பியாக் ஆலாபனை
இமயமலை தென்குமரி எல்லை நீண்ட
இயற்கை வளம் செறிந்திட்ட இந்துஸ்தானம்
அமைவுற்ற முப்பது கோடிப்பேர் ஈன்றும்
அடிமையுற்ற காரணத்தை எண்ணிப் பார்த்தால்
பியாக் ஏகம்
அழிவைச் செய்யும் வேதப் பேய்கள்
அவரது சிந்தைக் கெதிரில் தோன்றும்
விழியால் அவைகள் வீழச் சுருக் அவ்
வீரர் ராமசாமிப் பெரியார் வாழ்க! வாழ்க!
வாழ்க!!!
பின்னெழுந்து பிழைப்படைந்து வீரங்காட்டிப்
பிறநாடு முன்னேறக் காணுங்காலை,
முன்னெழுந்த மக்களிங்கு முன்னேற்றத்தின்
முனை கருகிப் போவதென்ன எனச்சிந்தித்தார்.
மூடக் கொள்கை மொய்க்கக் கண்டார்
முழக்குகின்றார் அறிவுச் சங்கம்
ஓடச் செய்தார் அவிவேகத்தை
ஓதும் ராமசாமிப் பெரியார் வாழ்க! வாழ்க!
வாழ்க!!!
தேசத்திற் பிறந்தவரில் அறுகோடிப்பேர்
தீண்டாமைப் பூதத்தின் வாயில் நைத்தார்.
“கூசுகின்ற வீச்சினிலே விடுதலைபார்
விழுங்கும் பூதம் சாகும் விதம்பார்” என்றார்
வீரவாக்குக் கண்டீர் - வைக்கம்
வீரத்தமிழர் தோளை வாழ்த்தீர்
சாரத்தமிழில் அவரைப் பாடீர்
தகுமிராமசாமிப் பெரியார் வாழ்க! வாழ்க!
வாழ்க!!!
பெண் முழுதும் சிறப்படைதல் வேண்டுமென்பார்
பிறப்பிடத்தைப் பேதையென்று சொல்லி - இந்த
மண் முழுதும் எதிர்த்தாலும் பெரிதென்றெண்ணார்
வாழிய பெண்ணுலகமென வாழ்த்துகின்றார்
வயதில், அறிவில், முதியோர் - நாட்டில்
வாய்மைப் போருக் கென்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை!
ஓங்கும் ராமசாமிப் பெரியார் வாழ்க! வாழ்க!
வாழ்க!
நீதமற்ற கொள்கைகளை இனிக்கப் பேசி
நிகழ்த்திவந்த தவைர்களால் என்ன கண்டோம்!
காதனிக்கப் பேசியதோர் நரியாராலே
காகத்தின் அப்பந்தான் பறிபோயிற்று
கதையினில் வருமோர் “கைலை” வேண்டல்
கையால்தேடும் “நொய்” நன்றென்பார்
எதிர்த்தவர்பால் அன்பும் கொண்டார்
இனிது ராமசாமிப் பெரியார் வாழ்க! வாழ்க!
வாழ்க!!!
தன்னுழைப்பில் நம்பிக்கை செத்ததிங்கே
சாமிசெயல் என்று சொலும் சோம்பலுண்டு
பன்னாளும் பேதங்கள்! முற்ற ம்மூடப்
பழக்க வழக்கங்களெல்லாம் எரித்துத் தள்ளிப்
பயனுற நாட்டை விடுதலை நோக்கிப்
படுதுயர் நீங்க ஒன்றாய்க் கூட்டிச்
சயமுற வைக்கும் சுயமரியாதைத்
தலைவர் ராமசாமிப் பெரியார் வாழ்க! வாழ்க!
வாழ்க!!
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
No comments:
Post a Comment