெரியார் கேட்ட கேள்வி களுக்கு யாரும் பதில் சொல்லவில்லையே, ஏன்?


விடை தெரிந்ததுதானே!)


சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு - தாழ்வு கற்பிப்பது மாத்திர மல்லா மல், பொருளாதாரத்தில் உயர்வு - தாழ்வு கற்பிப்பதற்கும் மதம், மூலகாரணமாய் இருக்கிறது.


உண்மையில் நீங்கள் யோசித்துப் பாருங்கள்:


உடல் வலிக்கப் பாடுபட ஒரு ஜாதியும், நோகாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஒரு ஜாதியும் மதம் சிருஷ்டிக்கவில்லையா?


உலகச் செல்வமும், போக போக்கியமும், சரீரப் பாடுபடும் மக்களுக்கு இல்லாமல் போகவும், சோம்பேறி வாழ்க்கையாளருக் கும், சரீரப் பாடுபடாதவர்களுக்கும் போய்ச் சேர வும் காரணம் மதம் அல்லாமல் வேறு என்ன?


பாட்டாளிகள் தரித்திரர்களாகவும், வயிற்றுச் சோற்று அடிமையாகவும், கீழ் ஜாதியாராகவும், கீழ்ஜாதி மக்களாகவும் பாடுபடுவதும், ‘சரீர உழைப்பை தோஷம்' என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும், செல்வம் பெருக்கிக் கொள்ளவும், மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?


பகுத்தறிவற்ற பட்சி, மிருகம், பூச்சி, புழுக்கள் - தங்களுக்குள் ஜாதி பேதம், மேல் - கீழ் நிலை, அடிமைப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை இல்லாதிருக்கும்போது, பகுத் தறிவுள்ள மனிதனுக்குள் ஜாதி பேதம், உயர்வு - தாழ்வு, எஜமான் - அடிமை உணர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?


- ஆதாரம்: நூல் - சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?


- 'மணியோசை'


No comments:

Post a Comment