தடம் மாறியவை ரயில்கள் மட்டுமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

தடம் மாறியவை ரயில்கள் மட்டுமா


200 சிறப்பு ரயில்கள் ஓட்டியதில் 40 ரயில்களை தவறான ரயில் நிலையங்களில் கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள். அதிகப்படியான டிராஃபிக் இதற்கு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 20000 ரயில்களை இயக்கும் போது நடக்காத சம்பவங்கள் இப்போது 200 ரயில்களை இயக்கும்போது நடந்து கொண்டிருக்கின்றன. குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு இயங்குகிறோம் என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது ரயில்வே துறை. ரயில்களை எங்கள் முழு கவனத்துடன் தான் வேறு நிலையங்களுக்கு "டைவர்ட்" செய்கிறோம் என்று கதை சொல்கிறார்கள்.


ஒவ்வொரு வண்டிக்கும், அது என்னவானாலும் சரி, ஒரு குறியீட்டு எண் வழங்கப்பட்டு, ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் அது வரும் நேரம் முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டு, ஓட்டுநர் மற்றும் கார்டு இருவருடனும் வயர்லெஸ் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, ஒவ்வொரு டிவிஷன் கண்ட்ரோல் ஆபீசும் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து தான் இங்கே ஒரு ரயில் இயங்க முடியும். அப்படி இருக்க, பீகார் செல்லவேண்டிய ரயில் பெங்களூருக்கு வந்தது எப்படி? உ.பி. பீகார் மாநிலங்களுக்குத்தான் அதிக ஷ்ராமிக் ரயில்கள் தேவைப்பட்டன. மும்பை, பெங்களூரு, தில்லி என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சரியான திட்டமிடல் இல்லாமல்தான், இந்த ரயில்களை ஒரே நேரத்தில் இயக்கி இருக்கிறார்கள்.


சென்றடையும் மாநிலங்களில் போதிய குவாரண்டைன் வசதிகள் இருக்கின்றனவா, அந்த டிவிசன்கள் அதிக எண்ணிக்கையிலான ரயில்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்குத் திறன் படைத்தனவா என்பதை கணிக்காமல், வழக்கமான மோடி அரசு ‘எட்டு மணி முடிவு’ போல இந்த ரயில்கள் இயக்கப்பட்டதுதான் இந்தக் குழப்பங்களுக்கு காரணம். இதுவரை ரயில்களில் 9 பேர் உணவு, தண்ணீர் இன்றி இறந்திருக்கிறார்கள் என்று அரசின் புள்ளி விபரம் சொல்கிறது.


24 மணி நேரத்தில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரயிலை 48 மணி நேரம் டைவர்ட் செய்து அனுப்பினால், பயணிகள் உணவு தண்ணீருக்கு யார் பொறுப்பு என்று ரயில்வேக்கு தெரியாதா?


உயர் அதிகாரிகளுக்கு ரயில்வேயில் "இன்ஸ்பெக்ஷன் கார்" எனப்படும் தனி சலூன் ரயில் கோச்சுகள் வழங்கப்படுவது உண்டு. காலனிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் எச்சம் என்று தான் நான் இதைச் சொல்வேன். இந்த கோச் எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் பாஸ்ட் ரயில்களுடன் இணைக்கப்பட்டு "உய்யர்" அதிகாரி செல்ல விரும்பும் ஊர்களுக்கு செல்லும். டிராக் மேற்பார்வை, ரயில் நிலைய மேற்பார்வை என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், காதுகுத்து, கல்யாணம், கருமாதி என்று சொந்த மித்ரபந்துக்களின் நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் இஷ்டத்துக்கு அதை அதிகாரிகள் பயன்படுத்துவது உண்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இவ்வாறு இணைக்கப்பட்ட கார்கள் ஒன்று கூட தடம் மாறிப் போனதில்லை. அப்படி என்றால் 40 ரயில்கள் இங்கே டைவர்ஷன் ஆனது தற்செயல், அல்லது அலுவல் கட்டாயம் நிமித்தம் என்று எப்படி ஒப்புக்கொள்வது?


நிலையங்களில் இந்த இன்ஸ்பெக்ஷன் கோச் வந்து நிற்கும் போது நடக்கும் கூத்துகள் அதை விட கேவலம். ஒவ்வொரு டிவிஷனிலும் இந்த அதிகாரிகளை வரவேற்க புரோட்டோகால் இன்ஸ்பெக்டர் என்ற தொண்டரடிகள் உண்டு. அவர்கள் பணி, அதிகாலை இந்த கோச்கள் வந்து நிற்கும் போதே குறிப்பிட்ட ஸ்டேஷனில் கையில் காபி ஃ பிளாஸ்க், அன்றைய பேப்பர் சகிதம் ஆஜராவதில் தொடங்கிவிடும். இதில் சில ஆபீசர் மனைவிகள் அந்த பேப்பர் இல்லையா, இந்த சுக்கு டீ இல்லையா என்று ராவடி செய்வதுண்டு. ஹிண்டு பேப்பர் இருந்தால் தான் தரையில் காலடி வைப்பேன் என்று சண்டித்தனம் செய்த ஆபீசர் அம்மாவைக் கூடப் பார்த்தாயிற்று. இப்படி தன் அதிகாரிகளுக்கு சாமரம் வீசும் நிர்வாகம், ஏற்கனவே உண்ண உணவின்றி நொந்து வண்டியில் ஏறும் எளியவனை டேக் டைவர்ஷன், டேக் டைவர்ஷன் என்று சொல்லி ஊர் ஊராய் உணவின்றி, நீரின்றி, சுற்ற விட்டதன் விளைவு தான், பச்சிளம் குழந்தை இறந்து கிடக்கும் தாயின் சேலையை பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை அரங்கேற்றி இருக்கிறது.



அதையும் நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். நாசிக்களின் மரண ரயில்களில் செல்பவர்களுக்குக் கூட தனக்கு மரணம் நிச்சயம் என்ற உணர்வு வந்திருக்கும். ஆனால் அந்த கருப்பு வெள்ளை போர்வையால் மூடப்பட்டு பிளாட்பாரத்தில் செத்துக் கிடப்பவளுக்கு கட்டாயம் வாழும் ஆசை இருந்திருக்கும், நம்பிக்கை இருந்திருக்கும். அந்த நம்பிக்கையைக் கொன்ற நாம் ஒவ்வொருவரும் குற்றவாளி தான். குழந்தை விளையாடும் காணொளி மனதை விட்டு அகல மறுக்கிறது. டிமானடைசேஷன் தொடங்கி, ஜி.எஸ்.டி, லாக்டவுன் என்று இந்த அரசு பிடுங்கிக் கொண்டிருப்பது எல்லாமே தேவையற்ற ஆணிகள் தான். எதையும் முன்கூட்டி சரிவர திட்டமிடாமல் அரசு செய்யும் அரைவேக்காட்டு வேலைகளுக்கு, மக்கள் அநியாயமாக பலிகடா ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். ரயில்வே அதற்கு தாளம் போட்டுக்கொண்டு இருக்கிறது.


இந்த கோச்களை குவாரண்டைன் வார்டுகளாக மாற்றி, மீண்டும் அவற்றை கோச்சுகளாக மாற்றியதில் ரயில்வே நிர்வாகம் அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எவ்வளவு லாபம் பார்த்தார்கள் என்று அவர்கள் மனசாட்சியை கேட்கட்டும். இதில் வீணாகிப் போனது இப்போது செத்து விழும் புலம் பெயர் தொழிலாளிகளின் வரிப்பணமும் தான் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இந்த நாடும் நாட்டு மக்களும்..... இதற்கு மேல் சொல்ல வேறெதுவும் தோன்றவில்லை.


- நிவேதிதா லூயிஸ்


No comments:

Post a Comment