விடுதலை 86ஆம் ஆண்டு பிறந்தநாளில்  காணொலிமூலம் 'விடுதலை' ஆசிரியர் உரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 2, 2020

விடுதலை 86ஆம் ஆண்டு பிறந்தநாளில்  காணொலிமூலம் 'விடுதலை' ஆசிரியர் உரையாடல்

 'எது தேவை? அடிமை விடுதலையா, சுதந்திரமான விடுதலையா?'


*கலி. பூங்குன்றன்



"விடுதலை"யின் 86ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 58 ஆண்டு காலமாக அதன் ஆசிரியராக இருக்கும் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று (1-6-2020) மாலை சென்னை யிலிருந்து இயக்கத் தோழர்களையும் அபிமானி களையும், கடல் கடந்த நாட்டின் 'விடுதலை'த் தேனீக் களையும் காணொலி மூலம் சந்தித்துக் கருத்து உரை யாடினார்.


'விடுதலை'ப் பொறுப்பாசிரியர் கலி. பூங்குன்றன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.


'விடுதலை' ஆசிரியர் அவர்கள்  அனைவருக்கும் 'விடுதலை' பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தொடக்கமாகக் கூறி தன் கருத்துரையைத் தொடங்கினார்.


இது ஒரு 'நன்றித் திருவிழா' என்று தொடங்கினார். கழகத் தலைவர் அப்படிக் கூறியதற்கு ஆழமான பொருளும் நியாயமான காரணங்களும் ஏராளம் உண்டு.


'விடுதலை'யால் பலன் பெறாத ஒரே ஒரு தமிழனைக் கூடக் காட்ட முடியாதல்லவா! இன்றைக் குத் தமிழ்ச் சமுதாயம் பெற்றிருக்கும் ஒவ்வொரு அங்குல வளர்ச்சிக்கும், உரிமை ஈட்டலுக்கும் அதன் பங்களிப்பு மகத்தானதா யிற்றே! அதனால் தான் அந்தச் சொல்லை மிகக் கவனமாகக் குறிப்பிட்டார்.


எடுத்துக்காட்டுக்காக ஒன்றைச் சொல்ல வேண்டு மானால் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனத்தின் தலைவ ராகவும், கல்லூரிக் கல்வி துணை இயக்குநராகவும் இருந்து ஓய்வு பெற்ற பேரா சிரியர் க.ந. சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.  'விடுதலை' நாளிதழுக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடை யாக வழங்குகின்றேன். 'விடுதலை'யைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கருத் துடன் படித்து வருகிறேன். உண்மையான செய்திகளை வெளியிடும் ஒப்பற்ற நாளிதழ் இது ஒன்றே என்பது என் கருத்து.


பொய்ச் செய்திகளைத் தவறாமல் பரப்பி வருவதைக் கொள்கையாகவும், கலையாகவும் கொண்டு, பல நாளிதழ்கள் இயங்கும் இக்காலத்தில் ஆக்கபூர்வமான, தரமான உண்மையான செய்திகளை வெளியிடும் 'விடுதலை' பாராட்டிற்குரியது.


தமிழ் உணர்வும், இனவுணர்வும் கொண்டு இருப்பவர்கள் 'விடுதலை'க்கு நன்றியுடன்  நன்கொடை வழங்கித் தவறாமல் வாங்கிப் படித்தல் வேண்டும். பல லட்சம் பிரதிகள் வெளி வந்து தமிழ் மக்களுடைய அறியாமை இருளைப் போக்கும் பகலவனாக 'விடுதலை' விளங்க வேண்டும் என்பதுஆசை.


பெரியார்மீது நீங்காத பற்றும், பாசமும் உள்ளவர்கள் 'விடுதலை'யில் இடம் பெறும் தந்தை பெரியார் அறிவுரையை ஆழ்ந்து நான்கு முறையாவது படிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என்று குறிப்பிட்டு இருந்ததை இவ்விடத்தில் எடுத்துக் காட்டுவது மிகவும் பொருத்தமாகும்.


கழகத் தோழர்களைப் பற்றிக் கூறும்போது, கழகத் தலைவர் உழவாரப் பணிக்குச் சொந்தக்காரர்கள் என்று குறிப்பிட்டார். உழ வேண்டிய நேரத்தில் உழுது, விதைக்க வேண்டிய நேரத்தில் விதைத்து, களை எடுக்க வேண்டிய காலத்தில் களை எடுத்து, களத்து மேட்டுக்குக் கொண்டு சென்று, வீடு வந்து சேர்க்கும் உழவாரப் பணி செய்வோர்போல 'விடுதலை' பணியாற்றி வரும் உங்களிடம் 'விடுதலை'யின் சிறப்பைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


'விடுதலை'யின் வெற்றிக்கும், விளைச்சலுக்கும் நீங்களே காரணம்.


இதுவோ, கரோனா என்பது ஊரடங்கு காலம் - ஆனால் பெரியார் உணர்வாளர்களின் உணர்வுகளும், எண்ணங் களும் மட்டும் அடங்கவே அடங்காது. சுயமரியாதை உணர் வுக்கு வேலி போட முடியுமா என்ற வினாவை எழுப்பினார்.


'விடுதலை'யின் பணி என்ன! அதன் தனித் தன்மைதான் என்ன? என்ற கேள்விக்கு ஆசிரியர் சொன்ன பதில்:


எத்தனை எத்தனையோ ஆண்டு காலமாக எவற்றை ªல்லாம் மக்கள் நம்பிக் கிடந்தார்களோ, வாழ்ந்தார்களோ அவை எல்லாம் தவறானவை என்று சுட்டிக்காட்டி காரணா காரியத்துடன் மறுத்து சிந்திக்கவைத்த பணியைச் செய்தது விடுதலை.


அச்சிட்ட போது அது வெறும் காகிதம் - மக்களின் கைகளில் 'விடுதலை' வந்து சேரும்போது போர் ஆயுதம் என்று வெகு அழகாகச் சொன்னார் ஆசிரியர்.


'விடுதலை' ஏட்டைத் தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட கஷ்டங்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில் ஒரு பகுதியை எடுத்துக்காட்டினார்.


'விடுதலை' நட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. காலை ஏழரை மணிக்கு 'விடுதலை' அலுவலகத்துக்குச் சென்றால் இரவு 10 மணிக்குத்தான் திரும்புகிறேன். எப்படியும் நடத் தியே தீர வேண்டும் என்ற ரோஷம்தான் தொடர்ந்து  நடத் துவதற்குக் காரணம் என்று தந்தை பெரியார்தம் எழுத்தில் அடங்கியுள்ள அந்த உணர்வை என்னவென்று சொல் லுவது!


நாட்டின் நலமே தனது நலம் என்ற உணர்வின் மேம் பாட்டால் தானே இத்தகைய சொல்லை அவர் பயன்படுத்த முடியும்?


மேலும் எழுதுகிறார் 'விடுதலை'யின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நஷ்டத்தின் அளவும் அதிகரிக்கிறது என்கிறார்.


ஏனிந்த நிலை? எந்தவித விளம்பரங்களும் கிடையாது. இலட்சியத்துக்காக நடத்த வேண்டும் என்றால் இத்தகைய விலையைக் கொடுத்துத்தானே தீர வேண்டும் என்பது தந்தை பெரியாரின் நிலைப்பாடு!


மக்களில் பெரும்பாலோர் விரும்பும் ஜோதிடம், ராசிப் பலன், சினிமா செய்திகள் 'விடுதலை'யில் கிடைக்காதே!


நமக்கு எப்படிப்பட்ட 'விடுதலை' வேண்டும்? கேட்கிறார் பெரியார் இந்தக் கேள்வியை. "அடிமை விடுதலையா, சுதந் திரமான விடுதலையா?" என்ற பொறி தட்டும் வினாவை விடுக்கிறார். கொள்கையை விட்டுக் கொடுத்து அடிமை விடுதலையாக ஒருபோதும் நடக்காது என்று தந்தை பெரியார் எழுதியதை கழகத் தலைவர் எடுத்துச் சொன்ன போது கேட்டோர் உடல் அணுக்கள் எல்லாம் புல்லரித்தன.


'விடுதலை' க(ந)டந்து வந்த பாதையை ஆசிரியர் விவரித்தார். எத்தனை எத்தனை ஜாமின் தொகைக் கோரல், ஏடுகள் பறி முதல் நெருக்கடி காலங்கள்  நேற்றும் இருந்தது - நாளையும் நடக்கும். நாளை நாங்கள் இல்லாமல் போகலாம்; ஆனால் 'விடுதலை' மட்டும் இல்லாமல் போகக் கூடாது - இருந்தே தீர வேண்டிய போராயுதம் அது - ஏனெனில், அதன் தேவை அவசியம் இருக்கிறது.


இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கு மிடையும் மற்றொரு முக்கியமான தொல்லை குறித்து தந்தை பெரியார் கூறியுள்ளதை ஆசிரியர்அவர்கள் எடுத்துச் சொன்னபொழுது 'அடப் பாவிகளா?' நீங்களுமா இப்படி?' என்று தான் கேட்க நேர்ந்தது.


தந்தை பெரியார் எழுதுகிறார் "இதற்கிடையில் என் தொண்டுக்கு ஆதரவாக இருந்து பக்குவமும் பெற்று விளம் பரமும் பெற்று பொது மக்களின் மதிப்புக்கும் ஆளாகிய நிலையில், எதிரிகளுக்குக் கையாளாகி, எதிரிகளுக்குப் பல வகைகளிலும் பயன்படுபவர்களாகவும் ஆகி எனக்கும், எனது தொண்டுக்கும் முட்டுக்கட்டை போட வேண்டிய வர்கள் ஆகி விட்டார்கள். கூடவே இருந்தவர்களே, அலுவ லகத்தை இழுத்து மூடவேண்டும்; சீல் வைக்க வேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு.


இந்த நிலையில் யாராக இருந்தாலும் என்ன தோன்றும்? நமக்கு ஏன் இந்த வீண்வேலை? கூட இருப்பவர்களே குழி பறிக்கிறார்களே -  என்ற மன உளைச்சலும் சலிப்பும்தானே ஏற்படும்? ஆனால் அய்யாவிடம் அதுதான் இல்லை - சலிப்பு அடையவில்லை; ஆம் அதனால்தான் அவர் பெரியார்!


விழிகள் மூடும் வரை  மக்களுக்கு விழிப்புணர்வு  விழிகளைத் திறக்க செய்தே தீர வேண்டும் என்பதிலே தந்தை பெரியாருக்கு இருந்த உறுதிதான், அக்கறைதான் இயக்கத்தையும் 'விடுதலை'யையும் நடத்துவதற்கான ஆற்றலைத் தந்தது.


பிரகலாதன்களும், விபீடணர்களும் நம்மினத்தில் தொடர்வதற்குக் காரணமே நமது இனத்தின் பிறவிக் குணம் தான் என்று நொந்து கொண்டு தூசுகளைத் தட்டி விட்டதுபோல தன் பயணத்தைத் தொடர்ந்தார் பகுத்தறிவுப் பகலவன்.


இவை எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற பாடங்கள்.


தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் என்மீது வைத்த அந்த நம்பிக்கைக்கு நாணயமாக  ஒழுக்கமாக பணியாற்றிட உறுதி கொண்டு, அதே பணியாக இருந்து வருகிறேன். உங்களுடைய ஒத்துழைப்பில்தான் எல்லா வெற்றிகளும் அடங்கியிருக்கின்றன நன்றி  வணக்கம் என்று கூறி முடித்தார் கழகத் தலைவர்.


வினாக்களும் விடைகளும்


காணொலியில் கலந்து கொண்ட தோழர்கள் பல்வேறு வினாக்களைத் தொடுத்தனர். அத்தனை வினாக்களுக்கும் பொறுமையாகப் பதில் அளித்தார் தமிழர்தலைவர்.


'விடுதலை'யில் மகளிருக்கென்று தனிப் பகுதி ஒதுக்கப்படுமா? என்று சிகாகோ டாக்டர் சரோஜா அவர்கள் கேட்ட கேள்விக்குத் தாராளமாக; இயக்கக் கொள்கையில் பெண்ணுரிமை என்பது முக்கிய அங்கமாயிற்றே என்றார். மகளிர் தொடர்பாக எழுதி அனுப்புங்கள் - பரிசீலிக்கிறோம் என்று பதிலளித்தார்.


வேலை வாய்ப்பு குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ஆசிரியர் அவர்கள், இது மிகவும் முக்கியமான பிரச்சினை - இப்பொழுது வெளி மாநிலத்தவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று விட்ட நிலையில்,  வேலை வாய்ப்பில்லாது தவிக்கும் நம் இனத்து இளைஞர்கள் அந்த இடங்களை நிரப்பலாம், கிடைத்த பணியில் ஈடுபட்டு பயிற்சி எடுத்து முன்னேறலாம் என்று குறிப்பிட்டார்.


தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் வெளி மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியமான கால கட்டம் இது. ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிடலாமே என்ற கேள்விக்கு  'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' ஆங்கில இதழைப் பயன்படுத்திக் கொள்ளலாம், மின் இதழாக (ஈ-பேப்பர்) இந்தியிலும் பரப்பலாம் என்றார்.


மகளிர்  அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கேட்ட கேள்விக்கு 'விடுதலை' அறிக்கைகளை, முக்கிய தலையங் கங்களை நூலாக வெளியிடுவது குறித்துப் பரிசீலிக்கலாம்; ஏற்கெனவே சில தொகுப்புகளை அவ்வாறு கொண்டு வந்துள்ளதையும் தெரிவித்தார்.


'விளையாட்டு' என்ற தொடர்பு மூலம் ஆர்.எஸ்.எஸில் பள்ளிப் பருவத்தில் சேர்ந்ததைத் தெரிவித்த ஒசூர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் சு. வனவேந்தன், பிற்காலத்தில் தந்தை பெரியார் கருத்துகளை உள் வாங்கி கழகத்திற்கு வந்ததாக தன் அனுபவத்தைக் கூறினார்.


விடுதலையின் முதல் சாதனை எது என்ற பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் கேள்விக்கு - கல்வி, வேலை வாய்ப்பில் நம் மக்களுக்கான சமூகநீதி,  குலக்கல்வி ஒழிப்பு, வருமான வரம்பு ஆணை ஒழிப்பு, மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்படுத்த வைத்தது. 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுப் பாதுகாப்பு - இவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம் என்றார்.


'விடுதலை'யில் எழுதிய முதல் தலையங்கத்தை பற்றி பொன்னேரி செல்வி கேட்டபோது தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டைப் பற்றி எழுதினேன் - நான் பொருளாதார மாணவனாக இருந்ததால் அது எனக்கு எளிதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.


தாங்கள் எழுதியதற்காக ஏதாவது மிரட்டல் வந்த துண்டா? அப்படியெனில் அது என்ன என்ற கேள்வியையும் கேட்டார்.


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இராமச்சந்திர அய்யர் வயதைத் திருத்தி தலைமை நீதிபதியாகத் தொடர்ந்தது குறித்து 'விடுதலை'யில் வெளியே கொண்டு வந்த நிலையில், அவர் பதவியை விட்டு ராஜினாமா செய்யும்படி நேர்ந்தது. அப்பொழுது பல உருட்டல் மிரட்டல்கள் வந்ததுண்டு.


என்ன விளைவு ஏற்படும் என்று நினைத்துக் கொண்டு எதையும் எழுதிட முடியாது என்றும் குறிப்பிட்டார். (இதுதான் எழுத்துக்கும்  கருத்துக்கும் உள்ள முறையான இலக்கணம்)


தஞ்சை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வழக் குரைஞர் சி. அமர்சிங் அவர்கள் இயக்கத்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஏற்பட்ட சோதனைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு விரிவான விடை தந்தார் ஆசிரியர்.


தந்தை பெரியார் குறிப்பிட்டிருந்ததை ஏற்கெனவே இங்கு நான் தெரிவித்ததைப் போல, கூட இருந்தே தொல்லை கொடுத்தவர்கள், துரோகம் செய்தவர்கள்பற்றி ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டபோது அந்தப் பட்டியலில் குத்தூசி குருசாமி, தி.பொ. வேதாசலம் ஆகியோரும் அடங்குவர் என்றும் வெளிப்படுத்தினார்.


பெரியார் தொலைக்காட்சி குறித்த கேள்விக்கு பெரியார் வலைக்காட்சியையே மேலும் விரிவாக்கி அதன் பலனை உலகெங்கும் கொண்டு செல்லுவோம் என்று கூறினார்.


இணையத்தின் மூலம் 'விடுதலை' வாசகர் எண்ணிக்கை பெருகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவரும் இதில் கவனம் செலுத்தி இலட்சக்கணக்கில் வாசகர்களை உருவாக்க வேண்டும் என்று முக்கியமாகக் கழகத் தலைவர் கேட்டுக் கொண்டார்.


சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள்,


"1963ஆம் ஆண்டில் சிந்தாதிரிப்பேட்டையில் 'விடுதலை'  அலுவலகத்தில் முதன் முதலாக ஆசிரியரைப் பார்த்தேன். இந்த இடத்திலிருந்தா இப்படிப்பட்ட ஒரு பூகம்பம் வெடித்தது என்று ஆச்சரியப்பட்டேன்  - படுகிறேன்" என்றார்.


நேரலையில்  பங்கேற்றோர்


கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் பொன்னேரி வி.பன்னீர் செல்வம், ஊமை.ஜெயராமன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மகளிரணி அமைப் பாளர் குடியாத்தம் தேன்மொழி, மாநில திராவிடர் தொழிலாளர் கழகச் செயலாளர் திருச்சி மு.சேகர், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், தேனி மாவட்டத் தலைவர் போடி ரெகுநாகநாதன், பேபிசாந்தா, விழுப்புரம் மண்டலச் செயலாளர் குழ.செல்வராசு, விருத்தாச்சலம் இளங் கோவன், தாம்பரம் ப.முத்தையன்,  ஆடிட்டர் இராமச் சந்திரன், முனைவர் நல்.இராமச்சந்திரன், முனைவர் ச.தேவதாஸ், பேராசிரியர் நம்.சீனிவாசன், வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன், தஞ்சை மண்டலச் செயலாளர் குடந்தை க.குருசாமி, இராணி குருசாமி, மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் -அ.கலைச்செல்வி, செயலாளர் வழக்குரைஞர் அ.அருண கிரி,  விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, ம.தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் கல்வியாளர் நவபாரத் நாராயண ராஜா, ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், திருத்துறைப்பூண்டி மாவட்டச் செய லாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, ராஜபாளையம் பெரியார் குமார், திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மலேசியா கணேசன், திருச்சி அம்பிகா, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தி.ப.பெரியாரடியான், தஞ்சை விடுதலை வாசகர் வட்டத் தலைவர் குணசேகரன், நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.பூபேஷ்குப்தா, திருவாரூர் மண்டலத்தலைவர் ஓவியர் தி.சங்கர், திரு வாரூர் மாவட்ட அமைப்பாளர் சாமிநாதன், அரக் கோணம் கு.சோமசுந்தரம், உரத்தநாடு அ.உத்திராபதி, பெரியார்மாணாக்கன், பொன்னேரி வினோத்-செல்வி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, பேராசிரியர் செந்தமிழ்குமார், பகுத்தறி வாளர் கழக மாநில துணைத்தலைவர்கள் தரும.வீரமணி, அண்ணா.சரவணன், கோபு.பழனிவேல், திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.அருண்காந்தி, டாக்டர் பண்பொளி,  சாமிநாதன், சேலம் மண்டலத் தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியன், வேலூர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சிவகங்கை மண்டல மேனாள் செயலாளர் சாமி.சமதர்மம்,  பழ.பிரபு, வி.சி.வில்வம், டில்லி லெனின், பழனி மாரிமுத்து, வெற்றிச்செல்வி பூங்குன்றன், வடலூர் கலைச்செல்வி, தஞ்சை இரா.பெரியார்செல்வன், திராவிடச் செல்வன், கரூர் தினேஷ், சென்னை தினேஷ், கலைமணி, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு, தரங்கம்பாடி பன்னீர்செல்வம், வா.மு.சே.திருவள்ளுவர், திருச்சி யாழினி, சண்முகவேல் பிரபாகரன், குடவாசல் ரவி, பழனி உருத்திரன், மா.பொடையூர் வெங்கடராசா, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, செய்யாறு நகரச் செயலாளர் காமராஜ், உரத்தநாடு அன்பரசன், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், நன்னிலன் முருகேசன், குடந்தை மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்மணி, அரக்கோணம் செல்வம், முரளிகிருஷ்ணன் சின்னதுரை, சென்னை ஜனார்த்தனன், பர்வீன் முத்துவேல், இல.கிருஷ்ணமூர்த்தி, போச்சம்பள்ளி ஞானசேகரன், ராஜசேகரன், திருவையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், சங்கர் ராமசாமி, தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், மதுரை செல்லத்துரை, மதுரை மாவட்ட இளைஞரணி செய லாளர் சிவா, தொண்டறம், லால்குடி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இணைப்பில் இடம்பெற பலரும் முயற்சித்துக் கொண்டே இருந்தனர். கழகப் பொருளாளர் வீ.கும ரேசன் போன்ற பல தோழர்கள் நேரடியாக யூடியூப் இணையதளத்தின் நேரலையிலேயே பார்வை யாளர்களாகப் பங்கேற்றிருந்தனர்.


அயல்நாட்களிலிருந்து..


அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் சோம.இளங் கோவன், சரோஜா இளங்கோவன், முனைவர் இலக் குவன் தமிழ், ஜெர்மனியிலிருந்து  உல்ரிக் நிக்லஸ், பிரான்சிலிருந்து தங்க.ரமேஷ் குமார், ஈழத்தமிழர் பிரான்ஸ் போஸ்கோ, துபாயிலிருந்து துரை.ராயப்பன், மலேசியா கோவிந்தசாமி  உள்ளிட்ட தோழர்கள் பலர் பங்கேற்றனர்.


நிறைவாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நன்றி கூறினார். மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரையாற்றினார்.


 


 


No comments:

Post a Comment