மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்


"கணவனை இழந்த கைம்பெண், எத்தகைய இரங்கத்தக்க கொடுமைகளுக்கு உள்ளாகிறாளோ, அதுபோன்ற கொடுமைகளுக்கு மனைவியை இழந்த ஆண் மகனும் இலக்காகுமாறு  குமுகாயச் சூழ்நிலையும், சட்ட கட்டாயமும் உண்டாக்கப்பட்டாலொழிய, வைதிக இந்துக்களின் மங்கிய பார்வை செம்மையாகாது" என்று வைதிக இந்துக்களின் மனநிலை குறித்து 1929இல் திருநெல்வேலியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் உரையாற்றியவர்.


1936ஆம் ஆண்டு இவர் எழுதிய "தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்" என்கிற நாவல், தேவதாசிகளின் பரிதாப வாழ்வையும், சொந்த அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்று ஆவணம். இதைப்பற்றி "புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்" என்கிறார் அம்மையார்.


மூவலூரில் தேவதாசி குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து கொண்டிருந்த தங்கம் என்னும் 20 ஆண்டகவை இளம்பெண்ணை இராமாமிர்தம் அணுகி, தாசி குலத்து ஒழுக்கக்கேடான வாழ்க்கையைத் துறந்து முறையான இல்லறத்தில்  அப்பெண் ஈடுபட வேண்டும் என்றும், ஒரு பண்புள்ள கணவன் அப்பெண்ணுக்குக் கிடைக்க தான் உதவுவதாகவும், சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளின் பயனாக நூற்றுக்கணக்கான தேவதாசிக் குடும்பப்பெண்கள் இல்வாழ்வை ஏற்றுள்ளனர் என்று அறிவுறுத்தியதால், அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர் மீது வழக்குப் பதிந்து உள்ளதாக  15.09.1929 தேதியிட்ட "ரிவோல்ட்" இதழில் செய்தி கிடைக்கிறது.


அம்மையார் மறைந்த 27.06.1962 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ‘முரசொலி’ இதழில்,


"வீரத்தாயை இழந்தோம்


பால் நுரைபோல் தலை


தும்பை மலர் போல் உடை!


கம்பீர நடை!


கனல் தெறிக்கும் பேச்சு!


அனல் பறக்கும் வாதத்திறன்!


அநீதியைச் சுட்டெரிக்க சுழலுகின்ற கண்கள்!


அடிமை விலங்கு தகர்த்தெறிய


ஆர்ப்பரிக்கும் உள்ளம்!


ஓயாத பணி! ஒழியாத அலைச்சல்!"


என்று பாராட்டினார்.                           


(தகவல்: இறைவி)


No comments:

Post a Comment