தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 9 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 9, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 9

பெரியார் வழியில் பாரதிதாசன் - எம்.ஆர்.ராதா



தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!


சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...


- ஆசிரியர், 'விடுதலை'


 


இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு


இப்படிப் பெரியார் 1960களில் மத - கடவுள் மறுப்பு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வந்த போது தமிழக அர சியலில் சில பரபரப்பான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. 1963இல் தமிழக முதல்வர் காமராஜர் அந்தப் பதவியிலிருந்து விலகி அகில இந்திய காங்கிரசின் தலைவ ரானார், இங்கே பக்தவத்சலம் முதல்வரானார். இவரது காலத்தில்தான் அந்த எழுச்சிகரமான மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்தது. 1938 முதல் இந்தியை எதிர்த்து வந்த பெரியார், 1950களில் ஆண்டு தோறும் அதற்காக ஆகஸ்டு போராட்டம் நடத்திய பெரியார் இப்போது அரசிய லமைப்புச் சட்ட விதிப்படி ஏக இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழியான போது, அதை எதிர்த்து மாணவர் போராட்டம் வெடித்த போது என்ன செய்தார்? வினோதமாக நடந்து கொண்டார்; போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்; அதை ஒடுக்க பக்தவத்சலம் அரசு எடுத்த நடவடிக்கைகளை ஆதரித்தார். “இந்தி எதிர்ப்பு என்ற பேரால் 1965இல் நடந்த கலவரங்களை ஒடுக்க பெரியார் ஒருவரே முன்வந்தார்” என்று பெரு மையோடு குறிப்பிட்டிருக்கிறார் அவரின் பேச்சுக்கள்- எழுத்துக்களைத் தொகுத்துள்ள வே. ஆனைமுத்து. காங்கிரஸ் ஆட்சியை விடாது ஆதரிப்பது எனும் பெரியாரின் முடிவு இப்படியொரு தவறான நிலைப் பாட்டில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தியது. தமிழகத் தின் மாணவர்களையும், வாலிபர்களையும் இவரின் இந்த நிலைப்பாடு அண்ணாவின் பின்னால் அணிவகுக்க வைத்தது.


தனது காங்கிரஸ் ஆதரவுப் போக்கு பிராமணி யத்திற்கே வசதி செய்து தந்தது என்பதைப் பெரியாரும் உணரத் தலைப்பட்டார். தனது நிலைபற்றிய சுயவிமர்சன கணிப்பைத் தனது பிறந்தநாள் செய்தியாக 1965இல் வெளியிட்டார். அது - “இந்தியாவிற்குச் சமீபத்தில் வந்து போன ஒரு ரஷ்யப் பிரமுகரை ஒரு பார்ப்பனர் சங்கராச்சாரியாரிடம் அழைத்துப் போனா ராம்! அந்த ரஷ்யர் ‘உங்கள் நாட்டில் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் உங்கள் சம்பிரதாயத்திற்கும் விரோதமாகப் பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டா ராம். அதற்குச் சங்கராச்சாரியார் ‘அது இன்றைக்கு 17 வருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. ஆனால் இந்த 17 வருடமாக எங்களுக்கு அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதன் பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் இன்று அதனால் எங்களுக்கு எவ்விதத் தொந்தரவும் இல்லை’ என்று சொன்னாராம். இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன?’ என்று அந்த ரஷ்யர் என்னிடம் வந்து கேட்டார். அதற்கு நான் சொன்ன பதில் - "அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான், எப்படியென்றால், நம் நாட்டிற்குச் சுதந்திரம் வந்து 17 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே யாகும்...... இது மாத்திரமில்லாமல் நானும் இப்படிப்பட்ட பார்ப்பன சுதந்திரத்தை எதிர்க்கும் வேலையை விட்டு விட்டு ராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றி விட்டோம் என்ற ஆணவத்திலும், காமராசரிடத்தில் வைத்த அளவுக்கு மீறிய நம்பிக்கையாலும் ‘சுதந் திரத்தை’, காங்கிரசை, அரசாங்கத்தை ஆதரிக்கும் பணியில் தீவிரமாக நிபந்தனையற்றுப் பாடுபட்டு வந்ததாலும், காமராசர் ஆட்சியை விட்டுப் போய்விட்ட தாலும், அதற்குப் பிறகு ‘அசல் பார்ப்பனிய’ ஆட்சியே தங்குதடையின்றி நடந்து வருவதாலும், இதன் பயனாய்ச் சமுதாயத் துறையிலும், மதத்துறையிலும், உத்தியோகத் துறையிலும், கல்வித் துறையிலும் யாதொரு குறைவும் இல்லாமல் மேலே போகும்படியான நிலையில் பார்ப்பனர்கள் இருப்பதாலும் சங்கராச் சாரியார் அவ்விதம் கூறி இருக்கிறார்’’


பெரியாரின் நீண்ட நெடிய இயக்கத்திற்குப் பிறகும் தமிழகத்தில் பிராமணியம் செல்வாக்கோடுதான் இருந் தது. 1965இன் நிகரக் கணக்கு இதுதான். சுயமரியாதைத் திருமணத்தைக் கூடச் சட்டபூர்வமாக்கவில்லை காங் கிரஸ் அரசு. பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக் கீட்டில் முன்னேற்றம் செய்யவில்லை. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவது பற்றி கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.


நாத்திகப் பிரச்சாரம், இந்தியை எதிர்த்த மாணவர் போராட்டத்திற்கு எதிர்ப்பு, காங்கிரஸ் ஆட்சிக்கு முழு மூச்சான ஆதரவு, பிராமணியத்திற்கு எதிரான தீவிரப் போராட்டங்களை 1960களில் அதிகம் நடத்தாதது. இவை எல்லாம் சேர்ந்து பெரியார் இயக்கத்தின் பாலிருந்த கவர்ச்சியை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் மத்தியில் வெகுவாகக் குறைத்தது. அதன் ஆதரவு வட்டம் சுருங்கத் துவங்கியது. இதற்கு ஈடாக காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து பிராமணிய எதிர்ப்பு செயல்பாடுகளைப் பெறவும் இல்லை இவரின் இயக்கம். இதுவெல்லாம் சேர்ந்துதான் பிராமணியத்தை அகமகிழ வைத்தன. ஆனால் அதன் மகிழ்ச்சி முழுமையானது அல்ல. தி.க.விலிருந்து தோன்றிய தி.மு.க. அரசியல் ரீதியாக வளர்ந்து வந்தது. அதை ராஜாஜியும் ஆதரித்து வந்தார். 1967இல் அரியணை ஏறிய அந்தக் கட்சி காங்கிரஸ் ஆட்சி செய்யத் தவறிய சில பிராமணிய எதிர்ப்புச் செயல்களைச் செய்தது. இப்போது பெரியார் சிரித்தார். பிராமணியவாதிகள் வெகுண்டார்கள். வரலாறு முன்னோக்கியே பயணித் தது.


பெரியார் வழியில்


பாரதிதாசன் - எம்.ஆர்.ராதா


தி.க.விலிருந்து தி.மு.க. உதயமான பிறகும் பிரா மணிய எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். திராவிட இயக்கம் தந்த மகத்தான கவிஞர் அவர். சமூக சீர்திருத்தச் சிந்தனைகளை கம்பீரமான இலக்கிய அழகோடு தரமுடியும் என்பதை நிரூபித்தவர். பொதுவாகப் பெரியார் வழியில்தான் நடைபோட்டார். அப்போதும் பாரதியார் பற்றிய கணிப்பில் அவரிட மிருந்து மாறுபடவும் அவர் தயங்கவில்லை. தனது பெயரைக் கடைசிவரை மாற்றிக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, பிராமணர் குலத்தில் பிறந்திருந் தாலும் பிராமணிய எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் பாரதியார் என்கிற கணிப்பை விடாது கொண்டிருந்தார். இவரின் கவிதைகள் 1950-60 களில் ஒரு பெரும் எழுச்சியைத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கின, “பாரதிதாசன் பரம்பரை” ஒன்றைப் பெற்றெடுத்தன.


“சதுர்வர்ஸம் வேதன் பெற்றான்/சாற்றும் பஞ்சமர்தம்மை எது பெற்றுப் போற்றுதடி - சகியே” என்று கேட்டார். “குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற் கொஞ்சமும் தீட்டிலையோ - நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் அந்த/ வகையிலும் கூட்டிலையோ” என்று நறுக்கென்று குத்தும் வகையில் தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்தார்.


விதவை மணம், பெண் கல்வி போன்ற மாதர் விடுதலைச் சிந்தனைகளை மட்டுமல்லாது, கடவுள் மறுப்புச் சிந்தனைகளையும் அருமையான கவிதை களாக ஆக்கித் தந்தவர் பாவேந்தர். மத மவுடீகத் தனங்களையும் புரட்டிப் புரட்டி எடுத்திருக்கிறார்.


1950களின் “விடுதலை” இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் நடிகவேள் எம்.ஆர்.ராதா முழுக்க முழுக்க பெரியாரின் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண் டிருந்ததை உணர முடிகிறது. திக.வின் முக்கியமான நிகழ்வுகளின் போதெல்லாம் அவரின் நாடகங்கள் மற்றும் உரைகள் இடம் பெற்றிருந்தன. வால்மீகி ராமா யணத்தை விமர்சிக்கும் இவருடைய நாடகத்தைத் தடை செய்வதற்காகவே மாநில காங்கிரஸ் அரசு அநியாயமானதொரு சட்டத்தைக் கொண்டு வந்தது. நீதிமன்றம் சென்று போராடியும், புதுப்புதுப் பெயர் களிலும் நாடகம் போட்டார்.


“ஒரு அவதாரத்தின் ஊழலைச் சொல்லும் போதே இவ்வளவு எதிர்ப்பா? ஏன் பத்து அவதாரத்தின் ஊழல்களையும் ஒரே நாடகத்தில் காட்டக் கூடாது?” - என்று எண்ணியே “தசாவதாரம்” நாடகத்தை உருவாக்கினார். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். ராமாயணம் 200 நாட்களும், தசாவதாரம் 125 நாட்களும் ஓடி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.


“ரத்தக் கண்ணீ ர்” நாடகம் பெரும் புகழ் பெற்றது. பிரதான கதைப் போக்கைப் பராமரித்துக் கொண்டு அவ்வப்பொழுது எழுகிற அரசியல் - சமூகப் பிரச்ச னைகளுக்கு எதிர் வினையாற்றுவார். அதனாலேயே ஆர்வத்தோடு ரசிகர்கள் நாடகம் பார்க்கப் போனார் கள். “ரத்தக் கண்ணீர் “ சினிமாவாகவும் வந்தது. இதில் மட்டுமல்லாது, பல படங்களில் வில்லனாக வந்ததும், வில்லனாகவே சில சீர்திருத்த - பகுத்தறிவுச் சிந்தனை களைத் தந்ததும் எதிர்மறை விளைவை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டிருந்தது. இதனால் இவரின் திரைப் படங்களைக் காட்டிலும் நாடகங்களில் பிராம ணிய எதிர்ப்புச் சிந்தனைகள் பளிச்சென்று வெளிப்பட்டு, சட்டென்று மக்களைச் சென்றடைந்தன எனலாம்.


.- தொடரும்


No comments:

Post a Comment