நாராயணா நமக்கு ஏன் இந்த வம்பு?
பி.பி.மண்டலை, வீரமணி சந்தித்ததே இல்லை என்று சொன்னாராமே ஒருவர்?
30.06.1979 அன்று சென்னை வந்த மண்டல் குழுவினரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார் தமிழர் தலைவர் வீரமணி.
அன்று மாலை சென்னை பெரியார் திடலில் தென்னக இரயில்வே பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் வரவேற்பு மற்றும் கோரிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட,அப்போது திராவிடர் கழகப் பொதுச்செயலாளராக இருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,
"நீங்கள் தரப்போகும் அறிக்கை குமுறிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் நல்வாழ்வுக்கு வழி செய்யப் போகிறது என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உண்டு. துணிந்து செல்லுங்கள்! உங்களுக்குப் பின்னாலே கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அணிவகுத்து நிற்கிறது! என்றும் நிற்கும்!
நீங்கள் தரப்போகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கையை, இந்த முறையும் அரசின் அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்க நாங்கள் விடமாட்டோம்! விடமாட்டோம்!’’ என்று மண்டல் குழுவினரைப் பார்த்து குறிப்பிட்டார்.
பின் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவரான பி.பி.மண்டல் உரையாற்றியபோது, "அதிகார வர்க்கம், இந்த அறிக்கையைச் செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போடும். அதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் தோன்றிய நீங்கள், அந்த எண்ணவோட்டத்தை உருவாக்க வேண்டிய சக்தியை பெற்றிருக்கிறீர்கள்.
காகாகலேல்கர் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு விட்டார்கள். அதேபோல், நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையையும் செயல்படுத்துவர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உயர்ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த அறிக்கையை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று தலைவர் அவர்களைப் பார்த்துக் குறிப்பிட்டார்.
அதற்குப் பின்னால் மண்டல் அறிக்கையை அமல்படுத்த எத்தனை எத்தனை மாநாடுகளை, பொதுக்கூட்டங்களை, கருத்தரங்குகளை, ஆர்ப்பாட்டங்களைத் திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது என்ற வரலாறு தெரியுமா இந்த நாறவாய் நாராயணன்களுக்கு?
சென்னையிலே ஒரு சுவையான உரை:
80களில் பெரியார் திடலிலே ஒரு நிகழ்ச்சி! இளைஞர்களால் நிரம்பி வழிந்தது மன்றம்!
வீரமணி பேசுகிறார்:
"இங்கே இளைஞர்கள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். இதில் காதல் வயப்பட்டவர்களும் இருப்பீர்கள். உங்கள் காதலரைச் சந்திக்கும் போது கூட, உங்களுக்கு மண்டல் நினைவிற்கு வர வேண்டும். "மண்டலைத் தெரியுமா?" என்று கேட்க வேண்டும்! மண்டல் கமிஷன் என்ன சொல்கிறது என்பதை விளக்க வேண்டும்! அதைப்பற்றி சிறிது நேரமாவது உரையாட வேண்டும்!" என்றார். இளைஞர்களின் கைதட்டல் ஒலியில், அரங்கம் அதிர்ந்த அந்தக் காட்சி, இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
வரலாறு தெரியாமல் நாராயணன்கள், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என உளறிக்கொட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்!
-கி.தளபதிராஜ்
No comments:
Post a Comment