ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி 1: 'பணக்காரனுக்கு அசெம்பிளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது - இதைச் செய்தால் லஞ்சமாகுமா?’ என்று சத்தியமூர்த்தி அய்யர் 1943-லேயே லஞ்சம் பெற்றதற்கு விளக்கமளித்துள்ளாரே! இந்தக் காலத்தில் சிலர் சிஸ்டம் கெட்டுவிட்டதாகச் சொல்கிறார்களே?


- குடந்தை க.குருசாமி, கும்பகோணம்


பதில்: சிறீமான் சத்தியமூர்த்தி அய்யர்வாள் கூறிய முக்கிய வார்த்தையை விட்டுட்டீங்களே...! ‘மனுஷன் வாயு பக்ஷணமா சாப்பிட முடியும்?’ என்று எவ்வளவு பரிதாபக் குரலோடு, லஞ்சம்... அல்ல, அல்ல.. நோ... நோ... ‘தட்சணை’ வாங்கியதை நியாயப்படுத்தினார்.


இந்த சிஸ்டம் கெட்டதே அவாள் கலாச்சாரத்தினால்தானே - பிரார்த்தனை என்பதே கடவுளுக்குத் தரும் லஞ்சம்தானே! லஞ்சம் ஆரம்பமானது அரண்மனையிலிருந்து அல்ல. பூஜை அறையிலிருந்து! அதனால்தான் அதை ஒழிப்பதில் இவ்வளவு தொல்லையோ தொல்லை! புரிந்து கொள்வோம்!


கேள்வி 2: தமிழ்நாட்டில் தமிழனுக்கு மட்டும்.. ‘ஒரு தமிழனுக்கு விழுந்த அடி, இன்னொரு தமிழனுக்கு வலிப்பதில்லையே... ஏன்?


- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: காரணம், அவர் தமிழனாகவும் இல்லை; மனிதனாகவும் இல்லை. மேலே மற்றவர் ஏறி விடாமல் தடுக்கும் சிலர், நண்டு குணம் கொண்ட விலங்காண்டியாய் இருப்பதால்தான் இந்த வேதனையான நிலை! சொரணை கெட்டுப் போச்சு! எப்படி வலிக்கும்?


கேள்வி 3: விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ஊர்களில் நீதிமன்ற வளாகத்தில், கரோனா தொற்று தடுப்பு மருத்துவ முகாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்றுள்ளது. இதில், நீதிபதிகளும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதே?           - மன்னை சித்து, மன்னார்குடி-1


பதில்: அந்த நீதிபதிகள் பற்றி தலைமை நீதிபதிகள் மற்றவர்களுக்கு உரிய புகார் அனுப்பிடவேண்டும். குறுக்கு வழியில் புரமோஷன் வரும் என்ற நப்பாசையோ, இப்படி சட்ட விரோதமாக நடக்க வைத்துள்ளது?


கேள்வி 4: பார்ப்பனச் சக்திகள் அனைத்தும், மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வர எத்தகைய சதி வேலைகளில் ஈடுபட்டார்களோ, அதை விட பல மடங்கு கடும் முயற்சியை மாநிலக் கட்சியான தி.மு.கழகம் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க மேற்கொண்டு வருகிறார்களே?


     - ச. செல்வம், பஹ்ரைன் 


பதில்: இதை இன உணர்வும், மான உணர்வும் உள்ள அனைத்து திராவிட சமுதாய மக்களும் உணர்ந்து, ஓர் அணியில் இப்போதிருந்தே திரள வேண்டும்!


கேள்வி 5: இந்தப் பொது முடக்கத்தால் சரிந்து போன பொருளாதாரம், மீண்டும் எழுமா?     - அய். லூயிஸ் ராஜ், கிருஷ்ணகிரி


பதில்: விழுவது முக்கியமல்ல; எழுவதே முக்கியம்! உடனடியாக முடியா விட்டாலும் சரியான பொருளாதார அறிஞர்களின் வழிகாட்டலில், தேவையான அணுகுமுறையை - முறையாகக் கையாண்டாலே மீள முடியும். மனித அறிவால் எந்த நெருக்கடியையும் வெல்ல முடியும் என்பது வரலாறு!


கேள்வி 6: கொரோனாவிலும் ஜாதியச் சண்டை, படுகொலை என்பதன் மூலம், கொரோனாவைக் காட்டிலும் ஜாதிக்கு முக்கியத்துவம் தருகின்றனர் மக்கள் என்பதாகத் தெரிகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?     - யாழ் திலீபன், வேப்பிலைபட்டி


பதில்: பெரியார் கொள்கை பரவுதலின் தேவை இன்னமும் - எந்தக் கட்டத்திலும் தேவை என்பதை அவை உணர்த்துகின்றன.


கேள்வி 7: இந்திய அரசு, வல்லுநர்கள் பேச்சைக் கேட்கவில்லை; தமிழக அரசு, சுகாதாரத் துறை அதிகாரிகள் பேச்சைக் கேட்கவில்லை; அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சைக் கேட்கவில்லை... என்ன தான் நடக்கிறது?


- தென்றல், பெரம்பூர்


பதில்: ‘என்னதான் நடக்கும்; நடக்கட்டுமே!’ என்ற ஒரு பாட்டைப் பாடுகிறார்கள். பரவாயில்லை... கைதட்டுவோம்! பால்கனியில் விளக்கேற்றுவோம்! யோகா செய்வோம்!


கேள்வி 8: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணவன் ஒருவன், தன் மனைவியை வைத்துச் சீட்டு விளையாடித் தோற்று, அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஒப்படைத்த கொடுமையான செய்தி ஊடகங்களில் வந்திருக்கிறதே?


-இளையராசா, பிலாக்குறிச்சி


பதில்: மஹாபாரதம் போன்ற சூதாட்டத்தினை நியாயப்படுத்தும் கதைகளால் ஏற்பட்ட கலாச்சாரத்தின் விளைவு இது. வேதனைப் படவேண்டும். அரசு தண்டிக்க வேண்டும்!


கேள்வி 9: தந்தை பெரியார், திராவிட இயக்கம் தொடர்பான தொடர் அவதூறுகளுக்குப் பதில் சொல்வதிலேயே நமது நேரம் விரயமாகின்றதே அய்யா! இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? புறந்தள்ள வேண்டுமா?


- ச.சிவக்குமார், நாகப்பட்டினம்


பதில்: பெரிதும் புறந்தள்ளுவதே புத்திசாலித்தனம். அலட்சியப்படுத்தி நமது முக்கியப் பிரச்சினைகளில் கவனத்தைச் செலுத்துவதே முக்கியம்!


கேள்வி 10: திருவண்ணாமலை மாவட்டத்தில், துக்கம் விசாரிக்கச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவரை, ஜாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில், புதைப்பதற்கான குழி தோண்டச் சொல்லியிருப்பதாக செய்திகள் வருகின்றனவே?


- முகிலா, குரோம்பேட்டை


பதில்: தி.மு.க. எம்.பி.க்களை கைது செய்யக் காட்டும் அவசரத்தை, தமிழக அரசின் காவல்துறை இதில் அல்லவா - தீண்டாமை வன்கொடுமை ஒழிப்புச் சட்டப்படி காட்டவேண்டும்? செய்யுமா?


No comments:

Post a Comment